

சென்னை: விக்னேஷ் சிவன் இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், எஸ்.ஜே.சூர்யா, கீர்த்தி ஷெட்டி நடிப்பில் உருவாகியுள்ள ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. நீண்ட எதிர்பார்ப்புக்குப் பின் வெளியாகியுள்ள இந்த ட்ரெய்லர், சயின்ஸ் ஃபிக்ஷன் கலந்த காதல் கதையை பற்றி பேசுகிறது.
ட்ரெய்லர் எப்படி? - படம் 2040-ஆம் ஆண்டு நடப்பது போன்ற எதிர்காலப் பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ளது ட்ரெய்லரின் மூலம் தெரிகிறது. இதில் எஸ்.ஜே.சூர்யா, காதலுக்கு இன்சூரன்ஸ் வழங்கும் ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தின் தலைவராக நடித்துள்ளார். மனித உணர்வுகளை விட, ஒரு மொபைல் ஆப் மூலம் ஜோடிகளின் பொருத்தத்தைக் கணக்கிட்டு, காதலை உறுதி செய்யும் விசித்திரமான நிறுவனமும், அதற்கு நேரெதிராக செயல்படும் ஒரு இளைஞனைப் பற்றி ட்ரெய்லர் பேசுகிறது.
வைப் வசி என்ற கதாபாத்திரத்தில் வரும் பிரதீப் ரங்கநாதன், தொழில்நுட்பத்தை எதிர்த்து, உண்மையான காதலுக்கு மென்பொருள் தேவையில்லை என்பதை நிரூபிக்கப் போராடுகிறார். பசுமை உலகம் என்ற இடத்தை நிர்வகிப்பவராக சீமான் வருகிறார். அனிருத் ரவிச்சந்தரின் துள்ளலான இசை மற்றும் ரவி வர்மனின் ஒளிப்பதிவு ட்ரெய்லரில் கவனம் ஈர்க்கின்றன.