

‘மெளனம் பேசியதே’ படம் மறுவெளியீடு செய்யப்பட்டு இருப்பதற்கு தயாரிப்பாளர் நெகிழ்ச்சியுடன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அமீர் இயக்கத்தில் சூர்யா, த்ரிஷா, லைலா உள்ளிட்ட பலர் நடிப்பில் 2002-ம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘மெளனம் பேசியதே’. தற்போது அப்படம் தொழில்நுட்ப ரீதியாக மெருக்கேற்றி மறுவெளியீடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அபிரஜித் பிலிம்ஸ் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், ”எனது நிறுவனத்தின் சார்பில் இயக்குநர் பாலா இயக்கத்தில் சூர்யா நடித்த ‘நந்தா’ படத்தைத் தொடர்ந்து, 2002-ம் ஆண்டு சூர்யா, நந்தா, த்ரிஷா, லைலா உள்ளிட்டோரின் நடிப்பில், ராம்ஜி ஒளிப்பதிவில், யுவன் இசையில், இயக்குநர் அமீர் இயக்கிய ‘மெளனம் பேசியதே’ படம் வெளியானது என்பதை அறிவீர்கள்.
அதன்பின் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத படைப்புகளை உருவாக்கி, உலக சினிமா அரங்கில் பல விருதுகளைப் பெற்று தமிழ் திரைத்துறைக்கு பெருமை சேர்த்த இயக்குநர் அமீர் அவர்களை, எனது நிறுவனத்தின் ’மெளனம் பேசியதே’ படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியதில் மிகவும் பெருமையும் மகிழ்ச்சியும் கொள்கிறேன்.
‘மெளனம் பேசியதே’ படத்தை முதல் முறையாக திரையரங்குகளில் வெளியிட்ட போது, பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் தந்த ஆதரவைப் போல இப்போதும் தங்களின் பேராதரவோடு 23 ஆண்டுகளுக்குப் பிறகு இன்றும் 13-2-2026 அன்று தமிழக திரையரங்குகளில் மறுவெளியீடு செய்கிறேன்.
மேலும், எனது நிறுவனத்தில் புதிய சிந்தனையாளர்களுடன் இணைந்து புதிய படங்களையும் தயாரிக்க திட்டமிட்டுள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளது அபரஜித் பிலிம்ஸ் நிறுவனம்.