‘மூக்குத்தி அம்மன் 2’ மனதுக்கு நெருக்கமான படம்: நயன்தாரா நெகிழ்ச்சி

‘மூக்குத்தி அம்மன் 2’ மனதுக்கு நெருக்கமான படம்: நயன்தாரா நெகிழ்ச்சி
Updated on: 
1 min read

“படப்பிடிப்பு முடிந்த பிறகும் சில படங்கள் நீண்ட நாட்களுக்கு நமது மனதுக்கு நெருக்கமாக தங்கிவிடும். ‘மூக்குத்தி அம்மன் 2’  எனக்கு அப்படியான ஒரு படம்” என நயன்தாரா நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

நயன்தாரா நடிப்பில், சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘மூக்குத்தி அம்மன் 2: மஹா சக்தி’. நயந்தாரா அம்மனாக நடித்திருக்கும் இந்தப் படம் தீபாவளி வெளியீடாக நவம்பர் 6 அன்று திரைக்கு வர இருக்கிறது.

சென்சார் நடைமுறைகளை பூர்த்தி செய்துள்ள இப்படம் யுஏ 16+ சான்றிதழ் பெற்றுள்ளது. இந்த நிலையில், நடிகை நயன்தாரா படத்தின் இயக்குநர் சுந்தர்.சி, தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்து நெகிழ்ச்சி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், “படப்பிடிப்பு முடிந்த பிறகும் சில படங்கள் நீண்ட நாட்களுக்கு நமது மனதுக்கு நெருக்கமாக தங்கிவிடும். ‘மூக்குத்தி அம்மன் 2’  எனக்கு அப்படியான ஒரு படம்.

எனது இயக்குநர் சுந்தர்.சிக்கு, உங்களின் தொலைநோக்கு பார்வை, அன்பு, பேரார்வம் அனைத்தையும் இப்படத்துக்குள் கொண்டு வந்ததற்கு நன்றி. உங்களுடன் பணியாற்றியது உற்சாகமாக இருந்தது. ஒவ்வொரு தருணத்தில் காட்டிய அக்கறைக்கும், இந்தப் பயணத்தை மறக்க முடியாததாக மாற்றியதற்காக மிக்க நன்றி. இந்தப் படத்துக்காக நான் உங்களுக்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன்.

தயாரிப்பாளர் ஐசரி கணேஷுக்கு, இந்தப் படத்தின் மீது நம்பிக்கை வைத்து எங்களுக்கு ஆதரவு அளிததற்கு நன்றி. ஒரு கதையை முழு மனதுடன் நம்பி ஆதரிக்கும் ஒரு தயாரிப்பாளர் கிடைத்தது இந்தப் பயணத்தை மிகவும் அர்த்தமுள்ளதாக்குகிறது.

இந்தப் பயணத்தை உங்களுடன் பகிர்ந்து கொண்டது இனிமையானது. இனி வரவிருக்கும் அனைத்திலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

குஷ்பு, ஸ்நேகா... உங்கள் இருவருடனும் இந்தப் படத்தில் ஒரு பகுதியாக பயணித்தை நான் என்றென்றும் போற்றி பாதுகாப்பேன். உங்கள் இருவருக்கும் என் அன்பும் அரவணைப்பும்.

இத்தகைய அற்புதமான நடிகர்கள், படக்குழுவினருடன் பயணித்ததை பெரும் பாக்கியமாக கருதுகிறேன். மேலும் நாம் அனைவரும் இணைந்து உருவாக்கிய இந்த உலகத்தை நீங்கள் அனைவரும் அனுபவிப்பதை நான் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறேன். ஓம் சக்தி” என்று தெரிவித்துள்ளார்.

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கும் இப்படத்துக்கு ஹிப்ஹாப் தமிழா இசையமைத்து இருக்கிறார். ஏராளமான கிராபிக்ஸ் காட்சிகளுடன் உருவாகியுள்ள இப்படம், நவம்பர் 6-ஆம் தேதி தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. 

‘மூக்குத்தி அம்மன் 2’ மனதுக்கு நெருக்கமான படம்: நயன்தாரா நெகிழ்ச்சி
‘ராமாயணா’ படத்துக்கு கவாலி இசையா? - இணைய விவாதமும் ஏ.ஆர்.ரஹ்மான் விளக்கமும்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in