

ஷாங்காய் டிரையட்...
ஒளியின் வெப்ப நிலைக்கு ஏற்றவாறு நிறங்களின் தன்மையும் மாறுபடுகிறது. நம்முடைய மூளையின் செயல்திறனால் வெப்பநிலை மாறுதல்களில் ஏற்படும் நிறமாற்றம் சரி செய்யப்பட்டிருக்கும். அதனால் மனிதக் கண்களால் இந்த மாறுதல்களை உணர முடியாது.
ஒரு கருப்பு நிற இரும்புத்துண்டை சூடாக்கும்போது கதிர்வீச்சு (ப்ளாக் ராட் ரேடியேடர்) அதிகரித்து, அதன் நிறம் மாறிக் கொண்டிருப்பதை வில்லியம் தாம்சன் மற்றும் லார்ட் கெல்வின் ஆகியோர் கண்டறிந்தனர்.
இதனால் நிற வெப்பத்தின் அளவுகோலை ‘கெல்வின் டிகிரி’ என்று அவரின் கண்டுபிடிப்பிற்காகவே பின்பற்றப்பட்டது. ‘கலர் டெம்ப்ரேச்சர்’ என்று அழைக்கப்படும் நிற வெப்பத்தை இரண்டு முக்கிய அளவுகோல்களில் பிரிக்கலாம். 5600 டிகிரி கெல்வின் – பகல் நிற வெப்பம். 3200 டிகிரி கெல்வின் – டங்க்ஸ்டன் நிற வெப்பம்.
இதில் 5600 டிகிரி கெல்வின் நிறவெப்பம் பகல் வெளிச்சத்துக்கு (டே லைட்) உட்பட்டது. 3200 டிகிரி கெல்வின், டங்க்ஸ்டன் நிற வெப்பமாக அறியப்படுகிறது. ஒளி விளக்குகளும் பெரும்பாலும் இவ்விரு நிற வெப்பத்துக்கு ஏற்றாற் போலவே தயாரிக்கப்படுகின்றன.
திரைப்படக் கலையின் அடிப்படை என்பது ஒளி. நிறத்தன்மையில் வெப்பமும், குளிர்ச்சியும், காட்சியின் மொழியை நிர்ணயிக்கும் முக்கிய அம்சங்கள். நிறத்தின் தன்மை, அறிவியல் உலகில் நிற வெப்பநிலை என்று அழைக்கப்படுகிறது.
ஒளியின் நிற வெப்பநிலை – ஒவ்வொரு ஒளிக்கும் தனித்துவமானத் தன்மை: நம்மைச் சுற்றியுள்ள ஒளி அனைத்துக்கும் தனிப்பட்ட நிற வெப்பநிலை உள்ளது. மெழுகுவர்த்தி ஒளி – மஞ்சள் நிறம், டங்க்ஸ்டன் பல்பு – ஆரஞ்சு நிறம், பகல் ஒளி – இயல்பான வெண்ணிறம், மேகமூட்டம் – நீலம், வானத்தின் மேல் பகுதி – அதீத நீல நிறம். ஒளியின் வெப்பநிலை குறையும்போது, அது சூடான (வார்ம்) நிறத்தில் தெரியும், அதிகரிக்கும்போது அது குளிர்ந்த (கூல்) நீல நிறமாக மாறும். இந்த நுட்பமான மாற்றம் ஒளிப்பதிவாளரின் கைகளில் ஒரு கதை சொல்லும் கருவியாக மாறுகிறது.
நிற வெப்பநிலை – காட்சியின் மனநிலையை உருவாக்கும் கருவி: சில நேரங்களில், கேமராவின் மற்ற எந்த உத்தியையும் பயன்படுத்தாமல், நிற வெப்பம் மட்டுமே ஒரு காட்சியின் உணர்வை மாற்றப் போதுமானதாக இருக்கும்.
சூடான நிறம் –உணர்ச்சி வெப்பம்: சினிமாவில் சூடான நிறத்தன்மை பொதுவாக நெருக்கம், பாதுகாப்பு, காதல், நினைவோட்டம் போன்ற உணர்ச்சிகளை உருவாக்குகிறது.
சந்தோஷ் சிவன், விஜய் கார்த்திக் கண்ணன்
ஷாங்காய் டிரையட் (shanghai triad) - சீனாவின் ‘ஷாங்காய் டிரையட்’ (1930) படத்தில், பழங்கால சீனாவின் கேங்ஸ்டர் வாழ்க்கையை ஆம்பர், மஞ்சள், செம்மை நிறங்களால் இயக்குநர் ஜாங் யிமோ உருவாக்கினார். மெழுகுவர்த்தியின் ஒளி, மங்கலான உள் விளக்குகள், ஓபியம் டென், அதிகார வீழ்ச்சி போன்ற சூழல்கள் அனைத்தும் வார்ம் நிறத்தில் கட்டமைக்கப்பட்டதால், படம் ஒரு ரெட்ரோ கவிதை போல காட்சியளித்தது.
‘தளபதி’யில் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் காட்டிய உலகம் ஒளியின் நிறவெப்பதால் உருவாக்கப்பட்டது. சூரியனின் பொன்னொளி, குடிசைப் பகுதிகளின் டங்க்ஸ்டன் விளக்குகள், மங்கலான சிவப்பு-ஆம்பர் பிரதிபலிப்புகள் எல்லாம் கதாபாத்திரமான சூர்யாவின் தீவிரத்தையும் உள்ளூரும் கோபத்தையும் வெளிப்படுத்துகின்றன. இந்தப்படம் இந்திய ஒளிப்பதிவில் நிற மொழிக்காகக் கவனம் பெற்றது.
