திரையைத் தாண்டிய பிரபஞ்சம் - ஐமேக்ஸ் தொழில்நுட்பம் | ஒளி என்பது வெளிச்சமல்ல 12

திரையைத் தாண்டிய பிரபஞ்சம் - ஐமேக்ஸ் தொழில்நுட்பம் | ஒளி என்பது வெளிச்சமல்ல 12
Updated on
3 min read

ஐமேக்ஸ் என்​பது இமேஜ் மேக்​ஸிமம் எனப்​படும் பெரிய திரையைக் கொண்ட திரையரங்க வடிவம். திரை​யின் அகலத்தை விட உயரத்​தின் அடிப்​படை​யில் அமைக்​கப்​பட்ட, முழு​மை​யான திரையரங்க அனுபவத்தை வழங்​கும் அமைப்​பு.

திரையரங்​கக் கட்​டமைப்​பு, திரை வடிவ​மைப்​பு, அதிநவீன இரட்டை புரொஜெக் ஷன் தொழில்​நுட்​பம், துல்​லிய​மான ஒலி அமைப்​பு, கதை சொல்​லும் கேமரா மொழி, படமாக்​கும் முறை (கேப்​சர்), நவீன மாற்​றுச் செயல்​முறை (மாஸ்​டரிங்), மற்​றும் வெளி​யீட்​டுத் திட்​ட​மிடல் (ரிலீஸ் ஸ்ட்​ரேட்​டஜி) ஆகிய அனைத்​தை​யும் ஒருங்​கிணைத்து செயல்​படு​கிறது ஐமேக்ஸ் நிறு​வனம்.

பிரம்​மாண்​ட​மும் வடிவ​மைப்​பும்: இவ்​வகைத் திரையரங்​கு​களின் தனித்​து​வமே அதன் பிரம்​மாண்​ட​மான பரி​மாணங்​கள் தான். ஐமேக்ஸ் திரை​யின் சராசரி உயரம் 60 முதல் 70 அடிகள் வரை இருக்​கும். பாரம்​பரிய வைடு ஸ்கி​ரீன் வடிவங்​கள் அகலத்தை மட்​டுமே வலி​யுறுத்​தும் போது, ஐமேக்ஸ் காட்​சி​யில் உயரம் வியத்​தகு அளவில் அதி​கரிக்​கப்​படு​கிறது.

இதனால் வானம், கட்​டிடங்​களின் முழு நீளம், மனித உரு​வங்​கள் மற்​றும் நிலப்​பரப்​பின் அளவு ஆகியவை முழு​மை​யாகக் காட்​சிக்​குள் வரு​கின்​றன. பார்​வை​யாளரின் பக்​கப் பார்வை வரை காட்சி நிரம்​புவ​தால், இந்​தத் திரை அனுபவம் முற்​றி​லும் முழு​மை​யாக உணரப்​படு​கிறது. ஐமேக்ஸ் திரையரங்​கு​கள் ஸ்டேடி​யம் சீட்​டிங் முறை​யில் வடிவ​மைக்​கப்​படு​கின்​றன.

ஒவ்​வொரு வரிசை​யும் படிப்​படி​யாக உயர்ந்​து, பார்​வை​யாளரின் கண் பார்வை இயல்​பாகவே திரை​யின் மையத்தை நோக்​கியே அமை​கிறது. ஐமேக்ஸ் ஒலி அமைப்​பும் இதற்கு ஈடு கொடுக்​கும் வகை​யில் வடிவ​மைக்​கப்​பட்​டுள்​ளது.

இத்​தகைய திரையரங்​கு​களில் பயன்​படுத்​தப்​படும் அதிநவீன ஒலி அமைப்​பு, சாதாரண திரையரங்க ஒலிப்​ப​திவை விட 5 மடங்கு அதிக ஒலித்​திறனைக் கொண்டிருக்கும்.

தொழில்​நுட்ப சாகசம்: ஃபிலிம், டிஜிட்​டல் மற்​றும் டி.எம்​.ஆர்: ஒரிஜினல் ஐமேக்ஸ் கேம​ராக்​கள் ஹாலிவுட்​டில் மட்​டுமே கிடைக்​கின்​றன. அவை ஃபிலிமில் படமாக்​கப்​படு​கின்​றன. ஐமேக்ஸ் முதலில் அதன் புகழ்​பெற்ற 70 எம்​எம் திரைப்பட (ஃபிலிம்) வடி​வில் தான் தொடங்​கியது. இந்த ஃபிலிம் வழக்​க​மான 35 எம்​எம் ஃபிலிம் போல கேம​ரா​வில் செங்​குத்​தாக இல்​லாமல் கிடைமட்​ட​மாக ஓடு​கிறது.

