

சூரி நாயகனாக நடித்துள்ள ‘மண்டாடி’ படத்தின் அடுத்த சிங்கிள் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
கடலோர மக்களின் வாழ்க்கை, பாரம்பரியம், உணர்வுகள், அவர்களின் மன உறுதியை மையமாகக் கொண்ட ஸ்போர்ட்ஸ் ஆக்ஷன் டிராமாவாக உருவாகி இருக்கும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். படத்தின் இரண்டாவது சிங்கிளை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர்.
‘உசுரே நீதான் புள்ள...’ என்ற அந்தப் பாடலை ஜெயஸ்ரீ மதிமாறன் எழுதியுள்ளார். கபில் கபிலன், சஞ்சனா கல்மஞ்சே இணைந்து பாடியுள்ளனர்.
கடற்கரை மற்றும் கடலின் பின்னணியில் சூரி, சுஹாஸ் காதலை மையமாக வைத்து பாடல் படமாக்கப்பட்டுள்ளது.
கடற்கரைக்கு அருகில் இருக்கும்போது முகம் வந்து மோதி நலம் விசாரிக்கும் ஈரக்காற்றாய் மனதை வருடுகிறது ஜி.வி.பிரகாஷின் இதமூட்டும் இசை.
மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி நாயகனாக நடித்துள்ள படம் ‘மண்டாடி’. இந்தப் படத்தில் அவருடன் சுஹாஸ், மகிமா நம்பியார், சத்யராஜ், ரவீந்திரா விஜய், மிதுன், பால சரவணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
ஆர்.எஸ்.இன்போடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படம் செப்டம்பர் 10-ம் தேதி வெளியாக உள்ளது.