

விஜய்மராத்தி கவிஞரும் நாடக ஆசிரியருமான ராம் கணேஷ் கட்கரி எழுதிய நாடகங்களில் புகழ்பெற்றது, ‘புண்ய பிரபாவ்’. இந்திய நாடக உலகில், கிளாசிக் எனப் போற்றப்படும் இந்நாடகத்தைத் தழுவி கண்ணதாசன் திரைக்கதை, வசனம் எழுதி உருவாக்கிய படம் ‘மகாதேவி’. நாயகியின் பெயரில் படத்தின் தலைப்பை வைத்தனர். இதை சுந்தர் ராவ் நட்கர்னி, தனது ஸ்ரீகணேஷ் மூவி டோன் சார்பில் தயாரித்து இயக்கினார். நடிகர், ஒளிப்பதிவாளர், தயாரிப்பாளர், இயக்குநர், திரைக்கதையாசியர் என பன்முகத்தன்மை கொண்ட இந்த மங்களூர்க்காரர், மூன்று தீபாவளி கண்ட ‘ஹரிதாஸ்’ படத்தை இயக்கியவர்.
இதில், எம்.ஜி.ஆர் நாயகனாக நடித்தார். சாவித்திரி, மகாதேவியாகவும் பி.எஸ்.வீரப்பா வழக்கம்போல வில்லனாகவும் நடித்தனர். எம்.என்.ராஜம், ஓ.ஏ.கே. தேவர், கே.ஆர்.ராம்சிங், சந்திரபாபு, டி.பி.முத்துலட்சுமி, ஏ.கருணாநிதி, எஸ்.எம்.திருப்பதிசாமி, ‘மாஸ்டர்’ முரளி, கே.என்.வெங்கடராமன், என்.எஸ்.நாராயண பிள்ளை என பலர் நடித்தனர்.
போரில் வெற்றிபெற்றதும் தோல்வி அடைந்த மன்னனையும் அவர் மகள் மகாதேவியையும் கைது செய்து தனது நாட்டுக்கு அழைத்து வருகிறான், மகாராஜா. அவர்களின் நற்குணம் அறிந்து, சிறையில் அடைக்காமல் தங்கள் நாட்டு விருந்தினர்களாக அரண்மனையில் தங்க வைக்கிறார். நாட்டின் மூத்த தளபதி கருணாகரனுக்கு (வீரப்பா) மகாதேவி மீது காதல் வருகிறது. ஆனால், மகாதேவிக்கு இளைய தளபதியான வல்லவன் (எம்.ஜி.ஆர்) மீது காதல் மயக்கம்.
இதற்கிடையே மற்றொரு தளபதியான ஓ.ஏ.கே.தேவருக்கும் மகாதேவி மீது ஆசை. சண்டையில் யார் வெல்கிறார்களோ அவருக்கும் மகாதேவிக்கும் திருமணம் என்று அறிவிக்கிறார் மகாராஜா. ஓ.ஏ.கே.தேவருக்கும் வீரப்பாவுக்குமான சண்டையில் கருணாகரன் வென்று விடுகிறார். இந்தச்சண்டை பற்றி அறியாமல் இருக்கும் வல்லபனை ஒரு சிறுவன் மூலம் தூண்டிவிடுகிறார் மகாதேவி.
பிறகு கருணாகரனுக்கும் வல்லவனுக்கும் நடக்கிறது வாள் சண்டை. இந்த கடுமையான மோதலில் வல்லவன் வென்றுவிட, அவருக்கு மகாதேவியை திருமணம் செய்து வைக்கிறார்கள். இருந்தாலும் மகாதேவி மீதான மோகம் கருணாகரனுக்குப் போகவில்லை. கடத்த முடிவு செய்கிறார். ஆனால் மகாதேவிக்கு பதிலாக அரசனின் வளப்பு மகள் மங்கம்மாவைக் (எம்.என்.ராஜம்) கடத்தி விடுகிறார்கள். தன் நோக்கம் வெளியே தெரியாமல் இருக்க, மங்கம்மாவைத் திருமணம் செய்கிறார் கருணாகரன். இரண்டு தம்பதிகளுக்கும் குழந்தைப் பிறக்கிறது. மகாதேவி மீதான மையல் தெளியாத கருணாகரன், அவளுடைய குழந்தையை கொல்லத் துணிகிறார். இதை அறிந்த மங்கம்மா, குழந்தையை மாற்றி விடுகிறாள். தான் கொன்றது தனது குழந்தை என்பதை அறிகிறார் கருணாகரன். பிறகு என்ன நடக்கிறது என்பது கதை.
கொஞ்சம் சிக்கலான கதைதான் என்றாலும் அதை திரையில் குழப்பமில்லாமல் காட்டியிருந்தனர். இப்படத்தில் பி.எஸ்.வீரப்பா பேசும் ‘மணந்தால் மகாதேவி, இல்லையேல் மரணதேவி’ என்ற வசனம் பிரபலமானது. எம்.என். ராஜம், வீரப்பாவை அத்தான் என்று அழைக்க, “அத்தான், இந்த சத்தான வார்த்தையை கேட்டு செத்தான் கருணாகரன்”, “இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்” என்பது உள்பட இப்படத்தின் வசனங்கள் பேசப்பட்டன.
எம்ஜிஆரின் மிரட்டலான வாள் சண்டைக் காட்சிகளை ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். ஒரு வரலாற்றுத் திரைப்படத்துக்கான போர், காதல், மோகம், சூழ்ச்சி, சதி என அத்தனை அம்சங்களும் இதில் உண்டு. கண்ணதாசனின் பன்ச் வசனமும் எம்.ஜி.ஆரின் ஆக்ரோஷமான சண்டை, அசத்தலான பாடல்கள் என
‘மகாதேவி’யை கொண்டாட ரசிகர்களுக்கு காரணம் இருந்தது. விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசையில் பாடல்கள் ஒவ்வொன்றும் இப்போதும் ரசனையாகவே இருக்கின்றன.
‘குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும்...’, ‘கண்மூடும் வேளையிலும்...’ ‘தந்தன்னா பாட்டு பாடணும் துந்தன்னா தாளம் போடணும்’, ‘உன் திருமுகத்தை ஒரு முகமா’ ‘காக்கா காக்கா மை கொண்டா’, ‘ஏறு பூட்டுவோம் ’, ‘தாயத்து தாயத்து...’, ‘சேவை செய்வதே ஆனந்தம்’ ஆகிய பாடல்கள் வரவேற்பைப் பெற்றன. பாடல்களை மருதகாசி, பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், கண்ணதாசன், தஞ்சை ராமையா தாஸ் எழுதினர். 1957-ம் ஆண்டு இதே தேதியில் (நவ.22) ரிலீஸ் ஆன இந்தப் படம் வரவேற்பைப் பெற்றது.