

இந்த வாரம் எந்தெந்த மொழிகளில் என்னென்ன படங்கள் திரையரங்குகளில் வெளியாகின்றன என்பது பற்றிய பட்டியல் இது.
ஜிடிஎன்: தொழிலதிபர், கண்டுபிடிப்பாளர் மற்றும் கொடையாளர் ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் படம் (GDN) ‘ஜிடிஎன்’. மாதவன், பிரியாமணி, துஷாரா விஜயன், சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படத்தை கிருஷ்ணகுமார் ராம்குமார் இயக்கி உள்ளார். ஆக.7-ம் தேதி தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் இந்தப் படம் வெளியாகிறது.
டிசி: போலீஸாரின் வன்முறையிலிருந்து ஒரு அப்பாவி குடும்பத்தை காப்பாற்ற தேவதாஸும் அவனது நண்பர்களும் போராடும் அதே வேளையில் கொடூரமான காவலரிடமிருந்து தப்பிக்கும் பயணத்தில் நீதி, எதிர்பாராத உறவுகளைக் கண்டடையும் (DC) கதை. அருண் மாதேஷ் இயக்கி இருக்கும் இந்தப் படத்தில் லோகேஷ் கனகராஜ், வாமிகா, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படம் ஆக.7-ல் வெளியாகிறது.
போட்டோகிராபர்: தனது வாழ்வை மாற்றி அமைக்கக் கூடிய அசாதாரணமான நிகழ்வொன்றை படம் பிடிப்பதற்காக, வீரா என்கிற புகைப்படக் கலைஞர், மர்மமான மதிகெட்டான் சோலை என்கிற பாதுகாக்கப்பட்ட காட்டுக்குள் செல்லும் கதை. அஷ்ரஃப், ஜனனி சமாதானம், கருணகரன் நடித்துள்ள இந்த படத்தை அப்துல் பாஷித் சைய்த் இயக்கியுள்ளார். இந்த தமிழ்ப் படம் ஆக.7-ம் தேதி வெளியாகிறது.
கொரியன் கனகராஜு: ராயலசீமாவில் வசிக்கும் கனகராஜு என்ற இளைஞனை, கொரியன் கப்பலில் வந்த ஆவி ஒன்று பிடித்துக் கொண்டு அவனை (Korean Kanakaraju) கொரியன் கனகராஜுவாக மாற்றி ஆட்டிப்படைப்பதே கதை. மெர்லபாகா காந்தி இயக்கியுள்ள இந்தப் படத்தில் வருண் தேஜ், ரிதிகா நாயக், சத்யா நடித்துள்ளனர். இந்த தெலுங்குப் படம் ஆக.7-ம் தேதி வெளியாகிறது.
துடக்கம்: மோகன்லாலின் மகள் விஸ்மயா மோகன்லால் நடித்துள்ள இந்த (Thudakkam) க்ரைம் த்ரில்லர் படத்தில் ஆஷிஷ் ஜோ ஆண்டனி, மோகன்லால், சாய் குமார் நடித்துள்ளனர். ஜுடே அந்தோனி ஜோசப் இயக்கி உள்ளார். இந்த மலையாளப் படம் ஆக.7-ம் தேதி வெளியாகிறது.
ஹோ மை டாக்: மனிதர்களுக்கும் அவர்கள் வளர்க்கும் நாய்களுக்கும் இடையில் இருக்கும் உடைக்கமுடியாத அன்பைக் கொண்டாடும் உணர்வுப்பூர்வமான (Ohh My Dog) படம். இதில் பங்கஜ் திரிபாதி, ஸ்ரீதர் துபே நடித்துள்ளனர். அமித் ராய் இயக்கி உள்ளார். இந்த இந்தி மொழிப் படம் ஆக.7-ம் தேதி திரக்கு வருகிறது.
அனகாபள்ளி: அனகாபள்ளி கிராமத்தின் பின்னணியில் விரியும் இந்த கதையில் ரவுடி கும்பலின் தலைவனால் குற்றங்களின் நிழல் உலகுக்குள் ஓர் இளைஞனின் கதையை (Anakapalli) சொல்கிறது. விக்ரம் சஹிதேவ், சந்தியா வசிஷ்தா, தராக் போபன்னா நடித்துள்ள இந்த படத்தை ககேஷ் தம்மினேனி இயக்கி உள்ளார். இந்த தெலுங்குப் படம் ஆக.7-ம் தேதி திரைக்கு வருகிறது.
லைஃப் டுடே: ஷிவு வாழ்வில் நுழையும் அம்ரிதாவால் அமைதியான அந்த இளைஞன் கண்மூடித்தனமான காதலில் விழுகிறான். இந்தச் சூழ்நிலையில் ஷிவுவை விட்டு அவள் வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்கிறாள். அந்த இடர்மிகுந்த திருமண வாழ்க்கைக்கு பிறகு மீண்டும் அவள், அவனது வாழ்வில் வருகிறாள். அதன் பின்பு நடப்பதை சொல்கிறது (Life Today) படம். கிரண் ஆதித்யா, லேகா சந்திரா நடித்துள்ள இந்தப் படத்தை கந்தா கன்னல்லி இயக்கி உள்ளார். இந்த கன்னடப் படம் ஆக.6-ம் தேதி திரைக்கு வருகிறது.
அயோக்யா: மகேஷ் குமார் இயக்கத்தில், சதீஷ் நினாசம், ரச்சிதா ராம் நடித்டுள்ள இந்த (Ayogya) கன்னட படம், ஆக.7-ம் தேதி திரைக்கு வருகிறது.
விவாஹ்: நவீன கால திருமணத்தில் உள்ள சிக்கல்களை எதிர் கொள்ளும் நான்கு தம்பதிகளை பற்றி (Vivaah) இந்த படம் பேசுகிறது. தியன் ஸ்ரீனிவசன், அபிஷேக் ஸ்ரீகுமார் நடித்துள்ள படத்தை ப்ளெசன் எல்சா இயக்கியுள்ளார். இந்த மலையாளப் படம் ஆக.7-ம் தேதி திரைக்கு வருகிறது.
பாஸ்: ஒரு இளைஞனைச் சுற்றி இருப்பவர்கள், தங்களின் சுய லாபங்களுக்காக அவனைப் பயன்படுத்திக் கொள்ளும் (Boss) கதை. தனுஷ் ஷிவண்ணா, வந்திதா கவுடா நடித்து, வி.லாவா இயக்கியுள்ள இந்த கன்னடப் படம் ஆக.7-ம் தேதி வெளியாகிறது.
கேஜேக்யூ (கிங் ஜாக்கி குயின்): நட்பு, காதல், துரோகத்துக்கு இடையில் ஊசலாடும் மூன்று பேரின் கதை (KJQ) இது. தீக்ஷித் ஷெட்டி, சஷி ஒடெலா, யுக்தி தரேஜா நடித்துள்ள இந்த தெலுங்குப் படம் ஆக்.7-ம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்தை கிரண் குமார் மேனுகா இயக்கி உள்ளார்.