அழுக்கு மனநிலையை வெள்ளாவி வைத்து வெளுக்கும் ‘நூறு சாமி’

குடும்பங்கள் கொண்டாட வேண்டிய படைப்பு
அழுக்கு மனநிலையை வெள்ளாவி வைத்து வெளுக்கும் ‘நூறு சாமி’
Updated on
3 min read

‘சொல்லாமலே’, ‘ரோஜா கூட்டம்’, ‘பூ’, ‘பிச்சைக்காரன்’ என்று வரிசையாக பல தரமான படங்களைக் கொடுத்த சசியின் இயக்கத்தில் அண்மையில் வெளிவந்திருக்கும் திரைப்படம் ‘நூறு சாமி’. விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் தயாரித்துள்ள இப்படத்தில் அவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

நமது சமூகத்தில், மனைவியை இழந்த ஓர் ஆண் ‘பொண்டாட்டி செத்தா புது மாப்பிள்ளை’ என்று, அவனுக்கு எத்தனைக் குழந்தைகள் இருந்தாலும், அவர்கள் எவ்வளவு வளர்ந்தவர்களாக இருந்தாலும், மறுமணம் செய்துகொள்வது வெகு இயல்பாக இருக்கிறது. அதுவே பெண்ணுக்கு மறுமணம் செய்வது அவ்வளவு சாதாரண விஷயம் அல்ல; அதுவும் அவளுக்கு குழந்தைகள் இருந்தால், அந்தக் குழந்தைகள் எவ்வளவு சிறியவர்களாக இருந்தாலும், மறுமணம் சாத்தியமே இல்லை என்ற சூழலே இங்கே நிலவுகிறது.

இப்படிப்பட்ட ஒரு சமூகத்தில் கணவனை இழந்த ஏழைப் பெண், திருட்டுத்தனமாக தனக்குக் கருணை காட்ட வரும் ஆண்களுக்கு மத்தியில் போராடியபடியே பிள்ளைகளை கல்லூரி விடுதியில் சேர்த்த பிறகு, தனக்கென ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொள்ள ஆசைப்படுகிறாள். அது உண்மையா என்று உறுதிப்படுத்திக் கொள்ள ஓர் ஆசிரியர் விசாரிக்கும் காட்சி, கணவனை இழந்த பெண்களை குடும்பமும் சமூகமும் எவ்வளவு மோசமான நிலையில் நடத்துகின்றன என்பதை தோலுரித்துக் காட்டுகிறது.

“என் புருஷனை கொலை பண்ணியிருந்தா கூட பத்து பன்னெண்டு வருஷம்தான் தண்டனை; ஆனா அவரா செத்துப் போனதுக்கு எனக்கு ஏன் சார் ஆயுசு முழுக்க தண்டனை? ஒரு செருப்பு அறுந்து போனா இன்னொரு செருப்புக்கும் தண்டனை! நட்ட நடு ரோட்டுல கிடக்கிறதுக்கு நான் என்ன செருப்பா சார்? நானும் ஒரு பொண்ணு தானே சார்? எனக்கும் எல்லார மாதிரியும் இருக்கணும் சார்!” என்று அவள் பேசப் பேச, ஸ்தம்பித்துப் போய் பார்க்கும் ஆசிரியரிடம்,

“ஏன் சார் இப்ப என்னைப் பாத்தா கேவலமா இருக்கா?” என்று அவள் கேட்க, “சேச்சே, என்னையெல்லாம் மறுமணம் பண்ணிக்கப் போறியான்னு யாராவது கேட்டா ஆமாண்டான்னு சொல்லிடுவேன். ஆனா அதுக்கே நீங்க இவ்ளோ பேச வேண்டியிருக்கேன்னு நினைச்சேன்” என்று அவர் பேசும் பதில், ஆண்களை கொஞ்சமேனும் யோசிக்கச் செய்யும்.

