

தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய சினிமாவில் தொடர்ந்து, தனித்துவமான பின்னணி இசை மூலம் கவனம் ஈர்த்து வரும் சாம் சிஎஸ், அடுத்து இந்திக்கும் செல்கிறார்.
கைதி, விக்ரம் வேதா, அடங்கமறு, ஆர்டிஎக்ஸ், புஷ்பா 2, மஹாவதார் நரசிம்மா உள்ளிட்ட பல படங்களில் அவருடைய பின்னணி இசை பேசப்பட்டது. இந்நிலையில், 2016-ம் ஆண்டு வெளியான ‘புரியாத புதிர்’ படத்துக்காக அவருக்கு தமிழக அரசின் சிறந்த இசை அமைப்பாளர் விருது கடைத்துள்ளது.
இதுபற்றி அவர் கூறும்போது, “‘புரியாத புதிர்’ படத்தில் கதையின் மனநிலையை நுணுக்கமாக பிரதிபலிக்கும் வகையில் பின்னணி இசை அமைத்திருந்தேன். கதையின் த்ரில்லர் அனுபவத்தை அது இன்னும் தீவிரமாக்கியது.
அதற்கு விருது கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி. அந்தப் படக்குழுவுக்கும் என் நன்றி. இனி வரும் காலங்களிலும் ரசிகர்களின் மனதைத் தொடும், மகிழ்விக்கும் தரமான படைப்புகளில் தொடர்ந்து பணியாற்றுவேன். இப்போது சில வெப் தொடர்கள், ரவிமோகனின் கராத்தே பாபு, கார்த்தியின் சர்தார் 2 உள்பட சில படங்களில் பணியாற்றிவருகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.