வீடு மனைவி மக்கள் - பட்டாபி எனும் நான்: எம்.எஸ்.பாஸ்கர் | அத்தியாயம் 22

வீடு மனைவி மக்கள் - பட்டாபி எனும் நான்: எம்.எஸ்.பாஸ்கர் | அத்தியாயம் 22
Updated on
3 min read

வீடு என்​பது வீடல்ல. அது விவரிக்க முடி​யாத ஓர் உணர்​வு. எங்​கெங்கோ சுற்றி விட்டு வந்து வீட்​டுக்​குள் கால் வைக்​கும் உணர்​வில் மனம் நிறைந்​து​விடும். அப்​படியொரு மகிழ்ச்​சி​யை, இனிமை உணர்வை பெரும்​பாலானவர்​களுக்கு வீடுகளே கொடுக்​கின்​றன.

எனக்​கும் அப்​படித்தான்! நான் பிறந்​தது நாகப்​பட்​டினத்​தில் உள்ள காடம்​பாடி. நாகப்​பட்​டினத்​தில் இருந்து நாகூர் செல்​லும் வழி​யில் இருக்​கிறது இந்த ஊர். அப்​பாவை ஆர்​.எம்​.எஸ் என்​பார்​கள், அவருக்குகே.எம்​.எஸ் என்ற இஸ்லாமிய நண்​பர் இருந்​தார்.

அந்த கே.எம்​.எஸ்​.ஸின் பங்​களா​வில்​தான் நான் பிறந்​தேன் என்று சொல்​வார்​கள். பிறகு வெளிப்​பாளை​யத்​தில் மாரி​யம்​மன் கோயில் தெருவில்​தான் வளர்ந்​தேன். என் சிறு வயது அங்​கு​தான் கழிந்​தது.

அங்கு அப்பா கட்​டிய வீட்​டுக்கு என்பெயரைத்​தான் வைத்​தார், ‘பாஸ்கர பவனம்’ என்​று. அதை விற்​று​விட்டு நாங்​கள் சென்​னைக்கு வரும்​போது, அந்த வீட்டை ஏக்​க​மாக பார்த்து நின்ற நாட்​கள் இன்​னும் நினை​வில் இருக்​கின்​றன.

இப்​போதும் அந்த வீடு அங்கு இருக்​கிறது. நான் அந்த பக்​க​மாக படப்​பிடிப்புக்​காக செல்ல நேர்ந்​தால் அந்த வீட்டை பார்த்து விட்டு வரு​வது வழக்​கம். அதில் இன்​னும் இருக்​கும் ‘பாஸ்கர பவனம்’ பெயரை பார்த்​ததும் எனக்​குள் ஏற்​படும் மகிழ்ச்​சியை விவரிக்க முடி​யாது.

பிறகு நாங்​கள் சென்​னைக்கு வரும்போது, ராயப்​பேட்டை அம்​மையப்ப முதலி தெரு​வில் உள்ள 41-ம் எண்​ணில் ஒரு போர்​ஷனில் குடி​யிருந்​தோம். அந்த வீடும் எனக்​குப் பிடித்த ஒன்​று. பிறகு சொந்த வீடு வாங்க நினைத்​து, சின்​னப்​போரூரில் ஒரு வீட்டை வாங்​கினோம்.

1.25 கிர​வுண்ட் இடத்​தில் 550 சதுர அடி​யில் அந்த வீடு இருந்தது. 1982-ல் அந்த வீட்டை வாங்​கும் போது அதன் மதிப்​பு, ஒரு லட்​சத்து 20 ஆயிரம் ரூபாய். பிறகு அங்​கிருந்து வேறு வீட்​டுக்கு குடிபெயர வேண்டி வந்​தது. அதனால் அந்த வீட்டை ரூ.88 லட்​சத்​துக்கு விற்​றோம்.

