“இது ஸ்பெஷல்...” - சிவகார்த்திகேயன் பாராட்டுக்கு ராஜா கருப்பசாமி, அனிஷ்மா நெகிழ்ச்சி

“இது ஸ்பெஷல்...” - சிவகார்த்திகேயன் பாராட்டுக்கு ராஜா கருப்பசாமி, அனிஷ்மா நெகிழ்ச்சி
Updated on: 
2 min read

“உங்களிடமிருந்து இந்தப் பாராட்டைப் பெறுவது உண்மையில் சிறப்பான ஒன்று” என சிவகார்த்திக்கேயன் பாராட்டியது குறித்து ‘மொத ராத்திரி’ இயக்குநர் ராஜா கருப்பசாமி நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயன் ‘மொத ராத்திரி’ படக்குழுவினரை நேரில் அழைத்து தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.

சிவகார்த்திகேயனுடன் எடுத்துக்கொண்ட படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள இயக்குநர் ராஜா கருப்பசாமி நெகிழ்ச்சி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், ‘இந்தப் புகைப்படம் எனக்கு எவ்வள்வு சிறப்பானது என்பதை வார்த்தைகளில் விவரிக்க முடியாது.

உங்களைப் போல ஒரு ஜனரஞ்சக கலைஞனாக வேண்டும் என்கிற கனவுடன்தான் சென்னைக்கு வந்தேன் சிவகார்த்திகேயன் அண்ணா. பெரிய கனவுகள் காணவும், சினிமாவில் பயணிக்கவும் எனக்கு உத்வேகமாக இருந்தவர்களில் நீங்களும் ஒருவர். இன்று நான் ஒரு சினிமா எடுத்து, அதற்காக இங்கே நின்று உங்களிடமிருந்து பாராட்டு பெறுவது என்பது உண்மையில் எனக்கு மிகச் சிறப்பான ஒன்று.

இந்த அன்புக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி. நானும் எனது குழுவினரும் பெற்ற சிறப்பான பாராட்டுகளில் இதுவும் ஒன்று. எங்களுடைய படம் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படுவதும், நாங்கள் வியந்து பார்த்த ஒருவரிடமிருந்து அதற்கான பாராட்டுகளைப் பெறுவதைக் காட்டிலும் வேறு என்ன சிறப்பான விஷயம் ஒரு இயக்குநராக எனக்கு கிடைத்து விட முடியும். ரொம்ப நன்றி அண்ணா” என தெரிவித்துள்ளார்.

இதேபோல் படத்தின் நாயகியும் இந்தச் சந்திப்பு குறித்து நெகிழ்ந்து பதிவிட்டுள்ளார். அனிஷ்மா அனில்குமார் வெளியிட்டுள்ள அந்தப் பதிவில், ‘12-ம் வகுப்பு படிக்கும்போது கால் உடைந்த நிலையில், வீட்டில் இருந்தபடி உங்களுடைய படங்களை டிவியில் திரும்ப திரும்பப் பார்த்துக் கொண்டிருந்த அந்த சின்னப் பெண், நேற்று (அக்.12) நான் அவ்வளவு அமைதியாக இருக்க முயற்சி செய்ததை நம்பவே மாட்டாள்.

என் வாழ்க்கையில் இவ்வளவு நெகிழ்ச்சியான தருணத்தை நான் உணர்ந்ததே இல்லை. என் எண்ணங்கள் 2013-ம் ஆண்டுக்கு சென்றன. கலைஞர் டிவியில் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படம் பார்த்ததும், சன் மியூசிக்கில் ‘பார்க்காத பார்க்காத’ பாடல் கேட்ட ரசித்த நான் இறுதியாக நேற்று உங்களை நேரில் சந்தித்து விட்டேன். கனவு காணத் துணியும் அனைவருக்கும் நீங்கள் ஓர் உத்வேகமாக இருக்கிறீர்கள் சார். அதற்காக நன்றி. மேலும் நீங்கள் சொன்னது போல், முயற்சி பண்ணிட்டே இருக்கணும்’ என தெரிவித்துள்ளார்.

அறிமுக இயக்குநர் ராஜா கருப்பசாமி இயக்கத்தில், ரிஷிகாந்த், அனிஷ்மா அணில்குமார் நடிப்பில் திரையரங்குகளில் வெளியான படம் ‘மொத ராத்திரி’.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான இப்படம், ஒரு கிராமத்து திருமணப் பின்னணியில் நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்களை மையமாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. கிராமத்து மனிதர்களின் இயல்பான உரையாடல்கள், குடும்ப உறவுகள் மற்றும் நகைச்சுவை உள்ளிட்ட அம்சங்கள் இப்படத்துக்கு பெரிய பலமாக அமைந்தன.

கடந்த ஆக்ஸ்ட் 21 திரையரங்குகளில் வெளியான இப்படம் பெரும் வரவேற்பையும் பாராட்டுகளையும் பெற்றது. நடிகர் தனுஷ் இந்தத் திரைப்படத்தைப் பாராட்டி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். மேலும் சிலம்பரசன், ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட திரையுலக பிரபலங்களும் இப்படத்துக்கு தங்களது பாராட்டை தெரிவித்தனர்.

“இது ஸ்பெஷல்...” - சிவகார்த்திகேயன் பாராட்டுக்கு ராஜா கருப்பசாமி, அனிஷ்மா நெகிழ்ச்சி
இந்தியில் ‘த்ரிஷ்யம் 3’ படத்தின் ‘முடிவு’ - மோகன்லால் பாராட்டு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in