

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜின் 10-வது படத்தின் தலைப்பு ‘டோரதி’ என்றும், இந்தப் படம் டொரான்டோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
‘டோரதி’ படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். கீர்த்தி சுரேஷ், சனத், ரிஷிகாந்த் ஆகியோர் நடிக்கும் இந்தப் படத்தை ஜியோ ஸ்டுடியோஸ், சிக்யா எண்டர்டன்மென்ட் உடன் இணைந்து கார்த்திக் சுப்பராஜ் தனது தம்மம் ஃபிலிம்ஸ் பேனரின் கீழ் தயாரிக்கிறார்.
படத்துக்கு எஸ்.திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பு பணியை கணேஷ் சிவாவும், சண்டை பயிற்சியை தினேஷ் சுப்புராயனும் மேற்கொண்டுள்ளனர்.
டொரான்டோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடுவதற்கு தேர்வாகியுள்ள இந்தப் படம், வரும் செப்டம்பர் மாதம் வெளியாக உள்ளது.
இது குறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள கார்த்திக் சுப்பராஜ், ‘என்னுடைய 10-வது படம் ‘டோரதி’. படத்தில் கீர்த்தி சுரேஷ், சனத், ரிஷிகாந்த் நடிக்கின்றனர்.
எனது இதயத்துக்கு மிகவும் நெருக்கமான கதை இது. பல காலமாக நான் எடுக்க நினைத்த இந்தப் படம், மேஸ்ட்ரோ இளையராஜா இசையுடன் இப்போது எடுக்கப்பட்டுவிட்டது.
மேலும், பெருமைக்குரிய டொரான்டோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 2026 செப்டம்பர் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
எப்போதும் போல் ரசிகர்களின் அன்பையும், ஆதரவையும் எதிர்பார்க்கிறோம். இந்த முறை நமது ‘டோரதி’க்கு கொஞ்சம் கூடுதலாகவும்’ என்று தெரிவித்துள்ளார்.