

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள படமான ‘டோரதி’ நாளை (செப்.25) வெளியாகிறது. இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
இதில் கீர்த்தி சுரேஷ் கூறும்போது, “இந்தப் படத்தின் கதையைப் படித்ததும் உடனே ஒப்புக்கொண்டேன். இது போன்ற படத்தில் நடிப்பது பெருமை. இயக்குநர் கார்த்திக் சுப்புராஜிடம் இருந்து நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன். இளையராஜா சார் இசையில் நடிப்பேன் என்று கனவிலும் கூட நினைக்கவில்லை. ரிஷிகாந்த், சனந்த் ஆகியோருடன் நல்ல நட்பு உருவாகி இருக்கிறது. உலகளவில் பேசப்படும் படமாக இருக்கும் என நம்புகிறேன்” என்றார்.
கார்த்தி சுப்புராஜ் பேசும்போது, “நான் இயக்கிய ‘இறைவி’யை விட உணர்வுபூர்வமான கதை ‘டோரதி’. இந்த படம் தொடங்கியதில் இருந்து ஒரு மேஜிக் போல உள்ளது. பார்த்த எல்லோரும் பாராட்டி வருகின்றனர். இளையராஜா இசை கேட்டு வளர்ந்தவர்கள் நாங்கள். இந்தப் படத்துக்கு பெரிய ஆசீர்வாதம் அவர் இசைதான்” என்றார்.