

நவீன கால காதலை மையமாக வைத்து அசோக்குமார் கலைவாணி இயக்கியுள்ள திரைப்படம் ‘நீ ஃபார்எவர். சுதர்ஷன் கோவிந்த், அர்ச்சனா ரவி, ஒய்.ஜி.மகேந்திரா, நிழல்கள் ரவி, எம்.ஜே. ராம், ரெத்திகானிவாஸ் என பலர் நடித்துள்ளனர்.
அஸ்வின் ஹேமந்த் இசை அமைத்துள்ள இப்படத்துக்கு ராஜா பட்டாச்சார்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். ‘தருணம்’ படத்தைத் தொடர்ந்து புகழ், ஈடன் இணைந்து தயாரித்துள்ளனர். டேட்டிங் ஆப் மூலம் இணையும் ஜோடியும், அவர்களின் வாழ்வில் அதனால் ஏற்படும் விளைவுகளும் இப்படத்தின் கதை.
ரொமான்ஸ் காமெடி டிராமாவாக உருவாகியுள்ள இப்படம் மார்ச் 27-ல் வெளியாகிறது. இதன் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் கலந்துகொண்டனர். நடிகர் ஒய்.ஜி.மகேந்திரா பேசும்போது, “இப்படத்தின் இயக்குநர் அசோக் முதலில் கதை சொன்னபோது அவருடைய நம்பிக்கை எனக்கு பிடித்தது.
நல்ல கதையை நம்பிக்கையுடன் எடுத்திருக்கிறார்கள். இந்தப் படம் இளைஞர்களை நிச்சயமாகக் கவரும். பழமை மற்றும் புதுமை இரண்டையும் இணைத்து இப்படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். நல்ல கதை இருந்தால் சிறிய படங்களும் பெரிய வெற்றி பெறும் என்பதற்கு இது உதாரணமாக இருக்கும்” என்றார்.