குளிர்ந்த நிறம் – உறைநிலை (ஃப்ரோசன் எஃபெக்ட்) - நிற வெப்பநிலை உயரும்போது குளிர்ந்த நீலத் தன்மை உருவாகிறது. இது மர்மம், பயம், தனிமை, துயரம், மன இருள், பிரிவினை ஆகியவற்றை உணர்த்தும். ‘தி எக்ஸார்சிஸ்ட்’ படத்தில் அச்சுறுத்தும் மனநிலையின் பாதி அதன் ஒளியில்தான் இருக்கிறது. சாளரத்தின் வழி வரும் நீலத்தன்மை நிறைந்த குளிர் ஒளியும், அறைக்குள் நிலவும் தனிமையும் படத்தின் ஒவ்வொரு காட்சிக்கும் அமானுஷ்யத் தன்மையை உருவாக்கி அன்றைய பார்வையாளர்களை கதிகலங்க வைத்தது.
‘சிறைச்சாலை’ திரைப்படத்தில் ஒளிப்பதிவாளர் அமைத்த இரவுக் காட்சிகள் முழுவதுமே குளிர்ந்த நீல ஒளியில் நனைந்தவை. மஞ்சள் ஒளியைத் தவிர்த்து, நீல நிறத்தைப் பயன்படுத்தியதால் பாத்திரங்களின் காதல், மவுனம், கொடுஞ்சிறையின் தனிமை அனைத்தும் காட்சிக்குள் உறைந்து விடுகின்றன.
தி எக்ஸார்சிஸ்ட்
வார்ம் டோன் ஸ்பெஷலிஸ்ட் என்று அறியப்பட்ட சந்தோஷ் சிவன், இரவுக் காட்சிகளில் கூல் டோனை பிரதானமாகப் பயன்படுத்தி ஒளிப்பதிவுக்கான தேசிய விருதைப் பெற்றார்.
கேமரா மற்றும் ஒளி – நிற உணர்ச்சியின் சமநிலை: கேமராவுக்கும் நிற வெப்பநிலை உணர்வு உண்டு. ஒளியின் நிற வெப்பநிலை கேமராவில் அமைக்கப்பட்ட நிற வெப்பநிலையுடன் சமமாக இருந்தால் - காட்சி இயல்பாகத் தெரியும். வெள்ளை சமநிலை சரியாக இருந்தால் - நியூட்ரல் டோன் உருவாகும்.
ஒளியின் நிற வெப்பநிலை கேமராவைவிட குறைந்தால் -காட்சி சூடான (மஞ்சள்–செம்மை) நிறத்தில் தோன்றும். ஒளியின் நிற வெப்பநிலை கேமராவைவிட அதிகமாக இருந்தால் - காட்சி குளிர்ந்த (நீல) நிறத்தில் மாறும்.
நியூட்ரல் டோன் சரியாக அமையும் போது, மனிதத் தோலின் நிறம் இயல்பாக இருக்கும். அதோடு ஃபிரேமில் அனைத்து நிறங்களும் சரியான டோனிலும், காட்சியின் உணர்ச்சி சரியான திசையிலும் இருக்கும். அதனால் ஒளியின் நிற மாற்றம் காட்சியை பாதிக்காது
கலவை நிறவெப்பம் (மிக்ஸ்டு கலர் டெம்ப்ரேச்சர்) - சமகால ஒளிப்பதிவின் உத்தி: ஒளிப்பதிவில் ஒரே விதமான நிறவெப்பத்தை இன்று அதிகம் பயன்படுத்துவதில்லை. டங்க்ஸ்டன், எல்.இ.டி. பகல் ஒளி - என இவை அனைத்தும் கலந்த ஒளி வெப்பத்தை ஒளிப்பதிவாளர்கள் பயன்படுத்துகின்றனர்.
குறிப்பாக, வெப்பம் மற்றும் குளிர்ந்த வெளிப்புற நிலவொளி சேரும் போது ஃபிரேமில் இரண்டு உலகங்கள் ஒன்றுடன் ஒன்று மோதுவது போல ஓர் அழகான காட்சி உருவாகும். இவை ஆழம், பிரிவு, மனநிலை மாற்றம், கதாபாத்திர வேறுபாடு ஆகியவற்றை மிகச்சிறப்பாக உருவாக்கு கின்றன.
‘ஜெயிலர்’ திரைப்படத்தில் இடம்பெற்ற பெரும்பாலான காட்சிகளில் ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் கண்ணன் மிக்ஸ்டு கலர் டெம்ப்ரேச்சர் மூலம் கலவையான நிறவெப்பத்தை உருவாக்கினார். வார்ம் டோனிலுள்ள கதாபாத்திரங்கள் அருகாமை உணர்வையும் பின்னணியில் உள்ள கூறுகள் குளிர்ந்த நிறத்தன்மையால் சற்று விலகியும் இருக்கும். இதனால் ஃபிரேமில் விஷுவல் செபரேஷன் சிறப்பாக அமைந்தது.
நிற வெப்பத்தால் உருவாகும் காட்சியின் கவிதை: ஒளி வெறும் பிரகாசம் அல்ல; அது உணர்ச்சியின் அடுக்குகளைச் சொல்லும் மொழி. ஒளியின் நிற வெப்பநிலை, உணர்வை வரைகிறது. கேமராவின் வெள்ளை சமநிலை அந்த உணர்வை புரிந்து கொள்கிறது. சுருக்கமாகச் சொன்னால், ஒளி- வெப்பத்தால் பேசும், நிறம் உணர்ச்சியை வடிவமைக்கும், காட்சி அந்தக் கதையை நம் உள்ளத்தில் பதிக்கும்.
(புதன்தோறும் ஒளிகாட்டுவோம்)
- cjrdop@gmail.com