

ஜெய் ஹீரோவாக நடிக்கும் படத்தை ‘எய்தவன்’ சக்தி ராஜசேகரன் இயக்குகிறார். இதை எஸ்எஸ்டி புரொடக்ஷன்ஸ் சார்பில் ஃபெரோஸ் ஹுசைன் ஷெரிஃப் தயாரிக்கிறார். புலனாய்வு க்ரைம் த்ரில்லர் படமான இதன் படப்பிடிப்பு சென்னை மற்றும் திருத்தணியில் நடக்க இருக்கிறது.
இப்படம் பற்றி இயக்குநர் சக்தி ராஜசேகரன் கூறும்போது, “இது த்ரில்லர் படம் என்றாலும் இதுவரை பார்க்காத வகையில் இருக்கும். ஹோம் கார்டு பின்னணியில் கதை உருவாக்கப்பட்டுள்ளது.
ஹோம் கார்டாக இருக்கும் ஒருவர் எப்படி ஒரு விஷயத்தை புலனாய்வு செய்கிறார் என்று கதை போகும். இந்தப் பின்னணி புதுமையாக இருக்கும். கதையில் சமூகப் பிரச்சினை ஒன்றையும் பேசுகிறோம். பட ரிலீஸுக்கு பிறகு அது பெரிய விவாதமாக மாற வாய்ப்பிருக்கிறது.
அடுத்த மாதம் படப்பிடிப்பை தொடங்க இருக்கிறோம். மலையாள நடிகை அனுமோள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்தில் பாடலும் ஹீரோயினும் இல்லை. இந்தக் கதைக்கு அது தேவையாக இல்லை” என்றார்.