இதன் ஒரு ஃபிரேம், 15-பெர்ஃப் அளவு கொண்​டது. சாதாரண 35 எம்​எம் ஃபிலிமை விட, சுமார் 4 மடங்கு பெரியது. இதன் 1.40:1 அஸ்​பெக்ட் ரேஷியோ​வைத் திரை​யில் பார்க்​கும் போது, அது கிட்​டத்​தட்ட 18கே தெளிவுக்கு (ரெசல்​யூஷன்) இணை​யான​தாக இருக்​கும்.

இந்த மிக உயர்ந்த தெளிவு, ஆழம், மற்​றும் இயல்​பான காட்​சித் தன்​மையே ஒரிஜினல் ‘ஐமேக்ஸ் ஃபிலிம் ஃபார்​மட்​’டின் மிகப்​பெரிய வெற்​றி​யாகும். ஐமேக்ஸ் என்​பது கேப்​சர் ஃபார்​மட்​டாக​வும் (நேரடி​யாகப் படமாக்​கு​வது), ரிலீஸ் ஃபார்​மட்​டாக​வும் (வெளி​யீட்டு வடிவம்) செயல்​படக்​கூடிய ஒரே அமைப்​பு. ஆனால் அதற்​குப் போட்​டி​யாக உள்ள பி.எக்​ஸ்​.எல், எபிக் போன்​றவை முழு​வதும் ரிலீஸ் ஃபார்​மட்​டு​கள் மட்​டுமே.

அவை படம் எடுக்​கப்​படும் வடிவங்​கள் அல்ல; பெரிய திரை மற்​றும் மேம்​பட்ட ஒலி அனுபவத்தை மட்​டுமே வழங்​கு​கின்​றன. ஐமேக்ஸ் போல கூடு​தல் காட்​சியை (எக்​ஸ்ட்ரா ஃபிரேம் ஹைட்) அவை வழங்​கு​வ​தில்​லை.

டிஜிட்டல் மீடியா ரீமாஸ்ட்​ரிங்: மாற்று செயல்​முறை: பெரும்​பாலான இந்​தி​யத் திரைப்​படங்​கள் ஒரிஜினல் ஐமேக்ஸ் ஃபிலிமில் நேரடி​யாகப் படமாக்​கப்​படு​வ​தில்​லை. ‘பொன்​னி​யின் செல்​வன்,’ ‘காந்​தா​ரா’ போன்ற பல படங்​கள் பாரம்​பரிய டிஜிட்​டல் சினிமா கேமரா அல்​லது ஐமேக்ஸ் நிறு​வனம் பரிந்​துரைத்த மற்ற கேம​ராக்​களில் படமாக்​கப்​பட்​டு, பின்​னர் ஐமேக்ஸ் வடிவ​மாக மாற்​றப்​பட்​டன.

இந்த மாற்​றுச் செயல்​முறை டிஜிட்​டல் மீடியா ரீமாஸ்ட்​ரிங் என்று அழைக்​கப்​படு​கிறது டி.எம்​.ஆர் என்​பது படத்தை பெரி​தாக்​கு​வது அல்ல! இது மிக நுணுக்​க​மான செயல்​முறை​யாகும். ஒரு திரைப்​படம் கிரேடிங் செய்​யப்​பட்ட பிறகு 4கே அல்​லது 8கே தெளிவுத்​திறனில் ஸ்கேன் செய்​யப்​படும்.

பிறகு ஐமேக்ஸ் கார்ப்​பரேஷனின் சிறப்பு அலகில் அங்​குள்ள நிபுணர்​களால் ஃபிரேமிங், கான்ட்​ராஸ்ட், கூர்​மை, ஒளிர்​வு, ஒலி ஆகியவை ஐமேக்ஸ் தரத்​துக்கு மிக நுணுக்​க​மாக மாற்​றியமைக்​கப்​படு​கின்​றன. மிகப்​பெரிய திரை​யில் எக்​ஸ்ட்ரா ஃபிரேம் ஹைட்​டுடன் திரைப்​படத்தை புரொஜெக்ட் செய்​யும்​போது காட்​சி​யின் செறிவு துளி​யும் குறை​யாமல் இருப்​பதை இந்த டி.எம்​.ஆர் உறுதி செய்​கிறது. இந்​தச் செயல்​முறைக்கு சுமார் 10 நாட்​கள் முதல் 3 வாரங்​கள் வரை கூட ஆகலாம்.

