ஃபோகஸ் புல்லர்: கண்ணுக்குத் தெரியாத கலைஞர் | ஒளி என்பது வெளிச்சமல்ல 43

ஃபோகஸ் புல்லர்: கண்ணுக்குத் தெரியாத கலைஞர் | ஒளி என்பது வெளிச்சமல்ல 43
Updated on
3 min read

இயக்​குநர், நடிகர்​கள், ஒளிப்​ப​தி​வாளர் ஆகியோரின் பங்​களிப்​பு​களைப் பற்றி பார்​வை​யாளர்​கள் அறிந்​திருப்​பார்​கள். ஆனால் திரை​யில் ஒரு காட்சி தெளி​வாக​வும், கூர்​மை​யாக​வும் தோன்​று​வதற்​குப் பின்​னால் முக்​கிய​மான பங்​களிப்பை வழங்​கும் தொழில்​நுட்​பக் கலைஞர், ஃபோகஸ் புல்​லர் அல்​லது முதல் உதவி கேம​ராமேன்.

ஒளிப்​ப​தி​வாளரின் கற்​பனையைத் துல்​லிய​மாகத் திரை​யில் பதிவு செய்ய உதவும் அமை​தி​யான நிபுணர் இவரே. ஒரு நடிகரின் கண்​கள் துல்​லிய​மாக ஃபோகஸில் இருப்​பதும், ரேக் ஃபோகஸ் காட்​சி​யில் பார்​வை​யாளரின் கவனம் சரி​யான இடத்துக்கு நகர்​வதும், கேம​ரா​வின் தொழில்​நுட்ப செயல்​பாடு​கள் சீராக நடை​பெறு​வதும் இவரது பொறுப்​பாகும்.

ஃபோகஸ் புல்​லரின் பங்கு

மும்பை திரைப்​படத் துறை​யில், குறிப்​பாக ஹிந்தி திரைப்​படங்​களில், ஃபோகஸ் புல்​லர் பெரும்​பாலும் சுயாதீன தொழில்​நுட்​பக் கலைஞ​ராக செயல்​படு​கிறார். அவர் நேரடி​யாக ஒளிப்​ப​தி​வாள​ருடன் இணைந்து பணி​யாற்​று​வார்.

ஆனால் தென்​னிந்​தி​யத் திரைப்​படத் துறை​யில், பெரும்​பாலான கேமரா வாடகை நிறு​வனங்​கள் தங்​களது கேமரா தொகுப்​பு​களு​டன் அனுபவ​மிக்க ஃபோகஸ் புல்​லர்​களை​யும் அனுப்​பு​கின்​றன.

இவர்​கள், கேம​ராவைப் பராமரிப்​பது, லென்​ஸ்​களைச் சோதிப்​பது, கேமரா மெனுக்​களை இயக்​கு​வது, ரெசல்​யூஷன், ஃபிரேம் ரேட், லாக் செட்​டிங்​ஸ், எல்​யூடி போன்ற அமைப்​பு​களை நிர்​வகிப்​பார்​கள். இன்​றைய டிஜிட்​டல் யுகத்​தில் பல ஃபோகஸ் புல்​லர்​கள் ஒளிப்​ப​தி​வாள​ருக்கு அடுத்​த​படி​யாக கேம​ராவை நன்கு அறிந்​திருப்​பார்​கள்.

பெரும்​பாலானவர்​கள் ஃபோகஸ் என்​றால் படம் தெளி​வாக இருப்​ப​தென்று நினைக்கிறார்​கள். ஆனால் ஃபோகஸ் என்​பது ஒரு கதை சொல்​லும் கரு​வி. ஒரு காட்​சி​யில் யாரை பார்​வை​யாளர்​கள் கவனிக்க வேண்​டும் என்​பதை தீர்​மானிப்​பது பெரும்​பாலும் ஃபோகஸ்​தான்.

உதா​ரண​மாக, ஒரு பெண் முன்​புறத்​தில் அமர்ந்​திருக்​கிறார். பின்​னணி​யில் ஒரு​வர் அறைக்​குள் நுழைகிறார். முதலில் பெண்​ணின் மீது ஃபோகஸ் இருக்​கும். பிறகு மெது​வாக பின்​னணி​யில் இருக்​கும் நபரின் மீது ஃபோகஸ் மாறும். இதுவே ரேக் ஃபோகஸ். எந்த வசன​முமின்றி இயக்​குநர் பார்​வை​யாளரின் கவனத்தை மாற்​றி​விடு​கிறார்.