அந்​தப் பணத்​தில் பாதிக்கு மேல் என் தம்​பிக்கு கொடுத்​து​விட்​டு, மீதியை என் சகோ​தரி​களுக்கு கொடுத்​து​விட்​டு, என் பங்கு 14 லட்​சம் ரூபா​யில் விரு​கம்​பாக்​கத்​தில் லீசுக்கு ஒரு வீட்​டுக்கு வந்​தேன்.

என் வாழ்க்​கை​யில் இன்​னொரு பங்​காகஇருந்த அந்த சின்​னப்​போரூர் வீடு, இப்​போது ராவணன் குடில் என்ற பெயரில் என் பங்​காளி சீமானின் கட்சி அலு​வல​க​மாக இருக்​கிறது. இப்​போதும் அங்கு சென்​றால், அந்த வீட்​டைப் பார்த்​து​விட்டு வரு​வது உண்​டு.

பிறகு விரு​கம்​பாக்​கத்​தில் லீசுக்கு வசித்த வீட்டு உரிமை​யாளரின் மனை​விக்கு உடல் நிலை சரி​யில்​லை. அவருக்கு இன்​னும் அதி​கம் பணம் தேவைப்​பட்​டது. கொடுத்துவிட்டு அங்கு வசித்​தோம். பிறகு அவருக்கு அந்த வீட்டை விற்க வேண்​டிய நிலைமை ஏற்​பட்​டது.

நான் வாங்​கும் நிலை​மை​யில் இல்​லை. பிறகு சாலிகி​ராமம் விநாயகம் தெரு​வில் அடுக்​கு​மாடி குடி​யிருப்பு ஒன்​றில் வீடு வாங்​கினேன். அதுஎன் பெயரில் இன்​னும் இருக்கிறது.

இப்​போது நசரத்​பேட்டையில் அகரமேல் பகு​தி​யில் இடம்வாங்கி கட்​டிய வீட்​டில் வசித்து வரு​கிறேன். என் மகன் நடிகர் ஆதித்யா பாஸ்​கரும்​, என் மாப்பிள்ளை அகுலும் பிளான் செய்து இந்த வீட்டை கட்டினார்​கள்.

வீடு தொடர்​பான எனது இந்த பயணத்​தில் எனக்கு உறு​துணை​யாக இருந்​தவர் என் மனைவி ஷீலா பாஸ்​கர். சின்​னப்​போரூர் வீட்​டில் இருந்​த​போது நாங்​கள் சந்​திக்​காத சோதனை​கள் இல்​லை. அதில் எல்​லாம் நம்​பிக்​கையோடு இருந்​தவர் என் மனை​வி​தான். அந்த வீட்டை விற்​ற​போது “ஆண்​ட​வன் நம்மை இப்​படி துரத்​திட்​டாரே” என்று என் மனைவி அழு​தார்.

“துரத்​தி​னால் நல்ல இடத்துக்கு அழைத்​துச் செல்​கிறார்என்று அர்த்​தம். கவலைப் படாதே” என்று சொன்​னேன். பிறகு விரு​கம்​பாக்​கம் வீட்​டில் இருந்து மாற வேண்டி வந்​த​போதும், என் மனைவி அழு​தார். அப்​போது என் மகள் ஆறாவது படித்​துக் கொண்​டிருந்​தார்.

அவர், “ஏம்மாஅழறீங்க. அப்பா என்ன நம்மள தெரு​வுலயா விட்​டிரு​வாங்க. கவலைப் படாதீங்க” என்று தைரி​யம் சொன்​னார். பிறகு விநாயகம் தெரு​வுக்கு போன போது, அங்கு எனக்கு உதவிய​வர் நான் மாமாஎன்று அன்​போடு அழைக்​கக் கூடிய நரேந்​திரன்.

