

‘தி டாக்ஸிக்’ படப்பிடிப்பின்போது கர்ப்பிணியாக இருந்த கியாரா அத்வானியை பவுன்சர்கள் போல நாங்கள் பாதுகாத்தோம் என்று யஷ் பேசியுள்ளார்.
யஷ் நடிப்பில் வெளிவர இருக்கும் படம் ‘ த டாக்ஸிக்’. இந்தப் படத்தின் பாடல் வெளியீடு விழா மும்பையில் நடந்தது.
இந்த விழாவில் பேசிய படத்தின் நாயகன் யஷ், சக நடிகை கியாரா அதவானியின் அர்ப்பணிப்பை வெகுவாக பாராட்டினார். அவர் கூறுகையில், ‘அவர் (கியாரா) ஒரு நேர்த்தியான அற்புதமான நடிகர். அவர் இந்தப் படத்தில் இருக்கிறார் என்று அறிந்ததும் நான் கொஞ்சம் பதற்றம் அடைந்தேன். ஏனென்றால், இந்தப் படம் அதிகம் வேலை மற்றும் அர்ப்பணிப்பைக் கோரும் படம்.
நாங்கள் முதல் முறையாக பேசிக்கொண்ட போது, ‘நீங்கள் மழைக் காட்சிகளில் நடித்திருக்கிறீகளா?’ என்று அவர் கேட்டார். ‘இல்லை, ஆனால், அது எளிதாகவும் அற்புதமாகவும் இருக்கப் போகிறது’ என்று நான் சொன்னேன். அதற்கு பிறகு அவரின் உழைப்பைப் படத்தில் நான் பார்த்தேன்.
நான் இதைக் கட்டாயம் சொல்ல வேண்டும். அவர் கர்ப்பமாக இருந்தபோதும், 100 சதவீத அர்ப்பணிப்புடன் வேலை பார்த்தார். நானும், கீதுவும் (இயக்குநர்) தான் மிகவும் பதற்றத்துடன் இருந்தோம். படப்பிடிப்பில் அவரை கவனமாக பார்த்துக்கொள்ள பவுன்சர்கள் போல செயல்பட்டோம். ஆனால் அவர், தன்னை முழுமையாக படத்துக்கு அர்ப்பணித்திருந்தார். நன்றி கியாரா. இது மிகவும் சிறப்பானது’ என்று யஷ் பேசினார்.
கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ் இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் ‘த டாக்ஸிக்’ படத்தில் கியாரா அத்வானி, ஹூமா குரேஷி, நயன்தாரா, தாரா சுதாரியா, ருக்மினி வசந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
கன்னடம், ஆங்கில மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படம் இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் டப் செய்யப்பட்டு ஆகஸ்ட் 26- ம் தேதி வெளியாக இருக்கிறது.