ஒளிப்​ப​தி​வாளரின் கலைக் கரு​வி​யாக ஃபோகஸ்

இன்​றைய ஒளிப்​ப​தி​வாளர்​கள் ஒளி மற்​றும் நிறங்​களைப் போலவே ஃபோகஸை​யும் ஒரு கலை வடிவ​மாகப் பயன்​படுத்​துகிறார்​கள். தேர்ந்​தெடுக்​கப்​பட்ட ஃபோகஸ் (Selective Focus); ஒரு கூட்​டத்​தில் இருக்​கும் ஒரே மனிதரை மட்​டும் தெளி​வாகக் காட்​டலாம். இதன் மூலம் தனிமை, பயம், காதல், மன அழுத்​தம் போன்ற உணர்​வு​களை வெளிப்​படுத்த முடி​யும்.

ஆழமற்ற ஃபோகஸ் (Shallow Depth of Field)

T1.5, T2 போன்ற அகல அபர்ச்​சர்​களில் படமாக்​கும்​போது பின்​னணி மங்​கலாக மாறும். இதனால் பார்​வை​யாளரின் கவனம் முழு​வதும் கதா​பாத்​திரத்​தின் கண்​களி​லேயே இருக்​கும்.

ஆழமான ஃபோகஸ்

சில இயக்​குநர்​கள் மற்​றும் ஒளிப்​ப​தி​வாளர்​கள் முன்​புறம் முதல் பின்​னணி வரை அனைத்​தை​யும் ஃபோகஸில் வைத்​திருப்​பார்​கள். இதன் மூலம் பார்​வை​யாளர்​கள் எந்​தப் பகு​தி​யைப் பார்க்க வேண்​டும் என்​ப​தை அவர்​களே தேர்வு செய்ய முடி​யும்.

ஒளிப்​ப​தி​வாளர் - ஃபோகஸ் புல்​லரின் தொடர்பு

ஒரு சிறந்த ஷாட் உரு​வாக ஒளிப்​ப​தி​வாள​ரும் ஃபோகஸ் புல்​லரும் தொடர்ந்து தகவல் பரி​மாற்​றத்​தில் இருக்க வேண்​டும்.ஒளிப்​ப​தி​வாளர் பொது​வாக, நடிகர் எங்கு நிற்​பார், எவ்​வளவு தூரம் நடப்​பார், ஃபோகஸ் எப்​போது மாற வேண்​டும், எந்​தக் கண் ஃபோகஸில் இருக்க வேண்​டும் என்​பதை முன்​கூட்​டியே விவரிப்​பார்.

பல அனுபவ​மிக்க ஒளிப்​ப​தி​வாளர்​கள் ஃபோகஸ் புல்​லருடன் இணைந்து ரிகர்​சல் செய்​வார்​கள். சில நேரங்​களில், “இரண்​டாவது வசனத்​தில் ரேக் ஃபோகஸ்’’, “அவர் திரும்​பும்​போது கண்​களில் ஃபோகஸ்’’, “பின்​னணி கதவு திறந்​ததும் ஃபோகஸ் மாற்​றுங்​கள்” என்று துல்​லிய​மான வழி​காட்​டு​தல்​களும் வழங்​கப்​படு​கின்​றன. அதனால்​தான் சிறந்த ஃபோகஸ் புல்​லர் தொழில்​நுட்ப நிபுணர் மட்​டுமல்ல; கதை சொல்​லலை​யும் புரிந்​து​கொள்​ளும் கலைஞ​ராக இருக்க வேண்​டும்.

ஃபாலோ ஃபோகஸ் மற்​றும் அளவீடு​கள்

நடிகர் நகரும்​போது ஃபோகஸை அவருடன் நகர்த்​து​வது ஃபாலோ ஃபோகஸ். இதற்​காக டேப் மெஷர், லேசர் டிஸ்​டன்ஸ் மீட்​டர், வயர்​லெஸ் ஃபோகஸ் சிஸ்​டம் போன்ற கருவி​களை ஃபோகஸ் புல்​லர் பயன்​படுத்​துகின்​றனர். கேம​ரா​வின் சென்​சார் பிளேனிலிருந்து நடிகரின் கண்​கள் வரை தூரம் அளக்​கப்​படு​கிறது. அனுபவ​மிக்க ஃபோகஸ் புல்​லர்​கள் பல நேரங்​களில் வெறும் கண் மதிப்​பீட்​டின் மூலமே தூரத்​தைக் கணித்​து​விடு​வார்​கள்.

லென்ஸ் மாற்​றம் மற்​றும் ஜூம் கட்​டுப்​பாடு

லென்ஸ் மாற்​று​தல், லென்ஸ் சுத்​தம் செய்​தல், பேக் ஃபோகஸ் சரி​பார்த்​தல், ஜூம் இயக்​கத்​தின் போது ஃபோகஸ் பராமரித்​தல் போன்ற பணி​களை​யும் மேற்​கொள்​கிறார்​. ஃ​போகஸ் புல்​லர். சில ஜூம் ஷாட்​களில் ஜூமும் ஃபோகஸும் ஒரே நேரத்​தில் இயக்​கப்பட வேண்​டும். இதற்கு மிக​வும் உயர்ந்த தொழில்​நுட்​பத் திறன் தேவைப்​படுகிறது.

