இடைக்கால ஜீவனாம்சம்: காலக்கெடுவை நீட்டிக்கக் கோரிய ரவி மோகனின் வழக்கு தள்ளுபடி

நடிகர் ரவி மோகன்

நடிகர் ரவி மோகன்

Updated on
1 min read

சென்னை: குழந்தைகளின் படிப்பு உள்ளிட்ட செலவுகளுக்கு நடிகர் ரவி மோகன் இடைக்கால ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று அவரது மனைவி ஆர்த்தி தொடர்ந்த வழக்கில், இரண்டு வாரத்துக்குள் விசாரித்து முடிக்க குடும்ப நல நீதிமன்றத்திற்கு பிறப்பித்த உத்தரவை நீட்டிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மேலும், காலக்கெடுவை நீட்டிக்கக் கோரிய ரவி மோகனின் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

நடிகர் ரவி மோகன் மற்றும் அவரது மனைவி ஆர்த்திக்கும் இடையே விவாகரத்து வழக்கு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் ஆர்த்தி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் ரவி மோகனுக்கு எதிராக ஏப்ரல் 2025 முதல் தனது குழந்தைகளின் பள்ளிக் கட்டணம் உட்பட எந்தவொரு இடைக்கால ஜீவனாம்சத்தையும் வழங்கவில்லை என புதிய மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். ஆனால் அந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.

இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் இடைக்கால ஜீவனாம்ச மனுவை விரைந்து விசாரணை நடத்தி முடிக்க சென்னை குடும்ப நல நீதிமன்றத்திற்கு உத்தரவிட வேண்டும் என கேட்டுக் கொண்டிருந்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஆர்த்தி தாக்கல் செய்திருந்த இடைக்கால ஜீவனாம்ச மனுவை இரண்டு வாரத்துக்குள் விசாரித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், குடும்ப நல நீதிமன்றத்திற்கு விதிக்கப்பட்ட காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று ரவி மோகன் இன்று புதிதாக மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆர்த்தி சார்பில் மூத்த வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி காலக்கெடுவை நீடிக்க கூடாது என்று வாதிட்டார். இதையடுத்து நீதிபதி மனுவை தள்ளுபடி செய்து குடும்ப நல நீதிமன்றத்தை அணுகுமாறு உத்தரவிட்டுள்ளார்.

<div class="paragraphs"><p><em>நடிகர் ரவி மோகன்</em></p></div>
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை: முதல்வர் விஜய் நாளை தொடங்கி வைக்கிறார்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in