

தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகி வரும் ‘பாக்கெட் நாவல்’ படத்தில் இருந்து இளையராஜா விலகி இருப்பதாக கூறப்படுகிறது.
'சூப்பர் டீலக்ஸ்' படத்துக்குப் பிறகு, தியாகராஜன் குமாரராஜா - விஜய் சேதுபதி மீண்டும் இணைந்து பணியாற்றும் படம் ‘பாக்கெட் நாவல்’.
இந்தப் படத்தில், விஜய் சேதுபதியுடன் கன்னட நடிகர் ராஜ் பி ஷெட்டி, மாளவிகா மோகனன் மற்றும் கிஷோர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் மூலம் கன்னடத் திரையுலகின் முன்னணி நடிகரான ராஜ் பி ஷெட்டி தமிழில் அறிமுகமாகிறார்.
இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. தற்போது படத்தின் இயக்குநர் தியாகராஜான் குமாரராஜாவுக்கும், இளையராஜாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் படத்துக்கு இசையமைக்கும் பணியில் இருந்து இளையராஜா விலகி இருப்பதாக கூறப்படுகிறது. அவருக்கு பதிலாக ஜி.வி.பிரகாஷ் குமார் ‘பாக்கெட் நாவல்’ படத்துக்கு இசையமைக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக, ‘மாடர்ன் லவ் சென்னை’ வெப் தொடரில் தியாகராஜன் குமாரராஜாவும் இளையராஜாவும் இணைந்து பணியாற்றி இருந்தனர். தியாகராஜன் குமாரராஜா இயக்கிய 'நினைவோ ஒரு பறவை' என்ற எபிசோடுக்கு இளையராஜா இசையமைத்திருந்தார். ‘பாக்கெட் நாவல்’ இவர்கள் மீண்டும் இணைந்து பணியாற்ற இருந்தது மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.
‘பாக்கெட் நாவல்’ படத்தின் ஒளிப்பதிவு பணியை 'சூப்பர் டீலக்ஸ்' படத்துக்கு ஒளிப்பதிவு செய்த நீரவ் ஷா செய்கிறார். படத்துக்கான கதை மற்றும் திரைக்கதையை ஆண்ட்ரூ லூயிஸ் எழுத, யுகபாரதி பாடல்களை எழுதுகிறார். டைலர் டர்டன் அண்ட் கினோ ஃபிஸ்ட் நிறுவனத்தின் கீழ் தியாகராஜன் குமாரராஜாவே இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.