

நடிகர் விஷால் இயக்குநராக அறிமுகமாகும் ‘மகுடம்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.
விஷால் இயக்கி, நடித்திருக்கும் படம் ‘மகுடம்’. இந்தப் படத்தில் அவருடன் துஷாரா விஜயன், அஞ்சலி, ஜான் விஜய் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இரண்டேமுக்கால் நிமிடங்கள் ஓடும் ‘மகுடம்’ ட்ரெய்லரில் லிங்கா என்கிற கதாபாத்திரத்தின் இளமை, முதுமை தோற்றம், கிருபாகரன் என்கிற சாந்தமான மருந்து விற்பனர் என மூன்று கெட்டப்களில் விஷால் வருகிறார்.
அழகான மனைவி, குழந்தைகள் என குடும்பத்துடன் யார் வம்புக்கும் போகாத கிருபாகரன், காதலையே முரட்டுத்தனமாக வெளிப்படுத்தும் காதலி பின்னால் திரியும் லிங்கா என இரண்டு வாழ்க்கை வேகமாக விரிகிறது. இந்த இரண்டு துருவங்களும் ஒரு புள்ளியில் மோதுவதாய் எதிர்பார்ப்பை கூட்டுகிறது ட்ரெய்லர்.
பாந்தமான குடும்பத் தலைவியாக துஷாராவும், பந்தாவான காதலியாக அஞ்சலியும் கவர்கிறார்கள். கண்ணைக் கவரும் ட்ரெயிலரின் துள்ளலுக்கு கைகொடுத்து இருக்கிறது ஜி.வி.பிரகாஷின் இசை.
கேங்ஸ்டர் விஷாலின் கெட்டப்கள் முந்தைய அவரது ஒரு படத்தின் சாயலை ஞாபகப்படுத்துவதை தவிர்க்க முடியவில்லை. என்றாலும், இந்தக் காதாபாத்திரம் அதன் பிரதிபலிப்பு இல்லை என்று வெள்ளித்திரையில் வரும் படம் விடை சொல்லலாம்.
முதலில், ரவி அரசு இயக்கத்தில் விஷால் நடிப்பில் ‘மகுடம்’ படம் தொடங்கப்பட்டது. படப்பிடிப்பில் இயக்குநர் ரவிக்கும், விஷாலுக்கும் இடையில் கருத்து மோதல் ஏற்பட்டதால், படத்தை விஷால் இயக்குவதாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் வெளிவரும் இந்தப் படம் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாக இருக்கிறது.