‘சமூக நீதி அரசியலில்...’ - தவெக அமைச்சரவைக்கு பா.ரஞ்சித் பாராட்டு

பா.ரஞ்சித்
பா.ரஞ்சித்
Updated on
1 min read

சென்னை: “பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஏழு பேர் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர். சமூக நீதி அரசியலில் பிரதிநிதித்துவம் என்பது முதல்நிலை” என்று இயக்குநர் பா.ரஞ்சித் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “தமிழக வெற்றிக் கழக அரசின் இரண்டாம் கட்ட அமைச்சரவை விரிவாக்கம் இன்று நடைபெற்றுள்ளது. நான்கு பெண்கள் அமைச்சர்களாகப் பதவியேற்றிருப்பதோடு, முக்கியமான துறைகளும் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அதேபோல், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஏழு பேர் அமைச்சரவையில் இடம்பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் இது முதல் முறை எனத் தெரிய வருகிறது.

இந்திய முஸ்லிம் லீக் அமைச்சரவையில் இணைய முடிவு செய்திருக்கும் நிலையில், இஸ்லாமியர்கள் இருவருக்கும் அமைச்சரவையில் இடம் வழங்கப்பட்டுள்ளது. பிரதிநிதித்துவ அரசியலின் அடிப்படையில் இவை முக்கியமான மாற்றங்களாகும். தமிழ்நாட்டு அரசியலுக்கும் தமிழக வெற்றிக் கழகத்துக்கும் இதுவொரு முக்கியமான தொடக்கமாக அமையும் எனவும் நம்புகிறோம்.

சமூக நீதி அரசியலில் பிரதிநிதித்துவம் என்பது முதல்நிலை; கிடைத்துள்ள இந்த வாய்ப்புகள் எளிய மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கவும், சமூகத்தில் சமத்துவம் மேலும் வலுப்பெறவும் வழிவகுக்க வேண்டும்.

இத்தகைய முன்னுதாரணமான பிரதிநிதித்துவங்கள் சமூக மாற்றத்துக்கு அடித்தளமிடும்போது, அவை எதிர்காலத்தில் இன்னும் விரிவான மாற்றங்களுக்கான வாய்ப்புகளையும் உருவாக்கும். அந்த மாற்றத்தை இந்த அமைச்சரவை முன்னெடுக்கும் என்ற நம்பிக்கையுடன், புதிய அரசுக்கும் தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய்க்கும் நீலம் பண்பாட்டு மையம் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது” என்று தெரிவித்துள்ளார் பா.ரஞ்சித்.

பா.ரஞ்சித்
The Boys: ஏழு ஆண்டு கால எதிர்பார்ப்பும் ஏமாற்றமும் | ஓடிடி திரை அலசல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in