

வைபவ் நடிப்பில் உருவாகி வரும் ‘மணிகண்டா’ படத்தின் முதல் பாடலான ‘கருப்பர் வந்தால் ஐய்யன் வருவார்’ பாடலை படக்குழு இன்று (நவ.28) வெளியிட்டுள்ளது.
நடிகர் சூர்யா இந்தப் பாடலை அவரது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர், ‘மணிகண்டா’ படத்தில் இருந்து, ‘கருப்பர் வந்தால் ஐய்யன் வருவார்’ பாடலை வெளியிடுகிறோம். பிரியமான பிரேம் ஜி அமரனின் இசைப் பயணம் சிறக்க வாழ்த்துகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.
ஜே.கே.சரவணாவின் வரிகளில், வி.எம்.மகாலிங்கம் பாடியிருக்கும் இந்தப் பாடல் ஐயப்பனுக்கு காவல் தெய்வமாக விளங்கும் கருப்பர் சாமியின் புகழ் பாடும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. பாடலின் பின்பகுதி ஐயப்பனை போற்றிப் பாடுகிறது.
வழக்கமாக கருப்பர் பாடல்கள் ஆக்ரோஷமாகவும், அச்சம் தரும் வகையிலும் இருக்கும். இந்த கருப்பர்சாமி பாடல் ஆர்ப்பாட்டம் இல்லாமல், மனதில் அன்பையும் பக்தியையும் ஊற்றெடுக்கச் செய்யும் வகையில் அமைந்திருக்கிறது.
தந்த்ரா ஃபிலிம்ஸ் சார்பில் ஜே.கே.சரவணா மற்றும் எம்.ராஜாராம் தயாரித்திருக்கும் இந்த ‘மணிகண்டா’ படத்தை, ‘மாளிகப்புரம்’ படத்தை இயக்கிய விஷ்ணு சசி சங்கர் இயக்கி இருக்கிறார். பிரேம் ஜி அமரன் இசையமைத்திருக்கும் இந்தப் படத்துக்கு, யுவன் செல்வா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
வைபவ் கதாநாயகனாக நடித்திருக்கும் இந்தப் படத்தில் அவருடன், மீனாட்சி கோவிந்தராஜன், அரவிந்த் ஆகாஷ், ஆடுகளம் நரேன், ஹரீஷ் பெரேடி, அர்ஜய் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
“ஐயப்ப பக்தர்களின் ஆன்மிகப் பயணத்தை மையமாகக் கொண்டு இதன் கதை உருவாகியுள்ளதாகவும், குடும்ப ரசிகர்களைக் கவரும் வகையில் படம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் படக்குழு தெரிவித்திருந்தது.