நவீன டிஜிட்​டல் சினி​மா​வில் ஃபோகஸ் புல்​லர்

இன்​றைய ஃபோகஸ் புல்​லர்​கள் வெறும் ஃபோகஸ் நிபுணர்​கள் அல்ல. ஃபால்ஸ் கலர் அமைத்​தல், வேவ்ஃ​பார்ம் மானிட்​டர் கண்​காணித்​தல், எக்​ஸ்​போஷர் உதவி, எல்​யூடி ஏற்​று​தல், கேமரா மெனு நிர்​வாகம் போன்ற பணி​களி​லும் ஒளிப்​ப​தி​வாள​ருக்கு உதவு​கின்​றனர்.

கேமரா பாது​காப்பு

படப்​பிடிப்​பின் போது மழை, மணல், வெடிப்​பு, கண்​ணாடி சிதறல்​கள், ஆக் ஷன் காட்​சிகளின் போது அபா​யங்​கள் ஏற்​படலாம். அப்​போது கேம​ரா​வின் முன்​புறத்​தில் பாது​காப்பு கண்​ணாடி பொருத்​து​வது ஃபோகஸ் புல்​லரின் பொறுப்​பாகும். இது விலை​யுயர்ந்த லென்​ஸ்​களை​யும் சென்​சார்​களை​யும் பாது​காக்​கிறது.

T2 மற்​றும் அதற்​குக் கீழான அபர்ச்​சர்​களின் சவால்

இன்​றைய சினி​மா​வில் பல ஒளிப்​ப​தி​வாளர்​கள் T2, T1.5, T1.3 போன்ற அகல அபர்ச்​சர்​களில் படமாக்க விரும்​பு​கிறார்​கள். இதனால் பின்​னணி அழகாக மங்​கும். கதா​பாத்​திரம் பிரிந்து தெரி​யும்.

காட்​சிக்கு சினி​மாடிக் தோற்​றம் கிடைக்​கும். ஆனால் இது ஃபோகஸ் புல்​லருக்கு மிகப்​பெரிய சவால். 85 மில்​லிமீட்​டர் லென்​ஸில் T1.5 பயன்​படுத்​தும்​போது, ஃபோகஸ் பகுதி சில சென்​டிமீட்​டர்​கள் மட்​டுமே இருக்​கலாம். நடிகர் சிறிது முன் நகர்ந்​தால்​கூட ஃபோகஸ் தவறி​விடும். அந்​தச் சூழலில் ஃபோகஸ் புல்​லரின் அனுபவம், கணிப்​பு, திறன் மற்​றும் துல்​லி​யம் மிக அவசி​ய​மாகிறது.

மனிதக் கண் மற்​றும் தொழில்​நுட்​பத்​தின் இணைவு

லேசர் கருவி​கள், வயர்​லெஸ் ஃபோகஸ் அமைப்​பு​கள், டிஜிட்​டல் மானிட்​டர்​கள் அனைத்​தும் உதவி​னாலும் ஃபோகஸ் புல்​லரின் மிகப் பெரிய பலம் அவரது அனுபவம்​தான்.

நடிகரின் அசைவு​களை முன்​கூட்​டியே கணிப்​பதும், கேமரா இயக்​கத்​தைப் புரிந்​து​கொள்​வதும், ஒளிப்​ப​தி​வாளரின் காட்சி மொழியை உணர்​வதும் அவரை சிறந்த ஃபோகஸ் புல்​ல​ராக மாற்​றுகிறது.

திரைப்​படத்​தில் ஒளி, லென்​ஸ், கேமரா மற்​றும் இயக்​கம் ஆகிய அனைத்​தை​யும் இணைக்​கும் மறை​முகக் கலைஞர் ஃபோகஸ் புல்​லர். அவர் பார்​வை​யாளரின் கவனத்தை வழிநடத்​தும் கதைசொல்​லி.

ஒளிப்​ப​தி​வாளர் ஒரு காட்​சியை உரு​வாக்​கு​கிறார்​; ஃபோகஸ்​ புல்​லர்​ அந்​தக்​ காட்​சி​யில்​ எதைப்​ பார்க்​க வேண்​டும்​ என்​ப​தை பார்​வை​யாள​ருக்​குச்​ சொல்​கிறார்​.

(புதன்​தோறும்​ ஒளி​காட்​டுவோம்​)

- cjrdop@gmail.com

ஃபோகஸ் புல்லர்: கண்ணுக்குத் தெரியாத கலைஞர் | ஒளி என்பது வெளிச்சமல்ல 43
ஆடை வடிவமைப்பு, சிகை அலங்காரம்: திரையை உயிர்ப்பிக்கும் காட்சிமொழி | ஒளி என்பது வெளிச்சமல்ல 42

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in