தாங்கள் இவ்வளவு வளர்ந்த நிலையில், அம்மா மறுமணம் செய்து கொள்வதா என்று அதிர்ந்து அவளை அவமானப்படுத்திவிட்டு, அந்தக் கவலையிலேயே படிக்காமல் மது, புகை என்று தடம் மாறும் மகனிடம் “நான் மறுமணம் செஞ்சுக்க மாட்டேன், ஒழுங்கா படி” என்று படிக்க வைத்து அவனை சுயமாக சம்பாதிக்கும் நிலைக்கு ஆளாக்கிவிடுகிறாள்.

அதே மகன் சில ஆண்டுகளில் தாயின் கஷ்டங்களைப் புரிந்துகொண்டு அவருக்கு இன்னொரு திருமணம் செய்து வைக்கலாமா என்று, கன்னியாஸ்திரியாக வரும் ஆசிரியை நிஜோமோல் ஜோஸிடம் ஆலோசனை கேட்கும் கேட்கும் காட்சி:

“வாழறதுக்கு அடிப்படைத் தேவை சாப்பாடு, தூக்கம், தனக்கொரு துணையை தேடிக்கிறது. முதல் ரெண்டும் இல்லேன்னா செத்தே போயிடுவோம். மூணாவது இல்லன்னா வாழலாம்... ஆனா வாழும் போதே, அது கொன்னுகிட்டே இருக்கும்! எதிர்ல இருக்கிறவன் சாப்பிட்டானா, அவனுக்கு பசிக்குதான்னு யோசிச்சுக்கிட்டே இருக்காம, கேட்டுதான் பாரேன் உன் அம்மாதானே?” என்று அவள் சொல்லும் பதில், மனசாட்சி உள்ள எவரையும் உலுக்கும். தன் வீட்டில் உறவில் தனியாக உள்ள பெண்களை, அவர்களின் வேதனையை யோசிக்க வைக்கும்.

மறுமணம் செய்துகொள்ளும்படி சொல்லும்போது, “இந்த வயசுல எனக்கு கல்யாணம் பண்ணா உனக்கு யாருடா பொண்ணு தருவா?” என்று மறுக்கும் தாய், “உன் பெரியம்மாவை மூணு பொட்டப் புள்ளைங்களோட சேர்த்து அனுப்பிடறேன், அவளுக்கும் கல்யாணம் பண்ணி வை” என்று கழுத்தைப் பிடித்து வெளியில் தள்ளும் பெரியப்பா, குடும்ப மானம் போய்விட்டதாக கொல்லத் துணியும் தாய் மாமன், “இப்படி வெட்கம் கெட்ட ஒருத்தி உலகத்துல இருப்பாளா?” என்று புறம் பேசும் ஊர்ப் பெண்கள், ஊருக்கே கெட்ட பெயர் என்று எல்லோரையும் ஒன்று திரட்டும் பெரிய மனிதர்... இப்படி எல்லா எதிர்ப்புகளையும் தாண்டி அந்த இளைஞன் தன் தாயின் திருமணத்தை நடத்தினானா, இல்லையா என்பதுதான் படத்தின் முடிவு.

ஆண்டாண்டு காலமாக தமிழ் சினிமா பெரும்பாலும் பெண்களை சமூகத்தின் பொதுப்புத்தியோடுதான் அணுகி வந்திருக்கின்றன. இன்னும் சொல்லப் போனால் ஆபாசப் பாடல், காட்சிகள், வசனங்கள் என்று அவளை ஒரு போகப் பொருளாகவே காட்டி வந்திருக்கின்றன. ஆண்களை கோழைகள் என்று சொல்வதற்கு, பொட்டை என்றோ, புடவை கட்டிக்கோ, பொட்டு வச்சுக்கோ, வளையல் போட்டுக்கோ என்றோ வசனங்களாகவும் பாடலாகவும் வைத்து, கொஞ்சமும் குற்ற உணர்வின்றி பெண்களை இழிவுபடுத்தும் போக்கு காலம் காலமாக தமிழ் சினிமாவில் கட்டமைக்கப்பட்டு வந்தது.

