

‘ஜனநாயகன்’ மற்றும் ‘பராசக்தி’ ஆகிய படங்களுக்கு இன்னும் தணிக்கைச் சான்றிதழ் கிடைக்கப் பெறாததால் திரையரங்க உரிமையாளர்கள் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ மற்று சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘பராசக்தி’ ஆகிய படங்கள் பொங்கல் வெளியீடாக திரைக்கு வரவுள்ளன. இந்த இரண்டு படங்களுமே தணிக்கைப் பிரச்சினையில் சிக்கியிருக்கின்றன. ‘ஜனநாயகன்’ படத்தில் சில காட்சிகளுக்கு மியூட் மற்றும் சில ரத்தக் காட்சிகளை சரி செய்ய சொல்லியிருக்கிறார்கள். இதனை முடித்துக் கொடுத்துவிட்டது படக்குழு. ஆனால், தணிக்கைச் சான்றிதழ் இன்னும் கிடைக்கப் பெறவில்லை.
அதே போல் ‘பராசக்தி’ படத்தின் பின்னணி இந்தி எதிர்ப்புப் போராட்டம் என்பதால் தணிக்கை அதிகாரிகள் சில காட்சிகளுக்கு ஆட்சேபம் தெரிவித்திருக்கிறார்கள்.
இதனால் படக்குழுவினர் டெல்லியில் மறுதணிக்கைக்கு விண்ணப்பித்திருக்கிறார்கள். அந்த அதிகாரிகள் பார்த்துவிட்டு சான்றிதழ் தரவேண்டும். இந்த இரண்டு படங்களின் தணிக்கைச் சான்றிதழும் கிடைக்கப் பெறாததால், இன்னும் டிக்கெட் முன்பதிவு தொடங்கப்படாமல் உள்ளது. தணிக்கைச் சான்றிதழ் கிடைத்தால் மட்டுமே, திரையரங்க உரிமையாளர்கள் தரப்பில் இருந்து டிக்கெட் முன்பதிவினை தொடங்குவது என்பது வழக்கம். இன்னும் சான்றிதழ் கிடைக்கப் பெறாததால், எப்போது டிக்கெட் முன்பதிவினை தொடங்குவது என காத்திருக்கிறார்கள்.
அதுமட்டுமன்றி சில வெளிநாட்டிலும் தணிக்கைச் சான்றிதழ் இல்லாமல் அனைத்து பணிகளும் நிறுத்தப்பட்டுள்ளன. இரண்டுமே பெரிய நடிகரின் படங்கள், பெரிய முதலீடு என்பதால் தணிக்கைச் சான்றிதழ் கிடைக்கப் பெறாமல் இரண்டு தயாரிப்பாளர்களும் காத்திருக்கிறார்கள். இதற்கிடையே இந்த தணிக்கைச் சான்றிதழ் பிரச்சினையை முன்வைத்து அரசியல் காரணங்களும் பின்னணியாக இருக்கும் எனவும் தகவல்கள் பரவி வருகின்றன.