

ஜி.வி.பிரகாஷ் – கயாடு லோஹர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘இம்மார்டல்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி கவனம் பெற்றுள்ளது.
அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கி இருக்கும் ‘இம்மார்டல்’ படத்தின் ட்ரெய்லரை நடிகர் தனுஷ் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் இன்று வெளியிட்டார். ட்ரெய்லரின் தொடக்கத்தில் மலைக்காட்டின் உச்சியில், ‘அபோகலிப்டோ’ ஜோடி போல ஒரு தம்பதி காட்டப்படுகின்றனர்.
அடுத்து, நவநாகரிக உலகுக்குள் வரும் காட்சிகள், ஒரு வீட்டில் ஷேரிங்கில் வசிக்கும் மஹி - சிந்துவின் காதல் விளையாட்டுகளைக் காட்டுகிறது. அதற்கு இசை பக்கவாத்தியம் வாசிக்கிறது. ஒருவர் மற்றவரை கவர எடுக்கும் பிரயத்தனங்களுடன் நகரும் காட்சிகள், திடீரென திகிலுக்குள் நுழைகிறது.
இப்போது இசை நம்மை அந்த இருட்டு உலகத்துக்குள் அழைத்துச் செல்கிறது. மஹி ஏதோ ஒரு அமானுஷ்யத்தால் ஆட்கொள்ளபட்டு இருக்கிறான் என்கிற எதிர்பார்ப்பை கிளப்பி, இளையராஜாவின் ‘பனி விழும் இரவு’ பாடலுடன் இதம் ஊட்டி நிறைவு பெறுகிறது ட்ரெய்லர். இந்த 2.55 நிமிட காட்சிகளில் காதலையும், திகிலையும் கச்சிதமாக கடத்தி இருக்கிறது சாம் சிஎஸ்ஸின் இசை.
ஜி.வி.பிரகாஷ், கயாடு லோஹருடன் டி.எம். கார்த்திக், லொள்ளு சபா மாறன், ஆதித்யா கதிர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜூலை 23-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த இந்தப் படம் ‘ஜனநாயகன்’ வெளியீடு காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது செப்டம்பர் 4-ம் தேதி படம் திரைக்கு வர இருக்கிறது.