2025-ல் 285 தமிழ்ப் படங்கள் ரிலீஸாகி சாதனை: மொத்த வசூல் ரூ.2,950 கோடி, நிகர நஷ்டம் ரூ.300 கோடி!

2025-ல் 285 தமிழ்ப் படங்கள் ரிலீஸாகி சாதனை: மொத்த வசூல் ரூ.2,950 கோடி, நிகர நஷ்டம் ரூ.300 கோடி!
Updated on
3 min read

எப்போதும் இல்லாத அளவுக்கு 2025-ம் வருடம் திரைப்படங்களின் ரிலீஸில், தமிழ் சினிமா சாதனைப் படைத்திருக்கிறது. ஒவ்வொரு வருடமும் தமிழில் உருவாகும் திரைப்படங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன என்றாலும் இந்த வருடம் யாரும் எதிர்பார்க்காத வரையில் 285 திரைப்படங்கள் வெளியாகி வியப்பை ஏற்படுத்தியுள்ளன.

இதற்கு முன் இவ்வளவு திரைப்படங்கள் வெளியானதில்லை. கடந்த 2024-ம் ஆண்டு 241 திரைப்படங்கள் மட்டுமே வெளியாகி இருந்தன. 2025-ல் ஜனவரி முதல் நவம்பர் மாதம் வரை 262 திரைப் படங்கள் வெளியாகி இருந்த நிலையில், நவம்பரில் மட்டும் 32 திரைப் படங்கள் வெளியாகி ஆச்சரியம் அளித்தன. ஒரே மாதத்தில் இத்தனை படங்கள் இதற்கு முன் வெளியானதில்லை. வருடத்தின் கடைசி மாதமான டிசம்பரில் 23 திரைப்படங்கள் ரிலீஸ் ஆகின. ஒட்டு மொத்தமாக, 2025-ம் வருடம் 285 திரைப்படங்கள் வெளியாகி சாதனைப் படைத்துள்ளது.

35 படங்கள் வெற்றி: இந்த வருடம் திரைப்படங்களின் வெற்றியைப் பொறுத்தவரை, கலவையான முடிவுகளே கிடைத்துள்ளன. யாரும் எதிர்பார்க்காத வகையில் சிறுபட்ஜெட்டில் தயாரான பல படங்கள் வெற்றி பெற்றுள்ளன. அதே நேரம் அதிக எதிர்பார்ப்புடன் வெளியான ‘தக்லைஃப்’, சூர்யாவின் ‘ரெட்ரோ’, தனுசின் ‘இட்லி கடை’, சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ உள்ளிட்ட திரைப்படங்கள் வெற்றியை தரவில்லை.

மணி ரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், ‘நாயகன்’ படத்துக்குப் பிறகு அதாவது 36 வருடங்களுக்குப் பிறகு இணைந்ததால் அதிக எதிர்பார்ப்போடு வெளியாகி ஏமாற்றத்தை தந்தது ‘தக் லைஃப்’. இருந்தாலும் சில படங்களுக்கான ‘ரிப்போர்ட்' சரியாக இல்லை என்றாலும் சாட்டிலைட், ஓடிடி/ டிஜிட்டல் உரிமைகளின் அடிப்படையில் பட்ஜெட்டில் இருந்து அதிகம் சம்பாதித்துள்ளதாகக் கூறுகிறார்கள்.

அதில், கூலி, 3 பிஹெச்கே, ஆண்பாவம் பொல்லாதது, ஆரோமலே, ஆர்யன், பேட் கேர்ள், பைசன், டெவில் டபுள் நெக்ஸ்ட் லெவல், டிஎன்ஏ, டிராகன், ட்யூட், லெவன், ஃபயர், கேங்கர்ஸ், குட் பேட் அக்லி, ஹவுஸ் மேட்ஸ், குடும்பஸ்தன், மாமன், மார்கன், மதகஜராஜா, மிடில் கிளாஸ், மதராஸி, மர்மர், ஓஹோ எந்தன் பேபி, எமகாதகி, பறந்து போ, பெருசு, ரெட்ரோ, ரிவால்வர் ரீட்டா, சக்தி திருமகன், ஸ்வீட் ஹார்ட், டெஸ்ட், தலைவன் தலைவி, டூரிஸ்ட் பேமிலி, சிறை ஆகிய திரைப்படங்கள் கமர்ஷியலாக வெற்றிபெற்றுள்ளன.

