

கடந்த 2025-ம் ஆண்டில் 285 திரைப்படங்கள் வெளியாகி சாதனை படைத்தது கோலிவுட். இதில் 35 படங்கள் மட்டுமே வணிக ரீதியாக வெற்றிபெற்றன.
பெரும்பாலான திரைப்படங்கள் சிறுபட்ஜெட்டில் உருவானவை. ரஜினியின் ‘கூலி’ ரூ.500 கோடிக்கு மேல் வசூலித்தது. ‘குட் பேட் அக்லி’, ‘டிராகன்’, ‘விடாமுயற்சி’, ‘ட்யூட்’ ஆகிய திரைப்படங்கள் மட்டுமே 100 கோடிக்கு மேல் வசூலித்தன.
இந்நிலையில் 2026-ம் ஆண்டில் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்குள்ளாகி இருக்கும் திரைப்படங்கள் வரிசைக் கட்டி நிற்கின்றன. வருடத்தின் முதல் மாதத்திலேயே விஜய்யின் ஜனநாயகன், சிவகார்த்திகேயனின் பராசக்தி ஆகிய பிரம்மாண்டத் திரைப்படங்கள் வெளியாகின்றன.
ஜனநாயகன்: தமிழக வெற்றிக்கழகத்தை நடிகர் விஜய் தொடங்கி இருப்பதால் அவருடைய கடைசி படமாகி இருக்கிறது ‘ஜனநாயகன்’. இதனாலேயே இப்படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு உள்ளது. ஹெச்.வினோத் இயக்கியுள்ள இப்படத்தில் பாலிவுட் நடிகர் பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு உள்பட பலர் நடித்துள்ளனர். பொங்கலை முன்னிட்டு ஜன.9-ம் தேதி வெளியாகிறது இப்படம்.
பராசக்தி: சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்துள்ள படம் இது. ரவி மோகன் வில்லனாக நடித்துள்ள இதில், அதர்வா, ஸ்ரீலீலா என பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். 1960-களில் தமிழகத்தில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை மையமாக வைத்து இப்படத்தை உருவாக்கியுள்ளனர். பொங்கலை முன்னிட்டு ஜன.10-ம் தேதி இப்படம் வெளியாகிறது.
ஜெயிலர் 2: நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வெற்றி பெற்ற ‘ஜெயிலர்’ படத்தின் அடுத்த பாகம் இது. எஸ்.ஜே. சூர்யா, ரம்யா கிருஷ்ணன், மிதுன் சக்கரவர்த்தி உள்படபலர் நடிக்கின்றனர். அனிருத் இசைஅமைக்கும் இப்படம் ஜுன் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜெயிலர் படம் ரூ.600 கோடிக்கு மேல் வசூலித்தது என்பதால் இந்தப் படம் தமிழ் சினிமாவின் ஆயிரம் கோடி வசூல் கனவை நிறைவேற்ற வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.
கருப்பு: ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள திரைப்படம், ‘கருப்பு’. த்ரிஷா, மலையாள நடிகர் இந்திரன்ஸ், நட்டி, ஷிவதா, சுவாசிகாஎன பலர் நடித்துள்ளனர். 2025-ல் வெளியாக இருந்த நிலையில் சில காரணங்களால் இந்த வருடம் வெளியாகிறது. வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா, மமிதா பைஜு நடித்துள்ள 46-வது படமும் இந்தாண்டில் வெளியாக இருக்கிறது.
தனுஷ் 54: ‘போர்தொழில்’ விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இதில் மமிதா பைஜு, சுராஜ் வெஞ்சரமூடு, கருணாஸ் உள்பட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைக்கும் இப்படம் பிப்ரவரி மாதம் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.
வா வாத்தியார், சர்தார் 2: நலன் குமரசாமி இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் வா வாத்தியார். கார்த்தியுடன், கீர்த்தி ஷெட்டி, ராஜ்கிரண், சத்யராஜ், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் டிசம்பரில் வெளியாக இருந்தது. பைனான்ஸ் பிரச்சினை காரணமாக வெளியாகாததால், இந்த வருடம் வெளியாக இருக்கிறது. மித்ரன் இயக்கத்தில், கார்த்தி நடித்து கடந்த 2022-ம் ஆண்டு வெளியான படத்தின் அடுத்த பாகம் ‘சர்தார் 2’. இப்படமும் ‘டாணாக்காரன்’ தமிழ் இயக்கத்தில் அவர் தற்போது நடித்து வரும் ‘மார்ஷல்’ படமும் இந்த ஆண்டு வெளியாக இருக்கிறது.
