உச்சக்கட்ட ஒளி: நண்பகல் நேரத்து சவால் | ஒளி என்பது வெளிச்சமல்ல 34

‘தண்​ணீர் தண்​ணீர்’

‘தண்​ணீர் தண்​ணீர்’

Updated on
2 min read

பொது​வாக ஒளிப்​ப​தி​வாளர்​கள் அதி​காலை அல்​லது மாலை நேரத்து மென்​மை​யான ஒளியையே விரும்​பு​வார்​கள். ஆனால், நண்பகல் 12 மணி முதல் 2 மணி வரையி​லான அந்த ‘டாப் லைட்’, ஒரு முகத்​தின் அழகைச் சிதைக்​கும் வல்​லமை கொண்​டது என்று கருதப்​படு​கிறது.

இருப்​பினும், இந்​தி​யத் திரை​யுல​கின் ஆகச்​சிறந்த ஒளிப்​ப​தி​வாளர்​கள் இந்​தக் கடுமை​யான ஒளியையே ஒரு கதை​யின் ஆன்​மாவை விவரிக்​கப் பயன்​படுத்​தி​யுள்​ளனர்.

டாப் லைட்​டின் தன்மை மற்​றும் சவால்​கள்

சூரியன் சரி​யாகத் தலைக்கு மேலே இருக்​கும்​போது, அது உரு​வாக்​கும் ஒளியமைப்பு மிகக் கடுமை​யானது. இது முகத்​தில் சில விரும்​பத்​த​காத விளைவு​களை ஏற்​படுத்​துகிறது.

ரக்​கூன் கண்​கள் (Raccoon Eyes): நெற்றி மற்​றும் புருவ எலும்​பு​கள் ஒளியைத் தடுத்​து, கண் குழிகளுக்​குள் அடர் கருப்பு நிழலை உரு​வாக்​கும்.

மூக்​கின் நிழல் (Nose Shadow): மூக்​கின் நிழல் உதட்​டின் மீது மீசை போல விழுந்து முகத்​தின் மென்​மை​யைச் சிதைக்​கும்.

அதிக கான்ட்​ராஸ்ட்: ஒளி​யுள்ள இடங்​கள் மிக வெண்​மை​யாக​வும், நிழல் உள்ள இடங்​கள் மிகக் கருப்​பாக​வும் தெரிவ​தால் முகத்​தின் உணர்ச்​சிகள் சிதைந்து போகக்​கூடும்.

இந்​திய ஒளிப்​ப​தி​வாளர்​கள் டாப் லைட்டை தவிர்ப்​பது ஏன்?

இந்​திய ஒளிப்​ப​தி​வாளர்​கள் நண்​பகல் நேரத்​தைப் படப்​பிடிப்​புக்​குத் தவிர்க்க விரும்​புவதற்​குப் பின்​னால் ‘சன் ஆர்க்’ (Sun Arc) எனும் புவி​யியல் காரணம் உண்​டு.

இந்​தியா (Tropical Sun Arc)

இந்​தியா பூமத்​திய ரேகைக்கு அரு​கில் இருப்​ப​தால், இங்கு சூரியனின் பாதை மிக உயர​மாக இருக்​கும். கோடைக்​காலங்​களில் சூரியன் சரி​யாக 90 டிகிரி​யில் தலைக்கு மேலே வரு​வ​தால், நிழல்​கள் மிகக் குறுகிய​தாக​வும், ஒளி மிகக் கடுமை​யான​தாக​வும் இருக்​கும்.

மேற்​கத்​திய நாடு​கள் (Winter Light)

லண்​டன் அல்​லது நியூ​யார்க் போன்ற நாடு​களில் குளிர் காலங்​களில் சூரியன் அடி​வானத்​துக்கு அரு​கிலேயே பயணிக்​கும். அங்கே நண்​பகலில் கூட சூரியன் 45 டிகிரி கோணத்​திலேயே இருப்​ப​தால், அவர்​களுக்கு இயற்​கை​யாகவே அழகான ‘சைட் லைட்’ (Side Light) கிடைக்​கும்.

