

”யூத்” பட தயாரிப்பாளர் கருப்பையா சி.ராம், நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு
கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம், ‘யூத்’. இந்தப்படத்தை பார்வதா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் கருப்பையா சி ராம் தயாரித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார்.
பள்ளிக்கூடப் பின்னணியின் உருவாகியுள்ள இந்தப் படத்தில் அனிஷ்மா, மீனாட்சி தினேஷ், பிரியன்ஷி யாதவ் ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர். தேவதர்ஷினி, சுராஜ் வெஞ்சரமூடு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் மார்ச் 19-ல் வெளியாகி வரவேற்பைப் பெற்ற இப்படம் ரூ.50 கோடி வசூலைக் கடந்துள்ளது. இதன் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் கருப்பையா சி.ராம் பேசும்போது, “‘யூத்’ படம் எனக்கு முதல் படம் தான். முதல் படத்திலேயே இவ்வளவு பெரிய வெற்றி கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. ரூ.50 கோடி வசூல் என்பது சாதனை தான். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் பெரிய வெற்றி பெற்றுள்ளது.
இந்தப் படத்தின் பயணம் மிகவும் வேகமாக நடந்தது. நாங்கள் அதிகமாக யோசிக்காமல், தைரியமாக முடிவெடுத்தோம். ஒரு காலத்தில் என்னிடம் 2 ரூபாய் கூட இல்லாத நிலை இருந்தது. தேவையான போது அம்மாவிடம் வாங்கி வாழ்க்கையை நடத்தினேன். அந்த நிலையிலிருந்து இன்று இவ்வளவு பெரிய மேடையில் நிற்பது என் முயற்சி மட்டும் அல்ல, பலரின் ஆதரவு. இந்த படத்தை பார்த்தவர்கள் மூன்று முறை உணர்ச்சிவசப்பட்டு அழுதார்கள்.
அந்த உணர்ச்சி தான் இந்தப் படத்தின் மிகப்பெரிய பலம். இந்த வெற்றிக்கு முக்கிய காரணம், நம்பிக்கை. ‘இவ்வளவு பெரிய வெற்றி கிடைத்த பிறகு அடுத்தது என்ன?’ என்று பலர் கேட்கிறார்கள். எனக்கு வெற்றி என்பது தற்காலிகம். ஆனால் நன்றி உணர்வு என்றைக்கும் நிலைத்தது. சினிமா உலகில் புதிய இயக்குநர்கள் சந்திக்கும் சிரமங்களை நான் பார்த்திருக்கிறேன்.
ஓர் இயக்குநர் நல்ல மனநிலையுடன் இருந்தால் தான் நல்ல படம் உருவாகும். இயக்குநர்களுக்கு முழு ஆதரவு கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இந்த நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. ஒரு இயக்குநரின் கனவை நனவாக்க உதவும் தயாரிப்பாளராக இருக்க வேண்டும். அதுதான் என் ஆசை” என்றார்.