

துப்பறியும் த்ரில்லர் திரைப்படங்களுக்கு எப்போதும் தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அடுத்தது என்ன என்கிற எதிர்பார்ப்பு, சீட் நுனியில் உட்கார வைக்கிற பரபர திரைக்கதை என அதுபோன்ற படங்கள் ரசிகர்களைக் கட்டிப் போடுகின்றன. அதனால்தான் உலக அளவில் குடும்ப படங்களை விட த்ரில்லர் திரைப் படங்களே அதிகம் உருவாவதாகச் சொல்கிறார்கள்.
அறிமுக இயக்குநர் ஸ்ரீனி இயக்கி இருக்கும் ‘மாறுவேஷம்’ படமும் அப்படியான துப்பறியும் த்ரில்லர்தான். வைபவ், ராம்கி, வியன்னா என பலர் நடித்திருக்கும் இந்தப் படம் பற்றி ஸ்ரீனியிடம் பேசியதில் இருந்து...
ஐ.டி.வேலையை விட்டுட்டு சினிமாவுக்கு வந்தீங்களாமே?
ஆமா, நிறைய வாசிப்பேன். அப்படியே இலக்கியம் மூலமா சினிமா ஆசை வந்தது. ஐடி நிறுவனத்துல வேலை பார்த்துக்கிட்டே, சினிமா ஆசையை வளர்த்துக் கிட்டேன். அப்புறம் மிஷ்கின் சார்கிட்ட உதவி இயக்குநரா, ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’, ‘பிசாசு’, ‘சவரக்கத்தி’ படங்கள்ல வேலை பார்த்தேன். இந்தப் படம் மூலமா இயக்குநர் ஆகிறேன். இதுதான் என்னைப் பற்றிய சுருக்கம்.
த்ரில்லர் படங்கள் நிறைய வந்திருக்கே?
எத்தனை படம் வந்திருந்தாலும் நாம என்ன சொல்றோம் அப்படிங்கறது தானே முக்கியம். இதுவரை வந்த த்ரில்லர் படங்கள்ல இருந்து, மாறுபட்டதா இந்தப் படம் இருக்கும். ஒரு குடும்பத்துல நடக்கிற கொலை. அதை ஹீரோ எப்படி கண்டுபிடிக்கிறார்னு கதை போகும்.
கதாபாத்திரங்களோட இரட்டை முகங்கள், வெளிப்படற ரகசியங்கள், ரெண்டு அடையாளங்களுக்கு இடையில சிக்கித் தவிக்கிற ஒருத்தரோட வாழ்க்கையை சித்தரிக்கும் சவால்தான் இப்படத்தோட மையம். முகம் மாறலாம். ஆனா, ஒருவரால தன்னோட கடந்த காலத்துல இருந்து தப்பிக்க முடியுமாங்கற கேள்வியை இந்தப் படம் வைக்கும். இதுல அதிகமான வன்முறையோ, ரத்தம் தெறிக்கிற காட்சிகளோ, போதைப் பொருள் விஷயங்களோ இருக்காது. இது எல்லோரும் பார்க்கக் கூடிய படமாக இருக்கும்.
வைபவ் காமெடி படங்கள்தான் அதிகம் பண்ணியிருக்கார்...
இருக்கலாம். இதுல கொலையை விசாரிக்கிற சப் இன்ஸ்பெக்டர் கேரக்டர்ல வர்றார். அவரை சீரியஸாகத்தான் காட்டியிருக்கோம். அதுக்கு அவர் சரியாக பொருந்தினார். முதல்ல இந்தக் கதையை கேட்கும்போது, “நல்லாருக்கு, இந்த கேரக்டருக்கு நான் செட் ஆவேனா? நான் சீரியஸ் கேரக்டர் பண்ணினா எப்படி இருக்கும்?’ங்கற தயக்கம் அவருக்கு இருந்தது. பிறகு அதை சவாலா எடுத்துக் கிட்டு பண்ணியிருக்கார். இந்தப் படம் அவருக்கு நல்ல பெயரைக் கொடுக்கும்னு நம்பறேன்.
இயக்குநர் ஸ்ரீனி
இந்தப் படத்தோட தயாரிப்பாளர் ஒனிரோமான்சி பிக்சர்ஸ் விஜய் ஆனந்த் சினிமாவுக்கு புதுசு. அதனால நானும் சேர்ந்து தயாரிக்கிறேன்னு நடிகர் வைபவும் இணைஞ்சு தயாரிக்கிறார். படத்துல காமெடி இருக்கும். கோட்டை சாமி என்ற கதாபாத்திரத்துல முனீஷ்காந்த் படம் முழுவதும் வர்றார். அவர் வர்ற இடங்கள்ல காமெடி இருக்கும். கதை ஓட்டத்தை கெடுக்காம அதுக்கு வலு சேர்க்கிற மாதிரி காமெடியும், பாடல்களும் இருக்கும்.
புது ஹீரோயின் ஏன்?
புதுமுகத்தை அறிமுகப்படுத்தலாம்னு முதல்லயே முடிவு பண்ணினோம். அப்படி நாங்க ஆடிஷன் வச்சதுல ‘பிக்பாஸ்’ல கலந்துகிட்ட வியன்னா சிறப்பா நடிச்சாங்க. அவங்களை தேர்வு பண்ணினோம். அவங்களைச் சுற்றிதான் கதையே நடக்குது. சும்மா வந்துட்டு போகிற மாதிரி இருக்காது, அதனால சிறப்பா நடிக்கிற ஒருத்தரை தேர்வு பண்ண நினைச்சோம். வியன்னா அதை சரியா பண்ணியிருக்காங்க. அவங்க அப்பாவா ராம்கி சார் நடிச்சிருக்கார். அவருக்கு இது சிறந்த கம்பேக் படமா இருக்கும். படத்துல எல்லா கேரக்டருக்கும் முக்கியத்துவம் இருக்கு.
பீரியட் படம்னு சொன்னாங்களே?
ஆமா. இது 1997ம் ஆண்டுல நடக்கிற கதை. சிசிடிவி கேமரா, செல்போன்கள் இல்லாத காலம் அது. அதனால பழைய ஜமீன் பங்களா மாதிரியான இடம் தேவைப்பட்டது. சென்னையில செட் போட்டு படமாக்கினோம். சென்னை தான் கதைக்களம். பிரம்மாண்டமான திரை அனுபவத்தை இந்தப் படம் கொடுக்கும்.