ட்ரோல் செய்வதால் மட்டுமே ஒரு படத்தின் வெற்றியை தடுத்து விட முடியாது - லிங்குசாமி கருத்து
நடிகர் சூர்யா, சமந்தா, வித்யூத் ஜம்வால் நடித்து, கடந்த 2014-ம் ஆண்டு வெளியான படம், ‘அஞ்சான்’. என்.லிங்குசாமி இயக்கிய இந்தப் படத்தைத் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்தது. யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் ஹிட்டாகி இருந்தன. இப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இந்நிலையில் டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டுள்ள இப்படத்தின் நீளம் குறைக்கப்பட்டு இப்போது மீண்டும் வெளியாகிஉள்ளது.
இந்நிலையில் ரீ ரிலீஸ் குறித்து லிங்குசாமி கூறியதாவது: இந்தப் படத்தை முதலில் எடுத்தபோது 2 மணி நேரம் 36 நிமிடம் ஓடும் விதமாக இருந்தது. இப்போது 36 நிமிடங்கள் குறைத்துள்ளோம். மறு படத்தொகுப்பு செய்து தற்போது ரீ ரிலீஸ் செய்வதற்குக் காரணம், 11 வருடங்களுக்கு முன்பு அதிகப்படியான ட்ரோல்களில் சிக்கியது இந்தப் படம் தான்.
அதே நேரம் இப்படத்தை உண்மையாக ரசித்த பலர் இப்போது பார்த்தாலும் இந்தப் படத்தை ஏன் அப்படி திட்டினார்கள் என என்னிடம் கூறியிருக்கிறார்கள். சினிமாவை புரட்டிப்போடும் உலக மகா கதை என்றெல்லாம் இதைச் சொல்லவில்லை. சூர்யா ரசிகர்கள் அவரை எப்படி எல்லாம் திரையில் பார்க்க ஆசைப்பட்டார்களோ, அதெல்லாம் இந்தப் படத்தில் வந்திருக்கிறது.
திருப்பதி பிரதர்ஸ், கோலி சோடா, மஞ்சப்பை, கும்கி என தொடர்ச்சியாகப் பல வெற்றி படங்களைக் கொடுத்து வந்தது. தொடர் வெற்றி கூட ஒரு சிலருக்குக் கோபம், வெறுப்பு, பொறாமை இவற்றை ஏற்படுத்தி விடும். முதன்முதலில் அப்படி எங்களை அடித்தவர்கள், இப்போது தயவு தாட்சண்யம் இன்றி எல்லா படங்களையும் அடிக்கிறார்கள். எனக்கு இப்போது பயமே இல்லை. 11 வருடத்துக்கு முன்பு திட்டியதை விடவா இப்போது திட்டப் போகிறார்கள்? ட்ரோல் செய்வதால் மட்டுமே ஒரு படத்தின் வெற்றியை தடுத்து விட முடியாது.
இந்தப் படத்தை மிகவும் விரும்பி எடுத்தேன். அதே நேரம் எல்லா படங்களுமே ரன், ஆனந்தம், சண்டக்கோழி போல வெற்றியை தொட்டு விடுவதில்லை. மணிரத்னம், ஷங்கர் போன்றவர்களுக்கு கூட மிகப்பெரிய அளவில் நெகட்டிவ் கருத்துக்களை பரப்புகிறார்கள். அடுத்ததாக பிப்ரவரியில் புதிய படத்தை இயக்க தயாராகி விட்டேன். அதில் இசை அமைப்பாளர் வித்யாசாகரின் மகன் கதாநாயகனாக நடிக்கிறார். இவ்வாறு லிங்குசாமி கூறினார்.
