

யூடியூப்பில் பிரபலமாகி, படம் இயக்க வருபவர்களின் எண்ணிக்கை இப்போது அதிகரித்து வருகிறது. அந்த லிஸ்ட்டில் புதிதாக இணைந்திருக்கிறார் நிரஞ்ஜன். ‘மிஸ்டர் பாரத்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் அவருக்கு இயல்பாகவே வருகிறது காமெடி. இதில், சம்யுக்தா விஸ்வநாதன், பால சரவணன், நிதி பிரதீப், ஆர்.சுந்தர் ராஜன், லிங்கா என பலர் நடித்துள்ளனர். பேஷன் ஸ்டூடியோஸ், ஜி ஸ்குவாட், தி ரூட் நிறுவனங்கள் சார்பாக சுதன் சுந்தரம், லோகேஷ் கனகராஜ், ஜெகதீஷ் பழனிசாமி தயாரித்திருக்கும் இப்படம் பற்றி நிரஞ்ஜனிடம் பேசினோம்.
எப்படி தொடங்கியது சினிமா பயணம்?
படிக்கும்போதே டிராமா போடுவேன். அப்ப, ‘இதுவே சினிமாவானா எப்படியிருக்கும்?’னு கற்பனை பண்ணிக்குவேன். அங்க இருந்துதான் சினிமா ஆசை வந்தது. காலேஜ் படிக்கும்போது குறும் படங்கள் பிரபலமா கிட்டு இருந்தது. அப்ப நான் இயக்கிய ஒரு குறும்படம், காலேஜ்ல பெரிய பிரச்சினையாயிடுச்சு. அதுக்கு மன்னிப்புக் கடிதம் கொடுத்து நான் பிரபலமாகி இருந்த நேரம், அதே காலேஜ்ல எனக்கு சீனியரா இருந்த பாரத், என்னைத் தேடி வந்தார்.
‘நான் கண்ணை உருட்டி உருட்டி நல்லா நடிப்பேன். அடுத்த குறும் படத்துல என்னையும் நடிக்க வையுங்க’னு சொன்னார். நம்மளையும் இயக்குநர்னு நம்பி ஒருத்தர் வந்திருக்காரேன்னு நண்பர்கள் ஆனோம். சேர்ந்து குறும்படங்கள் பண்ணினோம். படிச்சு முடிச்சு அவர் சென்னை வந்துட்டார். நான் லேட்டா சென்னைக்கு வந்தேன். அதுக்குள்ள அவர், பல யூடியூப் சேனல்களை ஆரம்பிச்சு ஒண்ணுமே ஒர்க் அவுட் ஆகாம, கடைசியா இதுதான் பைனல்னு முடிவு பண்ணி ஒரு யூடியூப் சேனல் ஆரம்பிச்சார். அதுதான் ‘ஃபைனலி’. அது ஒர்க் அவுட் ஆச்சு.
அதுல நீங்க என்னவா இருந்தீங்க?
அதுல பாரத், நடிகர். நான்தான் ஸ்கிரிப்ட் எழுதினேன். அதுல கேரக்டரை மையப்படுத்தி வீடியோக்கள் பண்ணினோம். குறும்படம் மாதிரிதான். அதே கேரக்டர்கள், விஷயங்கள் மட்டும் ஒவ்வொரு எபிசோடா மாறிட்டே இருக்கும். அதுக்கு வரவேற்பு கிடைச்சது. அதை பார்த்துட்டு இயக்குநர் லோகேஷ் கனகராஜ், எங்களை வாழ்த்துறதுக்காகக் கூப்பிட்டார். அப்பதான் அவர் தயாரிப்பு நிறுவனமும் தொடங்கியிருந்தார். “இதுமாதிரி சினிமாவுக்கு ஸ்கிரிப்ட் இருக்கா?”னு கேட்டார். இருக்குன்னு சொன்னோம். சரின்னு அவர் மூலமா ஆரம்பிச்சது தான் ‘மிஸ்டர் பாரத்’.
ரொமான்டிக் காமெடி கதையா?
காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுத்திருக்கோம். கதைன்னா, மிஸ்டர் பீன் மாதிரி ஒரு கேரக்டர். அந்த கேரக்டருக்கு காதலை ‘புரப்போஸ்’ பண்ணவும் தெரியாது. யாராவது வந்து ‘புரப்போஸ்’ பண்ணினா, அது ‘புரப்போஸல்’னே தெரியாது. அவருக்கு காதலிச்சு கல்யாணம் பண்ணணும்னு ஆசை. ஒரு பொண்ணு அவரை தேர்வு பண்ணுது. அவங்களுக்குள்ள காதல் எப்படி நடக்குது, அவங்க எப்படி சேர்றாங்கறது தான் கதை.
எதுக்கு ரஜினி பட டைட்டில்?
இந்தப் படத்துக்கு ‘மாஸ்டர் பீஸ்’ அப்படின்னுதான் தலைப்பு வச்சிருந்தோம். அப்புறம் லோகேஷ் கனகராஜ் அண்ணன், ‘மிஸ்டர் பாரத்’ தலைப்பு சரியா இருக்கும்னு சொன்னார். அவரே டைட்டிலை அனுமதி வாங்கி கொடுத்தார். படம் ஆரம்பிக்கும்போதே, “இது உன்னோட உலகம், உன்னோட கதை. மது, புகை, ரத்தம் இல்லாம பார்த்துக்கோ; என்னால அப்படி பண்ண முடியல”னு சொன்னார். படம் முடியறவரை அவர் எதை பற்றியும் கேட்கலை. முடிஞ்சு படம் பார்த்தார். “நான் எதுக்காக இந்தப் படத்தை உங்கிட்ட கொடுத்தேனோ, அதை காப்பாத்திட்டே, மகிழ்ச்சியா இருக்கு’ன்னு சொன்னார்.
கிளைமாக்ஸை மாற்றினீங்களாமே?
சில ஹீரோக்களை கவுரவ வேடத்துல வர்ற மாதிரி கிளைமாக்ஸ் வச்சிருந்தோம். அதுக்கு நாள் இழுத்துட்டே போச்சு. அதை மாற்றலாமான்னு லோகேஷ் அண்ணன் கேட்டார். அதை மாற்றணும்னா, கதைக்குள்ளயும் சில மாற்றங்களை பண்ணணும்னு சொன்னேன். பரவாயில்லை. ‘பட்ஜெட் பற்றி கவலைப்படாம, நினைச்சதை எடு’ன்னு சொன்னார். அதுக்குப் பிறகு புது கிளைமாக்ஸ் வச்சோம். சென்சார் எதையும் கட் பண்ணாம ‘யு’ சான்றிதழ் கொடுத்திருக்காங்க. கண்டிப்பா எல்லோருக்கும் பிடிக்கிற படமா இருக்கும்.