அந்தக் கட்டமைப்பை முதலில் உடைத்தவரும் இதே சசி தான். “பொம்பள சட்டைய ஆம்பளை போட்டா அசிங்கமாடா? நாங்கல்லாம் ஆம்பள சட்டைய போடுறப்ப கெத்தா தாண்டா நினைக்கிறோம்! நீங்க ஏண்டா கேவலமா நினைக்கிறீங்க?” என்று ஒரு தாயை தனது போலீஸ்கார மகனிடம் கேட்பது போல் ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தில் ஒரு காட்சி அமைத்திருப்பார்.

கணவன் இல்லாத ஒரு பெண் இன்றளவும் இந்தச் சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ எவ்வளவு போராட வேண்டி இருக்கிறது என்பதை போகிற போக்கில் சில காட்சிகளில் சொன்ன படங்கள் பல உண்டு. ஆனால், கணவனை இழந்த பெண்ணின் வாழ்வை மட்டுமே மையக் கருவாக வைத்து, அவளை உறவுகளும் சமூகமும் எப்படி நடத்த வேண்டும் என்று முகத்தில் அறைந்தாற் போல் சொல்லியிருக்கும் ஒரு படம்தான் ‘நூறு சாமி’.

கலாசாரம், சாதி, குடும்ப கவுரவம் என்றெல்லாம் காலம் காலமாக பெண்கள் மீது அழுத்திக் கொண்டிருக்கும் சமூகச் சுமைகளையும், அப்பன் அண்ணன் புருஷன் மகன் என்று வாழ்நாள் முழுவதும் ஏதாவது ஒரு வகையில் ஆண்களுக்கு கட்டுப்பட்டே இருக்க வேண்டிய குடும்ப அமைப்பையும் சற்றே அசைத்துப் பார்த்திருக்கிறது இந்த ‘நூறு சாமி’.

இடைவேளைக்குப் பிறகே விஜய் ஆண்டனி கதாபாத்திரம் வரும். வாழ்க்கைப் பாதையில் கொட்டிக் கிடக்கும் கற்களையும் முட்களையும் பார்க்காமல், அதனிடையே உதிர்ந்து கிடக்கும் பூக்களை பார்த்து ரசிக்கச் சொல்லி நம் மனதை புதிதாய் வார்த்தெடுக்கிறது. ஓர் ஆண் எப்படிப்பட்டவனாக இருக்க வேண்டும், பெண்களை எப்படி மதித்து நடத்த வேண்டும் என்பதையும் விஜய் ஆண்டனி கதாபாத்திரம் அவ்வளவு அழகாக எடுத்துரைக்கிறது.

மொத்தத்தில், அழுக்கேறிப் போன மக்களின் மனநிலையை வெள்ளாவி வைத்து வெளுக்கும் ‘நூறு சாமி’ வெறும் கற்பனைக் கதை அல்ல. 2017-ஆம் ஆண்டு கள்ளக்குறிச்சி அடுத்த வளையாம்பட்டு கிராமத்தில் நடந்த உண்மைச் சம்பவம் என்பதை, உண்மையான பாத்திரங்களை வைத்தே முடித்திருக்கிறார்கள்.

படம் முழுவதும் ஆங்காங்கே நகைச்சுவைக் காட்சிகள் இருந்தாலும், படத்தின் முடிவில் வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் காட்சிகளை வைத்திருக்கிறார்கள். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிப் பார்க்கக் கூடிய வகையில் ஒரு பக்கா கமர்ஷியல் படமாகவும் எடுத்திருக்கும் சசி, அதில் சமூக மாற்றத்துக்கான பெரிய உரையாடலையும் தொடங்கி வைத்திருக்கிறார். இதுபோன்ற படங்கள் குடும்பத்தோடு திரையரங்கில் பார்த்துக் கொண்டாடி வரவேற்கப்பட வேண்டியவை.

- வாசுகி லட்சுமணன்

அழுக்கு மனநிலையை வெள்ளாவி வைத்து வெளுக்கும் ‘நூறு சாமி’
Niharika - in the mist: இருளிச்சைகளின் சுடரி தீபா | திரை தேவதைகள் 24

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in