“என்னை கைது செய்ய உத்தரவா?” - இயக்குநர் லிங்குசாமி விளக்கம்

“என்னை கைது செய்ய உத்தரவா?” - இயக்குநர் லிங்குசாமி விளக்கம்
Updated on
1 min read

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான லிங்குசாமி மற்றும் அவரது சகோதரர் சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோருக்கு, காசோலை மோசடி வழக்கில் சென்னை அல்லிகுளம் நீதிமன்றம் ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

இயக்குனர் லிங்குசாமி மற்றும் சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர் திருப்பதி பிரதர்ஸ் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகின்றனர். கடந்த 2016-ம் ஆண்டு, தங்களது தொழில் மேம்பாட்டிற்காக பேஸ்மேன் பைனான்ஸ் என்ற நிறுவனத்திடம் இருந்து சுமார் 35 லட்சம் ரூபாயைக் கடனாகப் பெற்றுள்ளனர்.

ஒப்பந்தப்படி அந்தப் பணத்தைத் திருப்பிச் செலுத்தாத நிலையில், வட்டியுடன் சேர்த்து மொத்தம் 48.68 லட்சம் ரூபாயைச் செலுத்தும்படி பேஸ்மேன் நிறுவனத்தின் இயக்குனர் ராகுல் குமார் தரப்பில் நோட்டீற் அனுப்பப்பட்டது.

இதனைத் தொடர்ந்து லிங்குசாமி வழங்கிய காசோலைகள் பவுன்ஸ் ஆனதால், இது குறித்து 2018-ம் ஆண்டு பேஸ்மேன் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த அல்லிகுளம் நடுவர் நீதிமன்றம், லிங்குசாமி மற்றும் அவரது சகோதரர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாகக் கூறி, இன்று இருவருக்கும் தலா 1 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. மேலும், நிலுவைத் தொகையான 48.68 லட்சம் ரூபாயை இரண்டு மாதங்களுக்குள் வழங்க வேண்டும் என்றும், தவறினால் கூடுதலாக 2 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து லிங்குசாமிக்கு எதிராக கைது வாரன்ட் பிறப்பிக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின. இதற்கு விளக்கம் அளித்துள்ள லிங்குசாமி, “என் மீதும், என் நிறுவனத்தின் மீதும் பேஸ்பேன் நிறுவனம் காசோலை வழக்கு மாற்றுமுறை ஆவணச் சட்டம் 138-ன் கீழ் தாக்கல் செய்தனர். அவ்வழக்கில் இன்று பதினொன்பது பெருநகர குற்றவியல் நீதிமன்றம் எங்களுக்கு எதிராக தீர்ப்பு வழங்கியுள்ளனர். மேலும், நாங்கள் மேல்முறையீடு செய்வதற்கு 30 நாள் கால அவகாசம் வழங்கியுள்ளனர். நாங்கள் இதை சட்டப்படி மேல்முறையீடு செய்து எங்கள் மீதும் எங்களின் நிறுவனத்தின் மீதும் போடப்பட்ட பொய்வழக்கை சட்டப்படி மேல்முறையீடு செய்ய இருக்கிறோம்.

எங்கள் மீது கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக பொய்யான செய்தியை கூறி வருகிறார்கள். அப்படியான செய்தியை பத்திரிக்கை நண்பர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் யாரும் பரப்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். எங்கள் மீது பரப்பப்படும் வதந்திகள் பொய்யானவை என்று கூறிக்கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தற்போது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“என்னை கைது செய்ய உத்தரவா?” - இயக்குநர் லிங்குசாமி விளக்கம்
SIR | சென்னை மாவட்டத்தில் 14.25 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in