ரூ.100 கோடி கடந்த படங்கள்!: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘கூலி’ அதிக எதிர்பார்ப்புடன் வெளியானது. இதில் சத்யராஜ், நாகார்ஜுனா, ஆமிர்கான், ஸ்ருதிஹாசன் உள்பட பலர் நடித்திருந்தனர். இந்தப் படம் உலகம் முழுவதும் ரூ.501.25 கோடி வசூலித்தது. தமிழ்நாட்டில் மட்டும் ரூ.144.25 கோடியை வசூலித்துள்ளது. அஜித்தின் ‘குட் பேட் அக்லி’, தமிழ்நாட்டில் ரூ.145.50 கோடியும் உலகம் முழுவதும் ரூ.238.50 கோடியும் பெற்றுள்ளது. அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன் நடித்த ‘டிராகன்’ மொத்தமாக ரூ.147 கோடியும் அஜித்தின் ‘விடாமுயற்சி’ ரூ.138 கோடியும் வசூலித்தன. பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ, சரத்குமார் நடித்த ‘ட்யூட்’, தமிழ்நாட்டில் ரூ.56.50 கோடியும் ஒட்டு மொத்தமாக ரூ.114.50 கோடியும் ஈட்டியுள்ளது.

கவனிக்கப்பட்ட படங்கள்: இந்த வருடம் வெளியான சில படங்கள் கமர்ஷியலாக வெற்றி பெறவில்லை என்றாலும் விமர்சன ரீதியாகக் கவனிக்கப் பட்டன. அவை, அங்கம்மாள், காந்தி கண்ணாடி, கெவி, ஹவுஸ், காதல் என்பது பொதுவுடமை, காந்தா, கிணறு, மாயக்கூத்து, மெட்ராஸ் மேட்னி.

மொத்த முதலீடு: தமிழ் சினிமாவில் இந்த வருடம் சுமார் ரூ.3,280 கோடி முதலீடு செய்யப் பட்டுள்ளது. தயாரிப்பு செலவாக ரூ.3,050 கோடியும் பிரின்ட் மற்றும் பப்ளிசிட்டிக்கு ரூ.230 கோடியும் செலவழிக்கப்பட்டுள்ளன. இதில் தயாரிப்பாளர்களுக்குக் கிடைத்த மொத்த வருமானம் சுமார் ரூ.2,950 கோடி. டிஜிட்டல்/ஓடிடி உரிமை மூலம் 38% (ரூ.1,125 கோடி), திரையரங்க வசூல் 21% (ரூ.605 கோடி), சாட்டி லைட் உரிமை மூலம் 12% (ரூ.35 கோடி) வருமானம் கிடைத்துள்ளன. அதில், மொத்தம் ரூ.330 கோடி நிகர நஷ்டத்தைத் தமிழ் சினிமா சந்தித்திருக்கிறது. அதன்படி ரூ.2600 கோடி மட்டுமே 2025-ம் ஆண்டு தயாரிப்பாளர்களுக்கு கிடைத்துள்ளன. இதில் திரையரங்க வசூலை விட, ஓடிடி மூலம் கிடைத்துள்ள வருமானம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2023-ம் ஆண்டு ஜெயிலர், லியோ, துணிவு, மார்க் ஆண்டனி ஆகிய பெரிய படங்களின் மூலம் ரூ.4000 கோடி பாக்ஸ் ஆபீஸ் வசூல் கிடைத்தது. 2024-ம் ஆண்டு அமரன், கோட், அரண்மனை 4, வேட்டையன் உள்பட சில படங்கள் மூலம் ரூ.3000 கோடி பாக்ஸ் ஆபீஸ் வசூல் கிடைத்தாலும் 2023-ம் ஆண்டை விட குறைந்தது. 2025-ம் ஆண்டு அதையும் விட பாக்ஸ் ஆபீஸ் வசூல் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த வருடத்தின் ஸ்டார்: இந்த வருடத்தின் ஸ்டார் நடிகர் பிரதீப் ரங்கநாதன். அவர் இயக்கி, நடித்த ‘லவ் டுடே’ (2022), ரூ.100 கோடி வசூலைத் தந்தது போலவே, 2025-ல் அவர் நடித்து வெளியான ‘டிராகன்’, ‘ட்யூட்’ ஆகிய படங்கள் அடுத்தடுத்து ரூ.100 கோடி வசூலைப் பெற்றன. ஒரே ஆண்டில் அவர் நடித்து 2 படங்கள் ரூ.100 கோடி வசூல் செய்திருப்பது சாதனைதான். மொத்தமாக அவர் நூறு கோடி வசூலில் ஹாட்ரிக் அடித்திருக்கிறார். இந்த வருடத்தின் ஸ்டார் ஹீரோ அவர்தான் என்கிறார்கள், தயாரிப்பாளர்கள் சிலர்.

