

முகேன் ராவ், ப்ரீத்தி அஸ்ராணி, தன்யா ஹோப், நிதின் சத்யா உள்பட பலர் நடித்துள்ள படம், ‘நிறம்’. பலராம் கிருஷ்ணா இயக்கயுள்ள இப்படத்துக்கு டி.இமான் இசை அமைத்துள்ளார். உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட இப்படத்துக்கு சான்டோனியோ டெர்சியோ ஒளிப்பதிவு செய்துள்ளார். கே.பிந்து மாதவி தயாரித்துள்ள இப்படத்தின் இணைத் தயாரிப்பாளராக பி.ராஜேஷ் பணியாற்றியுள்ளார்.
இந்தப் படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இயக்குநர் பலராம் கிருஷ்ணா கூறும்போது, ‘‘ ‘நிறம்’ என்பது சாதாரண தலைப்பு அல்ல. ஒவ்வொரு மனிதனின் மனநிலையும், குணமும், சூழ்நிலைக்கு ஏற்ப மாறிக்கொண்டே இருக்கும். அந்த மாற்றங்கள்தான் இந்தப் படத்தின் மையக் கருத்து. இது க்ரைம் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் படம்” என்றார்.
படத்தின் நாயகன் முகேன், “இது வித்தியாசமான க்ரைம் த்ரில்லர் கதை. ஒவ்வொரு காட்சியையும் மிகுந்த கவனத்துடன் இயக்குநர் உருவாக்கியிருக்கிறார். படப்பிடிப்பின் போது நிறைய சுதந்திரம் கொடுத்து, கதாபாத்திரங்களைச் சிறப்பாக வெளிப்படுத்த உதவினார். இந்தப் படத்துக்காக அனைவரும் மனதார உழைத்திருக்கிறார்கள். கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும்” என்றார்.