‘லகான்’ (Lagaan): கடுமை​யான ஒளியை மென்​மை​யாக்​கும் கலை

அமீர் கானின் ‘லகான்’ திரைப்​படத்​தில், வறட்​சி​யை​யும் கடுமை​யான வெயிலை​யும் காட்ட வேண்​டிய அவசி​யம் இருந்​தது. ஆனால், அதே நேரம் கதா​பாத்​திரங்​களின் முகம் தெளி​வாகத் தெரிய வேண்​டும். இதற்கு ஒளிப்​ப​தி​வாளர் அனில் மேத்தா ஒரு பிரம்​மாண்​ட​மான நுட்​பத்​தைக் கையாண்​டார்.

ராட்​சதத் துணி​கள் (Huge Diffusion): பரந்து விரிந்த குஜ​ராத் மைதானங்​களில், நண்​பகல் வெயி​லின் கடுமை​யைக் குறைக்க நூற்​றுக்​கணக்​கான மீட்​டர் நீள​முள்ள வெள்​ளைத் துணி​களை (Silk/Diffusion cloths) ராட்சத அமைப்​பு​கள் மூலம் அந்த மைதானம் முழு​வதற்​கும் மேலே கட்​டி​னார்​கள்.

விளைவு: மேலிருந்து வரும் அந்த ‘டாப் லைட்’ கடுமை​யான நிழல்​களை உரு​வாக்​காமல், மென்​மை​யான ஒளி​யாக (Soft Light) நடிகர்​களின் முகங்​களில் விழுந்​தது. இது வெயி​லின் பிர​காசத்​தைக் குறைத்​து, கதா​பாத்​திரங்​களின் உணர்ச்​சிகளைத் துல்​லிய​மாகப் படம்​பிடிக்க உதவியது.

‘தண்​ணீர் தண்​ணீர்’: வறட்​சி​யின் அழகியல்

இயக்​குநர் கே.​பாலசந்​தர் மற்​றும் ஒளிப்​ப​தி​வாளர் பி.எஸ்​.லோக்​நாத் கூட்​ட​ணி​யில் உரு​வான ‘தண்​ணீர் தண்​ணீர்’, உச்​சக்கட்ட ஒளியை எப்​படிக் கதை சொல்​லப் பயன்​படுத்​தலாம் என்​ப​தற்கு உலகத்​தரம் வாய்ந்த பாடம்.

ஒளி​யின் கடுமை​யும் திரை​யில் விரி​யும் கதை சொல்​லும் கலை​யும்

தண்​ணீர் தட்​டுப்​பாடும் ஒளி​யும்: தண்​ணீர் தட்​டுப்​பாட்​டை​யும், சுட்​டெரிக்​கும் வெயிலை​யும் ஒரு செய்​தி​யாகச் சொல்​லாமல் காட்​சிகளாகச் செதுக்​கி​னார் ஒளிப்​ப​தி​வாளர் பி.எஸ்​.லோக்​நாத். அந்த உச்சி வெயி​லின் ‘டாப் லைட்’, நிலத்​தின் வெடிப்​பு​களை​யும், மக்​களின் வறண்ட முகங்​களை​யும் அப்​பட்​ட​மாகக் காட்​டியது.

நாடகத்​தன்மை (Visual Drama): நிழல்​கள் மிகக் குறை​வாக​வும், ஒளி மிகத் தீவிர​மாக​வும் இருந்த அந்​தச் சூழல், ஒரு கிராமத்​தின் போராட்​டத்​தை​யும் தாகத்​தை​யும் பார்​வை​யாளரின் கண்​களுக்​குள் நேரடி​யாகக் கடத்​தி​ன. பி.எஸ். லோக்​நாத்​தின் அந்​தத் துணிச்​சலான ஒளிப்​ப​திவு, உச்​சக்​கட்ட ஒளியை​யும் ஒரு ‘ஸ்​டன்​னிங் விஷுவல்’ ஆக மாற்ற முடி​யும் என்​பதை நிரூபித்​தது.

