“பன்முக ஆளுமை பாக்யராஜ் தனது தனி முத்திரையால் அழியாப் புகழ் பெற்றுள்ளார்” - மு.வீரபாண்டியன்

“பன்முக ஆளுமை பாக்யராஜ் தனது தனி முத்திரையால் அழியாப் புகழ் பெற்றுள்ளார்” - மு.வீரபாண்டியன்
Updated on
1 min read

சென்னை: திரைத்துறையில் வசனக் கர்த்தா, நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர் என்ற பன்முக ஆளுமை கொண்டவராக வளர்ந்து, பாக்யராஜ் தனது தனிமுத்திரையை பதித்து அழியாப் புகழ் பெற்றுள்ளார் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் புகழஞ்சலி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திரைப்பட இயக்குநர் கே. பாக்யராஜ் (73) இன்று சென்னையில் காலமானர் என்ற துயரச் செய்தி அறிந்து அதிர்ச்சியுற்றோம். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகில் உள்ள வெள்ளால் கோயிலில் 1953 ஜனவரி 7 ஆம் தேதி பிறந்த பாக்யராஜ் தீவிரமான எம்ஜிஆர் ரசிகர்.

சிறு வயதில் இருந்தே நடிப்பின் மீது ஆர்வம் காட்டி வளர்ந்தவர். அண்மையில் காலமான இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் முதல் படமான “16 வயதினிலே” என்ற திரைப்படத்தில், அவரது உதவியாளராக திரையுலகில் நுழைந்தவர் பாக்யராஜ். தொடர்ந்து வசனக் கர்த்தா, நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர் என்ற பன்முக ஆளுமை கொண்டவராக வளர்ந்து, தனது தனிமுத்திரையை பதித்து அழியாப் புகழ் பெற்றுள்ளார்.

திரைத்துறையில் மட்டும் அல்லாமல், அரசியலிலும் கால்பதித்து நடைபோட்டவர். அதிமுக உறுப்பினராக இணைந்து செயல்பட்டவர். எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு, எம்ஜிஆர் மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற தனிக் கட்சி அமைத்து செயப்பட்டவர். இந்தக் கட்சியை கலைத்துவிட்டு மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.

முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவுடன் முரண்பட்டு, அங்கிருந்து விலகி திமுகவில் சேர்ந்து சில காலம் செயல்பட்டார். பிறகு கட்சி சார்ந்த அரசியலில் இருந்து விலகி விட்டார்.

பத்திரிகையாளராக, “பாக்யா” மாத இதழ் தொடங்கி அதன் ஆசிரியராக செயல்பட்டார். கொங்கு நாட்டு பேச்சு வழக்கில், அவரது இயல்பான பேச்சு பலரையும் பரவலான ரசிகர் வட்டத்தை உருவாக்கித் தந்தது.

பாக்யராஜிடம் பணியாற்றியவர்கள் பாண்டியராஜன், ரா.பார்த்திபன், வி.சேகர், லிவிங்ஸ்டன் போன்றோர் முன்னணி இயக்குநர்களாக திகழ்ந்து வருகின்றனர்.

இயக்குநர் கே.பாக்கியராஜ் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. அவரைப் பிரிந்து வாடும் அவரது வாழ்விணையர் பூர்ணிமா பாக்யராஜ், மகள் சரண்யா, மகன் சாந்தனு மற்றும் திரையுலக நண்பர்களுக்கு ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறது” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

“பன்முக ஆளுமை பாக்யராஜ் தனது தனி முத்திரையால் அழியாப் புகழ் பெற்றுள்ளார்” - மு.வீரபாண்டியன்
கர்நாடக பின்னணி கொண்டவரை தமிழகத்தின் டெல்லி பிரதிநிதியாக்கியது ஏன்? - விளக்கம் கோரும் பிரேமலதா

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in