மொத ராத்திரி: விமர்சனம் - கலாட்டா கல்யாணமும் திகட்டாத காமெடியும்!

மொத ராத்திரி: விமர்சனம் - கலாட்டா கல்யாணமும் திகட்டாத காமெடியும்!
Updated on
2 min read

இருவேறு காரணங்களால் திருமணத்தில் ஆர்வமில்லாமல் இருந்து, எதிர்பாராதவிதமாகத் திருமண பந்தத்தில் இணையும் இரண்டு பேரை சுற்றி ஒரே இரவில் நடக்கும் படம்தான், ’மொத ராத்திரி’. பெரிய நட்சத்திரங்கள் இன்றி, பெரிய அளவில் விளம்பரமும் இல்லாமல் வெளியாகியுள்ள இப்படம் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

குல தெய்வக் கோயிலின் வருமானம் குறையக் காரணமான கோயில் அர்ச்சகர் (சேத்தன்), நாயகன் மருதநாயகத்தின் (ரிஷிகாந்த்) திருமணம் பாழாய்ப் போகும் என சாபமிடுவதில் தொடங்குகிறது படம்.

முத்துச்செல்விக்கும் (அனிஷ்மா அனில்குமார்) மருதநாயகத்துக்கும் இடையே ஏற்பாடு செய்யப்படும் தடபுடலாக நடக்கும் இந்த திருமணத்தில் இருவருக்குமே விருப்பம் இல்லை. இருவருக்கும் அவரவர்க்கான காரணங்கள் உள்ளன. தன் காதலுடனுடன் திருமணம் நடப்பதற்கு முன்பே எப்படியாவது ஓடிப் போக திட்டமிடுகிறார் முத்துச்செல்வி. இதன் பிறகு என்ன நடந்தது என்பதே ‘மொத ராத்திரி’ படத்தின் கதை.

படத்தின் கதையை மெதுவாகவும் நிதானமாகவும் நகர்த்திய முடிவே இதற்குப் பெரிய பலமாக அமைந்துள்ளது. தொடக்கத்தில் இயக்குநர் பயன்படுத்திய உத்தி சற்றே அலுப்பைத் தந்தாலும், அதன் பின்வரும் காட்சிகள் முற்றிலும் ரசிக்கும்படியும் கலகலப்பாகவும் மாறுகின்றன.

அனிஷ்மாவின் திருமணத்தன்று அவரது காதலர் தூங்கி விடுவது, திருமண வீட்டில் நடக்கும் கலகலப்பான கலாட்டாக்கள், இருவீட்டாருக்கும் இடையே உரையாடல்கள், ஆங்காங்கே வரும் எமோஷனல் காட்சிகள் ஆகியவை முதல் பாதியை தூக்கி நிறுத்துகின்றன.

சுவாரஸ்யமாக, பாக்யராஜ் பட பாணியில் இடைவேளைக்கு சற்று முன்புதான் போதுதான் இயக்குநர் ராஜா கருப்பசாமியின் பெயர் டைட்டில் கார்டில் வருகிறது. அது நன்றாக கைகொடுக்கவும் செய்திருக்கிறது. தன் மனைவி ஓடிப் போக முடிவெடுத்திருப்பதை ரிஷிகாந்த் கண்டுபிடிக்கும்போது இருவருக்கும் இடையிலான உரையாடல் அப்ளாஸ் ரகம். 

குறிப்பாக, அனிஷ்மாவின் காதலராக வரும் இயக்குநர் ராஜா கருப்பசாமி, தனது நண்பர்களுடன் சேர்ந்து அடிக்கும் லூட்டிகள் காமெடியின் உச்சம். நகைச்சுவையைத் தாண்டி, திருமணத்துக்கான பொறுப்புகள், நிதி நெருக்கடிகள் மற்றும் கடமைகளை அறியாமலேயே இன்றைய இளைஞர்கள் எப்படித் திருமண வாழ்க்கைக்குள் நுழைகிறார்கள் என்பதை இந்த காட்சிகள் அழகாகப் படம் பிடித்துக் காட்டுகின்றன.