ராஜீவ் மேனன் மற்​றும் ‘பம்​பாய்’ - நகரத்​தின் இடுக்​கு​களில் ஒளி

மும்பை போன்ற நெரிசலான மாநகரங்​களில், உயர​மான கட்​டிடங்​களுக்கு இடையே இருக்​கும் குறுகிய வீதி​களில் டாப் லைட் முற்​றி​லும் வேறு​பட்​டது. ஒளிப்​ப​தி​வாளர் ராஜீவ் மேனன், ‘பம்​பாய்’ படத்​தில் அந்த உச்சி வெயிலை ஒரு ‘ஹேர் கிளோ’ (Hair Glow) ஆக மாற்​றி​னார்.

கட்​டிடங்​களின் உயரம்: கட்​டிடங்​கள் உயர​மாக இருக்​கும்​போது, டாப் லைட் என்​பது ஒரு ‘ஸ்​பாட் லைட்’ போலச் செயல்​படும்.

விளைவு: மேலிருந்து வரும் அந்த ஒளி கதா​பாத்​திரங்​களின் தலை​முடி மற்​றும் தோள்​களில் பட்டு பிர​காச​மான விளிம்பை (Rim Light) உரு​வாக்​கும். இது கதா​பாத்​திரத்​தைப் பின்​னணியிலிருந்து பிரித்​துக் காட்டி (Separation from Background), ஓர் ஆழமான பின்​னணி​யைக் (Deeper Background) காட்​சிக்கு வழங்​கியது.

முடி​வில் இருளும் ஒளி​யும்

ஒளிப்​ப​தி​வில் ‘டாப் லைட்’ என்​பது இருதலைக் கொள்ளி எறும்பு போன்​றது. அது ஒரு முகத்​தைச் சிதைக்​க​வும் செய்​யும், அதே முகம் மர்​ம​மான அதி​காரத்​தையோ அல்​லது ஒரு கிராமத்​தின் வறட்​சி​யையோ சுமந்து நிற்​க​வும் உதவும்.

அதி​காலைப் பனிமூட்​டத்​தில் அசோக்​கு​மார் செய்த மாயம் ஒரு வகை என்​றால், ‘லகான்’ படத்​தில் அனில் மேத்தா அந்த ஒளியைக் கட்​டுப்​படுத்​திய விதம் மற்​றொரு வகை. பி.எஸ்​.லோக்​நாத் வறட்​சி​யைச் சொல்​லப் பயன்​படுத்​திய அந்த உச்சி வெயிலும், ராஜீவ் மேனன் மும்​பை​யின் கட்​டிடங்​களுக்கு இடையே பயன்​படுத்​திய ஹேர் கிளோ அழகியலும் நமக்​குக் கற்​றுத் தரும் பாடம் ஒன்​றே.

“ஒளி எங்​கிருந்து வரு​கிறது என்​பது முக்​கியமல்ல; அதை கதை சொல்​லலில் எப்​படிப் பயன்​படுத்​துகிறீர்​கள் என்​பதே கலை.” இயற்​கை​யின்​ கடுமை​யான ஒளியை​யும்​ ஒரு கவித்​து​வ​மான கரு​வி​யாக மாற்​று​பவனே உண்​மை​யான கலைஞன்.

(புதன்தோறும் ஒளிகாட்டுவோம்)

- cjrdop@gmail.com

<div class="paragraphs"><p>‘தண்​ணீர் தண்​ணீர்’ </p></div>
மங்கும் ஒளியின் மாயம்: ஒளியின் விடைபெறல் | ஒளி என்பது வெளிச்சமல்ல 33

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in