அவர்​தான் பிளாட்டை விற்றவரிடம், எனக்​குக் காசு இல்​லாத நேரத்​தி​லும் அந்த வீட்டை என் பெயருக்​குப் பத்​திரப்பதிவு செய்து கொடுக்​கச் சொல்​லிப் பேசியவர். பிறகு என் கெரு​கம்​பாக்​கம் வீட்டை விற்​றும் கொஞ்​சம் கொஞ்​ச​மாக பணம் கொடுத்​தும் வாங்​கினோம்.

இது​தான் என்​னுடைய வீடு அனுபவம்! இப்​போது நான் வாங்​கி​யிருக்​கும் நசரத்​பேட்டை வீட்​டை, சின்​னப் போரூர் வீட்​டில் இருந்து என்​னுடன் பயணித்து வரு​கிறஎன் மனை​வி​யின் பெயரில்​தான் வாங்​கி​யிருக்​கிறேன்.

இந்த வீட்டை வடிவமைத்து கட்​டிய​தில் என் மகன் ஆதித்யா பாஸ்​கருக்​கும் என் அன்பு மாப்​பிள்​ளைக்​கும் பெரிய பங்கு உண்​டு. எனக்​குப் பெண் குழந்​தைகள் மீது அதிக ஆசை உண்​டு. பெண்​களை நான் சக்தியின் வடிவ​மாகப் பார்க்​கிறேன்.

என் மனைவியையும், மகளை​யும் சரி, என் பேத்​தி​யை​யும் என் சகோ​தரி​களை​யும் அப்​படித்​தான் பார்க்​கிறேன். என்னை அப்பா என்​றழைக்​கிற பெண் குழந்​தைகள் அனை​வரும் என் குழந்​தைகள்​தான். என் மகள் ஐஸ்​வர்யா பாஸ்​கர், இப்​போது பல கதா​நாயகி​களுக்​குபின்​னணி குரல் கொடுத்​துக் கொண்​டிருக்​கிறார்.

அவருக்கு 5 ஆண்​டு​களுக்​குப் பிறகு பிறந்​தவர் மகன் ஆதித்யா பாஸ்​கர். அவரும் இப்​போது படங்​களில் பிசி​யாக நடித்து வரு​கிறார். இறைவன் அருளால் எனக்கு பேத்​தி​தான் வேண்​டும் என்று கேட்​டு, மகள் வழி​யாக அகிரா என்ற பேத்தி இருக்​கிறார்.

என் மனை​வி, இந்த வீடு, மக்​கள், என்​னுடைய சம்​பந்​தி, சுற்​றத்​தார் எல்​லோருமே எனக்கு இறைவன் கொடுத்த வரம் போல அமைந்தார்​கள். என் வீட்​டில் இருக்​கும் ஒவ்​வொரு செங்கல்​லிலும் என்னை உயர்த்​திய, என்னை ஆதரிக்​கும் தமிழ் ரசிக பெரு​மக்​கள் கொடுத்த சன்​மானத்​தையே பார்க்​கிறேன்.

இந்த வீடு கட்​டும் விஷ​யத்​தில் எனக்கு சமயத்​தில் பண உதவி செய்து பேருதவி செய்​தவர் என் அன்​புத்​தம்பி இயக்​குநர் ஏ.எல்​.​விஜய் அவர்​கள். இவையே உண்​மை. இதே ஆதரவை நான் நடிக்​கின்ற காலம் வரை மட்​டுமல்​லாமல், வாழ்​கின்ற காலம்​ வரை ரசிகப்​பெரு​மக்​களும்​, பத்​திரி​கை ஊடக நண்​பர்​களும்​ தர வேண்​டும்​ என்​பது​தான்​ என்​ ஆசை.

(திங்கள்தோறும் பேசுவோம்)

வீடு மனைவி மக்கள் - பட்டாபி எனும் நான்: எம்.எஸ்.பாஸ்கர் | அத்தியாயம் 22
காரை கணேசன் எனும் கள்ளமற்ற மனிதர்! - பட்டாபி எனும் நான்: எம்.எஸ்.பாஸ்கர் | அத்தியாயம் 21

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in