வசூல் குவித்த டப்பிங் படங்கள்: கன்னடத்தில் உருவான ‘காந்தாரா: சாப்டர் 1’, தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட 5 மொழிகளில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றியைப் பெற்றுள்ளது. உலகம் முழுவதும் ரூ.852 கோடியை அள்ளிய இப்படம், தமிழில் மட்டும் ரூ.70 கோடி வசூலித்துள்ளது. துல்கர் சல்மான் தயாரிப்பில், கல்யாணி பிரியதர்ஷன், நஸ்லென் நடித்து வெற்றி பெற்ற ‘லோகா- சாப்டர் 1 சந்திரா’ ரூ.25 கோடி வசூல் செய்திருக்கிறது.

ரீ-ரிலீஸில் ‘படையப்பா’: ஏற்கெனவே ரிலீஸ் ஆகி வெற்றி பெற்ற படங்களை மீண்டும் வெளியிடும் போக்கு சமீபகாலமாக அதிகரித்திருக்கிறது. அந்த வகையில் ரஜினியின் ‘படையப்பா’, டிச.12-ம் தேதி வெளியானது. இந்தப் படம் தமிழ் நாட்டில் மட்டும் ரூ.15 கோடியையும் உலகம் முழுவதும் ரூ.20 கோடியையும் வசூலித்துள்ளது. ரீ ரிலீஸிலும் அள்ளிக்கொடுத்த படம் இதுவாகத்தான் இருக்கும். விஜய்யின் ‘சச்சின்’ திரைப்படம் ரூ.10 கோடியும் ‘குஷி’ ரூ.4 கோடியையும் ரீ ரிலீஸில் வசூலித்துள்ளன.

மொத்தமாக குறைந்த பாக்ஸ் ஆபீஸ்: இதுபற்றி தயாரிப்பாளர் ஜி.தனஞ்செயனிடம் கேட்டபோது, “இந்த வருடம் கலவையான ஆண்டாக அமைந்திருக்கிறது. 35 திரைப் படங்கள் வெற்றியடைந் திருக்கின்றன. இருந்தாலும் ஒட்டு மொத்தமாக ரூ.330 கோடி நஷ்ட மடைந்துள்ளது.இன்னும் அதிக வெற்றிகள் கிடைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

ரூ.500 கோடிக்கு மேல் அதிகமான படங்கள் வசூலாகும் நிலை வரும் போது, தமிழ் சினிமா இன்னும் நன்றாக இருக்கும். பொதுமுடக்க கால கட்டத்துக்குப் பிறகு, தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் 2025-ல் மொத்தமாக குறைந்திருக்கிறது. அதாவது ரூ.2,600 கோடியாகி இருக்கிறது. ரூ.330 கோடி நஷ்டம் அடைந்துள்ளது. இதை பெரிய நஷ்டம் என்றும் சொல்ல முடியாது” என்றார்.

2025-ல் 285 தமிழ்ப் படங்கள் ரிலீஸாகி சாதனை: மொத்த வசூல் ரூ.2,950 கோடி, நிகர நஷ்டம் ரூ.300 கோடி!
தமிழ் சினிமா 2025 - வியத்தகு படைப்புகள் என்னென்ன?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in