நாயகனாக ரிஷிகாந்த். சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்தவருக்கு இப்படம் ஒரு முக்கியமான திருப்பம். எந்த குறையும் சொல்லமுடியாத அளவுக்கு நல்ல நடிப்பை வழங்கி இருக்கிறார். அதேபோல அனிஷ்மாவுக்கு கனமான கதாபாத்திரம், ஆரம்பத்தில் இறுக்கத்துடன் இருக்கும் அவர், கணவனை ‘ப்ரோ’ என்று அழைப்பது, தன் காதலனுடன் போனில் எரிந்து விழும் காட்சிகளில் ரசிக்க வைக்கிறார்.

சேத்தன், பகவதி பெருமாள், அப்துல் லீ, ஏ.வெங்கடேஷ், திருமண வீட்டில் இருக்கும் பெண் கதாபாத்திரங்கள் என அனைவரும் இயல்பான நடிப்பு. மணமகன் - மணமகள் வீட்டின் பெண்கள் பேசிக்கொள்ளும் காட்சிகள், மற்றும் கட்டில் செய்பவர்களின் கலாட்டாக்கள் என அத்தனை காட்சிகளுமே காமெடிக்கு உத்தரவாதம் தருகின்றன. வழக்கொழிந்து போன டிராக் காமெடி பாணியை இப்படத்தில் இயக்குநர் மீண்டும் ஓரளவு இயல்பாகப் பொருத்தியுள்ளார்.

இரண்டாம் பாதியில் சேத்தன், ரிஷிகாந்த் இடையிலான உரையாடல் தொடர்பான காட்சியின் நீளத்தை குறைத்திருக்கலாம். அந்த காட்சியில் படம் நகராமல் நீண்டநேரம் ஒரே இடத்தில் போன்ற உணர்வு ஏற்படுகிறது. ஆரம்பத்தில் இயல்பாகவும் நேர்த்தியாகவும் இருந்த வட்டார வழக்கு பேச்சு, போகப் போகத் அதன் தன்மையை இழக்கிறது. இதை படக்குழு கவனித்திருக்கலாம்.

அதேபோல படத்தில் சாதி குறித்த விவாதம் இன்னும் அழுத்தமாக கையாளப்பட்டிருக்கலாம். திருமணத்துக்குப் பிறகு பெண்களின் கல்வி மற்றும் பொருளாதார சுதந்திரத்தின் முக்கியத்துவத்தைப் பெண்கள் உரையாடும் ஒரு காட்சி சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.

குடும்பங்களில் வயது வித்தியாசம் இன்றி பெண்கள் எதிர்கொள்ளும் அடக்குமுறையையும், சில பெண்களே பெண்களுக்கு எதிரியாக இருப்பது உள்ளிட்ட பல விஷயங்களை படம் பேசுகிறது.

படத்தின் ஆரம்பத்தில் ஒரு சிறிய குடிசையிலிருந்து கார்பன் நிறுவனத்துக்கு எதிராகப் போராடும் ஒரு கம்யூனிஸ்ட் பெரியவரின் கதாபாத்திரம், பின்னர் வேறு ஒரு காட்சியில் உதவுவது போன்ற நுட்பமான காட்சிகள் ரசிக்க வைக்கின்றன.

முக்கியமாக நாஸ்டால்ஜியா என்ற பெயரில் பழைய பாடல்களை வலிந்து திணிக்காதது, டிரெண்டை ஃபாலோ செய்கிறேன் பேர்வழி என சோஷியல் மீடியா மீம் பாணி வசனங்களை சேர்க்காதது போன்ற விஷயங்களுக்காக இயக்குநரை கூடுதலாக ஒருமுறை பாராட்டலாம்.

படத்தில் சின்னச் சின்ன குறைகள் இருந்தாலும் அவை படத்தின் நேர்மறை அம்சங்களை மிஞ்சும் அளவுக்கு வலுவானவை அல்ல. அறிமுக இயக்குநர் ராஜா கருப்பசாமி, முதல் படத்திலேயே தன்னை நிரூபித்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். நடிகர்களின் சிறப்பான நடிப்பு, நேர்த்தியாக எழுதப்பட்ட திரைக்கதை, ரசிக்க வைக்கும் நகைச்சுவை என 'மொத ராத்திரி' குடும்பத்துடன் பார்ப்பதற்கு ஏற்ற ஒரு நல்ல வீக்கெண்ட் சினிமா.

மொத ராத்திரி: விமர்சனம் - கலாட்டா கல்யாணமும் திகட்டாத காமெடியும்!
பியார் பிரேமா கல்யாணம்: விமர்சனம் - சமூக கருத்தா, சோஷியல் மீடியா கன்டென்ட்டா?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in