

தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், ராஜ் பி ஷெட்டி, கிஷோர் உள்ளிட்டோர் நடிக்கும் திரைப்படம், ‘பாக்கெட் நாவல்’. இளையராஜா இசையமைக்கும் இப்படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இதன் கதை, திரைக்கதையை ஆண்ட்ரூ லூயிஸ் எழுதியுள்ளார். டைலர் டர்டன் மற்றும் கினோ ஃபிஸ்ட் நிறுவனங்கள் தயாரிக்கும் இப்படம் பற்றி நடிகை மாளவிகா மோகனன் கூறியிருப்பதாவது: “சில திரைப்படங்கள் உருவாகும்போது, அவை தங்களுக்குள்ளேயே தனி உலகமாக மாறிவிடுகின்றன. அந்த வகையில் இந்தப் படத்தின் ஒரு பகுதியாக நான் இருந்ததைப் பாக்கியமாகக் கருதுகிறேன். ஒரு படத்தை உருவாக்குவதை விட, யாருடன் சேர்ந்து அதை உருவாக்குகிறோம் என்பதுதான் முக்கியம் என்பதை இந்தப் பயணத்தில் புரிந்துகொண்டேன்.
மாதக்கணக்கில் ஒரு குழுவோடு தினமும் பல மணி நேரங்களைப் பகிர்வது, ஒருவரையொருவர் புரிந்துகொள்வது, இணைந்து உணவருந்துவது, நேரக் கணக்கில் பேசுவது, சவாலான நாட்களைக் கடப்பது, உணர்ச்சிப்பூர்வமான ஏற்ற இறக்கங்களை ஒன்றாக எதிர்கொள்வது என்று நமக்கே தெரியாமல் அவர்கள் நமக்கு மற்றொரு குடும்பமாக மாறிவிடுகிறார்கள். விஜய் சேதுபதி அக்கறையும் தாராள மனப்பான்மையும் கொண்டவராக இருந்ததற்கு நன்றி.
உங்களுடன் இந்தப் பயணத்தைக் கடந்த பிறகு, வேறு யாரோடும் இந்த அனுபவத்தைப் பகிர்ந்துகொள்வதை என்னால் நினைத்துப் பார்க்கவே முடியாது. எவ்வளவு நேரமானாலும், எவ்வளவு கடினமாக இருந்தாலும், நான் என் நடிப்பை ஆராய்ந்து சரியாகச் செய்வதற்குத் தேவையான சுதந்திரத்தையும் ஊக்கத்தையும் கொடுத்தீர்கள். நாம் இதற்கு முன் ‘பேட்ட’, ‘மாஸ்டர்’ படங்களில் பணியாற்றி இருந்தாலும், திரையைப் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால் இந்த வாய்ப்பு நீண்ட நாள் பாக்கியாக இருந்தது.
இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா, உண்மையிலேயே ‘கூல்’ மனிதர். மனிதர்களையும் உலகத்தையும் நீங்கள் பார்க்கும் விதம் மிகவும் அரியது. உங்களுடன் பணியாற்றியது வாழ்நாளின் சிறந்த அனுபவம். அதைவிட முக்கியமாக, ஒரு மனிதராகவும் நண்பராகவும் உங்களைப் புரிந்துகொண்டது எனக்குக் கிடைத்த நல்ல விஷயம். ஒரு படைப்பாளியாக உங்களின் இயல்பு என்னை வியப்பில் ஆழ்த்துகிறது. ‘பாக்கெட் நாவல்’ வெறும் திரைப்படம் மட்டுமல்ல, அதையும் தாண்டிய ஓர் உணர்வு. இவ்வாறு மாளவிகா மோகனன் கூறியுள்ளார்.