

விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ முழுப் படமும் இணையத்தில் கசிந்திருப்பது திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதற்கு நடிகர், நடிகைகள் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர். லீக் ஆன படத்தில் ‘எடிட்டர் பைல்’ என்று வாட்டர் மார்க் இருப்பதால், படத்தொகுப்பாளரிடம் இருந்துதான் இது லீக் ஆகியிருக்கும் என்று கூறப்பட்டது.
இந்நிலையில் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி தலைமையில் படத்தொகுப்பாளர் சங்கத்தினர் செய்தியாளர்களை நேற்று சந்தித்தனர். படத்தொகுப்பாளர் சங்கத் தலைவர் கோபி பேசும்போது, “ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் கசிந்ததில் எங்கள் வருத்தம் மிகப்பெரியது. எங்கள் முதலீடே எங்கள் மேல் உள்ள நம்பிக்கைதான்.
அதை வைத்துதான் எங்களுக்கான தொழில் வாய்ப்புகளே கிடைக்கும். ஜனநாயகன் படத்தின் எடிட்டர் பிரதீப் ராகவ். அவர் 25 படங்களுக்கு மேல் பணியாற்றி இருக்கிறார். இந்தப் படத்துக்கு ஏன் இப்படி நடந்தது என்பது எல்லோருக்குமே அதிர்ச்சியான விஷயம்தான்.
அந்தப் படத்துக்குத் தணிக்கை தள்ளிப்போய்க் கொண்டே இருக்கும்போது, படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளை மேம்படுத்தலாம் என இயக்குநர் நினைத்தார். அப்படி நினைப்பது இயற்கைதான். சென்னையில் உள்ள ஸ்டூடியோவில் இருந்து அந்த ஷாட்களை வாங்கி, காட்சிகளை மேம்படுத்தி விட்டு, ஐதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டூடியோவில் ஒலி கலவைப் பணிகளுக்காகப் படத்தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருக்குத் தெரிந்து அனுப்பப்பட்டது. அந்த வீடியோதான் இணையத்தில் கசிந்திருக்கிறது. இதைப் படத்தின் எடிட்டர்தான் கசியவிட்டார் என்று கூறுகிறார்கள். அவருக்கும் இதற்கும் சம்மந்தமில்லை.
‘வாட்டர் மார்க்’ இல்லாத புட்டேஜ் அவரிடம் இருக்கும்போது, ‘வாட்டர் மார்க்’ உள்ள புட்டேஜை அவர் ஏன் வெளியிட வேண்டும்? அப்படி வெளியிட்டு அவர் பெயரை கெடுக்க நினைப்பாரா? இதற்கு பின்னால் என்ன அரசியல் இருக்கிறது என்பது எங்களுக்குத் தெரியாது. எந்த எடிட்டருக்கும் ஒரு பெரிய நடிகரின் படத்தில் பணியாற்ற வேண்டும் என்ற ஆசை இருக்கும். இந்த நிலையில் அவர் எப்படி அதை வெளியிட்டு தன் பிழைப்பை கெடுத்துக்கொள்ள முடியும்? அதனால் எடிட்டர் மீது தேவையில்லாமல் குற்றம் சொல்ல வேண்டாம்” என்றார்.
பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி கூறும்போது, “ஜனநாயகன் திரைப் படக் கசிவு, எல்லோருக்கும் பயத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இணைய திருட்டை அரசே தடுக்க முடியாதபோது நாங்கள் அதற்குப் பலியாகி விடுவோமோ என்ற பயம் படத்தொகுப்பாளர்கள் எல்லோருக்கும் ஏற்பட்டிருக்கிறது. இதைப் பயன்படுத்தி, எப்படி முறைப்படுத்துவது என்பது குறித்து படத்தொகுப்பாளர்கள் ஒரு யோசனையை கொண்டு வந்திருக்கிறார்கள். தயாரிப்பாளர் சங்கத்துடன் பேசி, இனி இதுபோன்று நடக்காமல் இருக்க முடிவெடுப்போம். இந்த விஷயத்தில் எடிட்டரை தேவையில்லாமல் குற்றம் சொல்ல வேண்டாம்.
படத்தின் காப்பியை யார், யாருக்கு அனுப்பினோம், யாரெல்லாம் சம்மந்தப்பட்டார்கள் என்ற விவரம் போலீஸாரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் சரியான திசையில் விசாரித்து வருகிறார்கள் குற்றவாளியை நிச்சயம் கைது செய்வார்கள்” என்றார்.