அரசன்: வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம். வட சென்னை கதையைக் கொண்ட இப்படத்துக்கு அனிருத் இசை அமைக்கிறார். கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். வெற்றிமாறன் - சிம்பு - விஜய் சேதுபதி கூட்டணி என்பதால் இப்படத்துக்கு எதிர்பார்ப்பு உள்ளது.
ஜீனி, கராத்தே பாபு, ப்ரோ கோட்: ‘பராசக்தி’யில் வில்லனாக நடித்துள்ள ரவி மோகன், ஹீரோவாக நடித்துள்ள 3 படங்கள் இந்த வருடம் வெளியாக வாய்ப்பிருக்கிறது. அறிமுக இயக்குநர் அர்ஜுனன் இயக்கத்தில் அவர் நடித்துள்ள ‘ஜீனி’ படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. இதில் கல்யாணி பிரியதர்ஷன், வாமிகா, கிருத்தி ஷெட்டி என பலர் நடித்துள்ளனர். கிராபிக்ஸுக்கு முக்கியத்துவம் கொண்ட படம் என்பதால் அதன் வேலைகள் சென்றுகொண்டிருக்கின்றன.
அடுத்து அவர் சட்டமன்ற உறுப்பினராக நடித்துள்ள ‘கராத்தே பாபு’ படத்தின் டீஸர் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் இப்படத்துக்கு எதிர்பார்ப்பு இருக்கிறது. இதை ‘டாடா’ இயக்குநர் கணேஷ் கே.பாபு இயக்கி இருக்கிறார். கார்த்திக் யோகி இயக்கத்தில் அவர் நடித்துள்ள ‘ப்ரோ கோட்’ படத்தை ரவி மோகன் ஸ்டூடியோஸ் சார்பில் அவரே தயாரிக்கிறார். இதில் அர்ஜுன் அசோகன், யோகி பாபு, ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஸ்ரீகவுரி பிரியா நடித்து வருகின்றனர்.
மகுடம்: விஷால் நடிக்கும் ‘மகுடம்’ இந்த வருடம் வெளியாக இருக்கிறது. படத்தை இயக்கி வந்த ரவி அரசுக்கும் விஷாலுக்கும் பிரச்சினை ஏற்பட்டதால், இப்படத்தை விஷாலே இயக்கி உள்ளார். சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் துஷாரா விஜயன், அஞ்சலி உள்பட பலர் நடிக்கின்றனர். விஷாலின் முதல் இயக்கம் என்பதால் எதிர்பார்ப்பு இருக்கிறது.
டிரைன்: விஜய் சேதுபதி நடித்துள்ள இப்படத்தை மிஷ்கின் இயக்கி இருக்கிறார். ‘சைக்கோ’ படத்துக்குப் பிறகு மிஷ்கின் இயக்கத்தில் வெளியாகும் படம் என்பதால் எதிர்பார்ப்புள்ளது.
காஞ்சனா 4: ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் உருவாகும் ‘காஞ்சனா 4’ இந்த ஆண்டு வெளியாக இருக்கிறது. இதில் பூஜா ஹெக்டே, நோரா பதேகி உள்பட பலர் நடிக்கின்றனர். இதில் பேயை அவர் எப்படிக் காட்டப் போகிறார் என்கிற ஆர்வத்தில் ரசிகர்கள் இப்படத்தை எதிர்நோக்கியுள்ளனர்.
லவ் இன்சூரன்ஸ் கம்பெனி: பிரதீப் ரங்கநாதன் நடித்து 2025-ல் வெளியான ‘டிராகன்’, ‘ட்யூட்’ ஆகிய படங்கள் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதால் இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு உள்ளது. விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள இதில், சீமான், கிருத்தி ஷெட்டி, எஸ்.ஜே.சூர்யா, யோகிபாபு, மிஷ்கின் உள்பட பலர் நடித்துள்ளனர்.
மூக்குத்தி அம்மன் 2: ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன் ஹிட்டானதால், அதன் 2-ம் பாகம் இப்போது உருவாகியுள்ளது.
சுந்தர் சி இயக்கியுள்ள இதில் நயன்தாரா மூக்குத்தி அம்மனாக நடித்துள்ளார். ஊர்வசி, ரெஜினா என பலர் நடித்துள்ள இப்படம், இந்த வருடம் வெளியாக இருக்கிறது.
இந்தப் படங்கள் எதிர்பார்ப்புக்குள்ளதாக இருந்தாலும் கடந்த வருடம் வெளியான 285 படங்களில் அதிகம் வெற்றிபெற்ற திரைப்படங்கள் சிறுபட்ஜெட் படங்கள்தான். அதனால் எதிர்பார்க்காமல் வந்து வெற்றிபெறும் படங்களும் இந்தஆண்டு அதிகம் வர வாய்ப்பு இருப்பதாக திரைத் துறையினர் கூறுகின்றனர்.