

‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தில் இயக்குர் ராம் உருவாக்கி இருக்கும் ஃபேன்டஸியான உலகத்துக்குள் பயணிக்கும்போது, அது மறக்க முடியாத அனுபவமாக இருக்கும் என நம்புவதாக இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
ராம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘ஏழு கடல் ஏழு மலை’. இந்தப் படம் இன்று (அக்.1) திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இப்படம் குறித்து ராமிடம் உதவி இயகுநராக இருந்த இயக்குநர் மாரி செல்வராஜ் தனது கருத்துகளை பகிர்ந்துள்ளார்.
இது குறித்து எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், ‘இன்று அக்டோபர் 1; எங்கள் இயக்குநர் ராம் சாரின் ‘ஏழு கடல் ஏழு மலை’ படம் வெளியாகிறது.
பொதுவாக, சினிமா என்பது மற்றவர்களுக்கு சாதாரணமாக தெரியும். ஆனால் அதை உருவாக்குபவர்களுக்குதான் அது எவ்வளவு பெரிய உணர்ச்சிப் பெருக்கு என்பது புரியும் என இயக்குநர் அடிக்கடி சொல்வார்.
இந்தப் படத்தை நான் 5, 6 முறை பார்த்திருக்கிறேன். அந்த ஒவ்வொரு முறையும், இவர் இதை எப்படி யோசித்திருப்பர், இதற்குள் எப்படி பயணப்பட்டிருப்பார்.
இவ்வளவு ஆழத்துக்குள், மனித உணர்வுகளுக்குள், சமூகத்தின் பேரிரைச்சலுக்குள் எப்படி போயிருப்பார் எனத் தோன்றும். என்னை அந்த அளவுக்கு யோசிக்க வைத்த, வியப்புக்கு உள்ளாக்கிய படம் ‘ஏழு கடல் ஏழு மலை’.
இந்தப் படத்தைப் பார்க்கும்போது நிச்சயமாக உங்களுக்கும் அந்த அற்புதம் நிகழும். சினிமா என்பது கொண்டாட்டங்களை தாண்டி, பேரமைதியையும், பெரும் இரைச்சலையும் கொடுக்கலாம், பல கேள்விகளுக்கு பதிலையும் கொடுக்கலாம். இவை எல்லாவற்றையும் உள்ளடக்கியதாகத்தான் ‘ஏழு கடல் ஏழு மலை’ படம் உள்ளது.
இந்தப் படத்தை திரையரங்கில் நீங்கள் பார்க்கும்போது, அந்த கதாபாத்திரங்களுடன், அவர் (ராம்) உருவாக்கி இருக்கும் ஃபேன்டஸியான உலகத்துக்குள் நீங்கள் பயணிக்கும்போது நிச்சயமாக உங்களுக்கு மறக்க முடியாத ஓர் அனுபவம் கிடைக்கும் என உறுதியாக நான் நம்புகிறேன்.
‘மஞ்சணத்தி’ படப்பிடிப்பில் நான் இருப்பதால் என்னால் திரையரங்கில் சென்று படத்தைப் பார்க்க முடியவில்லை. இந்தப் படத்தை திரையரங்கில் சென்று பார்க்கும் போது விவரிக்க முடியாத ஓர் அனுபவம் கிடைக்கும். எல்லோரும் திரையரங்கில் சென்று படத்தைப் பாருங்கள்’ என்று மாரி செல்வராஜ் பேசியுள்ளார்.
வி ஹவுஸ் புரொடக் ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்திருக்கும், ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தில் நிவின் பாலி, சூரி, அஞ்சலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ராம் இயக்கி இருக்கும் இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். என்கே ஏகாம்பரம் ஒளிப்பதிவும், விஎஸ் மதி படத்தொகுப்பும் செய்துள்ளனர். இந்தப் படம் இன்று திரையரங்களில் வெளியாகி உள்ளது.