நோலனும் சினிமா மொழி​யும்: ஐமேக்ஸ் கேம​ராக்​கள் ஆரம்​பத்​தில் அறி​வியல் ஆவணப் படங்​களுக்கே பயன்​படுத்​தப்​பட்​டன. ஆனால் இயக்​குநர் கிறிஸ்​டோஃபர் நோலன், தி டார்க் நைட், இன்​டர்​ஸ்​டெல்​லார், ஓபன்​ஹைமர் போன்ற படங்​களில் சுமார் 90 சதவி​கிதக் காட்​சிகளை ஒரிஜினல் ஐமேக்ஸ் ஃபிலிம் கேம​ரா​விலேயே படமாக்​கி, ஐமேக்ஸை பிரம்​மாண்​ட​மான கதை சொல்​லும் கேமரா மொழி​யாக​வும் மாற்​றி​னார்.

இன்று ஒரு திரைப்​படம் சினி​மாஸ்​கோப், 3டி, ஐமேக்​ஸ், ஓடிடி ஆகிய பல்​வேறு ஃபார்​மட்​டு​களில் வெளி​யிடப்​படு​கிறது. ஆனால், பெரும்​பாலான திரையரங்​கு​கள் சினி​மாஸ்​கோப் வடிவத்​திலேயே உள்​ளன. அதனால் ஒரு திரைப்​படத்தை உரு​வாக்​கும்​போதே அதனை அனைத்து வடிவங்​களுக்​கும் ஏற்​ற​வாறு படமாக்க வேண்​டும். இதில் ஐமேக்​ஸுக்​காகப் படம் எடுப்​பது தனிப்​பட்ட தொழில்​நுட்ப ஒழுங்​கை​யும் சிந்​தனையை​யும் கோரு​கிறது.

வெளி​யீட்​டுத் திட்​ட​மிடல் மற்​றும் இந்​திய சினிமா: ஐமேக்​ஸில் திரைப்​படத்தை வெளி​யிட வேண்​டுமென்​றால் ரிலீஸ் தேதியை முன்பே உறு​தி​யாக நிர்​ண​யிக்க வேண்​டும். ஐமேக்ஸ் விதி​முறை​யின்​படி, குறிப்​பிட்ட நாளில் ஒரு நாளுக்கு ஒரு திரைப்படம் மட்​டுமே முக்​கிய வெளி​யீ​டாக திரை​யிடப்​படும். அதனால் தயாரிப்​பாளர்​கள் தங்​கள் திரைப்​படத்​தின் வெளி​யீட்​டுத் தேதியை முன்​கூட்​டியே பதிவு செய்து லாக் செய்ய வேண்​டும்.

இத்​தகைய தொழில்​முறை சவால்​கள் இருந்​த​போ​தி​லும், இந்​தி​யச் சினிமா தொடர்ந்து ஐமேக்ஸ் தொழில்​நுட்​பத் தரத்தை நோக்கி முன்​னேறி வரு​கிறது. இன்று ஐமேக்​ஸில் வெளி​யிடப்​படும் பெரும்​பாலான இந்​தி​யப் படங்​கள் 1.90:1 வடி​வில் திரை​யிடப்​படு​கின்​றன.

சில குறிப்​பிட்ட ஐமேக்ஸ் திரையரங்​கு​களில் 1.40:1 முழு உயர ஃபிரே​மும் இயக்​கப்​படு​கிறது. ராஜமவுலி இயக்​கும் ‘வாரணாசி’ படம் 1.40:1 முழு உயர ஐமேக்ஸ் வடி​வில் வெளி​யிடப்​பட​வுள்​ள​தாக அறிவிக்​கப்​பட்​டது. இது இந்​திய சினி​மாவை உலகத்​தரத்​துடன் நேரடி​யாக இணைக்​கும் முக்​கிய​மான முன்​னேற்​ற​மாகப் பார்க்​கப்​படு​கிறது.

ஒரு திரைப்​படம் ஐமேக்​ஸில் வெளி​யிடப்​படு​வதைப் பெரு​மை​யான​தாக வி​யா​பார உலகம் கருதுகிறது. அதனால்​ இந்​தி​யா​வில்​ ஐமேக்​ஸ்​ திரையரங்​கு​களின்​ எண்​ணிக்​கை வருடந்​தோறும்​ உயர்ந்​து​கொண்​டே இருக்​கின்​றன.

(புதன்​தோறும்​ ஒளி ​காட்டுவோம்)

- cjrdop@gmail.com

திரையைத் தாண்டிய பிரபஞ்சம் - ஐமேக்ஸ் தொழில்நுட்பம் | ஒளி என்பது வெளிச்சமல்ல 12
நிற வெப்பநிலை: கதை சொல்லும் கலை | ஒளி என்பது வெளிச்சமல்ல 11

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in