

சசிகுமார்
சசிகுமார் நடித்திருக்கும் குற்றப்புலனாய்வு த்ரில்லர் வெப் சீரிஸ் ‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி’. ஆக.7-ல் பிரைம் வீடியோவில் வெளியாகும் இதில் மூஸா ராசா என்ற கதாபாத்திரத்தில் போலீஸாக நடித்திருக்கிறார் அவர்.
ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கி இருக்கும் இதில் யஷ்வந்த், அனகா, அபர்ணா தாஸ், விவேக் பிரசன்னா, ரேவதி சர்மா, அர்ஜுன் நந்தகுமார் என பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். புஷ்கர் காயத்ரி தயாரித்துள்ள இந்த வெப் தொடருக்கு சைமன் கிங் இசை அமைத்திருக்கிறார். இத்தொடர் பற்றி சசிகுமாரிடம் பேசினோம்.
உங்களோட முந்தைய சில படங்கள்ல ரவுடியா நடிச்சிருக்கீங்க... இதுல போலீஸா மாறியிருக்கீங்க?
அதுதான் சினிமா. ஒரு நடிகனா இருக்கிறதாலதான் இதெல்லாம் சாத்தியமாகுது. எந்த கேரக்டராகவும் மாறும் வாய்ப்பு இதுல மட்டும்தான் கிடைக்கும். முதல்ல மதுரை ரவுடி கதைகளா வந்தது. அப்ப அதை பண்ணினேன். இப்ப போலீஸ் கதை வந்திருக்கு. அடுத்து வழக்கறிஞராகவும் பண்ணலாம். நீதிபதியாகவும் பண்ணலாம். இந்த வெப் சீரிஸ் கதையை இயக்குநர் சொல்லும்போது, எனக்கு பிடிச்சிருந்தது.
ஒரு நிரபராதியை காப்பாற்ற ஒரு போலீஸ் போராடுற கதைதான் இந்த தொடர். பார்வையாளர்கள் போலீஸ் பக்கம் நிற்கிற மாதிரியான கதை. இதுல வர்ற ‘தி மிஸ்டரி ஆஃப் மணி’ கேரக்டருக்குத்தான் என்னை இயக்குநர் கூப்பிடப் போறார்ன்னு நினைச்சேன். ஆனா, அவர் போலீஸ் கேரக்டர் பண்றீங்கன்னு சொன்னார். இதுவரை ஒரு 30 படங்கள் பண்ணிட்டேன்; யாருமே என்னை போலீஸா யோசிக்கலை. ரவுடியாதான் பார்ப்பாங்கன்னு இயக்குநர் கிட்ட சொன்னேன். ஆனா, நீங்கதான் போலீஸ் கேரக்டர் பண்ணணும்னு அவர் உறுதியா நின்னார்.
போலீஸ் யூனிபார்ம்ல இதுலதான் முதன்முதலா நடிக்கிறீங்க...
ஆமா. ஏற்கெனவே ‘என்னை நோக்கிக் பாயும் தோட்டா’ல நடிச்சிருந்தாலும் அதுல யூனிபார்ம் கிடையாது. இந்த வெப் தொடர்ல யூனிஃபார்மோட நடிக்கும் போது, நமக்குள்ளயே அந்த கம்பீரம் வந்து உட்கார்ந்திருது. அது ஒரு தனி ஃபீலிங்தான். போலீஸ்னா ஆக் ஷன் இல்லாம இருக்காது. ஆனா, எந்த மிகைப்படுத்தலும் இல்லாம, யதார்த்தமா அந்த ஆக் ஷன் இருக்கும். அதாவது அது ஒரு சூப்பர் ஹீரோவா இருக்காது, ஒரு ஹீரோவா இருக்கும்.
ரெண்டுக்கும் வித்தியாசம் இருக்கு. கதையில தாடி வச்சிருக்கிற போலீஸா வர்றேன். அது ஏன் அப்படிங்கறதுக்கு காரணம் இருக்கு. அது நல்லாயிருக்கும். இந்த கதாபாத்திரத்துக்கு இன்ஸ்பிரேஷனா சிலரை நான் நினைச்சிருந்தேன். ஆனா, இயக்குநர் ஆண்ட்ரூ அதை அப்படியே ஓரமா வச்சுட்டு, அவரோட மைண்டல இருக்கிற போலீஸா என்னை நடிக்க வச்சிருக்கார். அவர் என்ன சொன்னாரோ, அதை பண்ணியிருக்கேன். ‘வதந்தி சீசன் 1 தொடருக்கும் இதுக்கும் தொடர்பு இல்லை. இதுவும் புதுமையா இருக்கும்.
த்ரில்லர் கதைகள் நிறைய வந்திருக்கு... இதுல என்ன ஸ்பெஷல்?
நிறைய வந்திருக்கலாம். இதுவரை வெளியான இதுபோன்ற ஜானர் கதைகள்ல குற்றவாளிகளை கண்டுபிடிச்சிடணும்ங்கற பரபரப்புதான் இருக்கும். இந்த வெப்தொடர்ல, ஹீரோ பாவம். போலீஸ் எப்படியாவது குற்றவாளியை கண்டுபிடிச்சு, இவனை ரிலீஸ் பண்ணணும்ங்கற பரபரப்பு இருக்கும். அதுக்கான திரைக்கதையை இயக்குநர் ஆண்ட்ரூஸ் அருமையா அமைச்சிருக்கார்.
காலைல ஆரம்பிச்சு, நைட் வரை போலீஸ் கேரக்டர்ல நடிச்சு, போலீஸாவே மாறிட்டேன். வீட்டுலயும் கூட அதே தோரணையில இருந்தேன்.
எல்லா ஹீரோக்களுக்கும் போலீஸ் கேரக்டர் மேல ஒரு காதல் இருக்கும். அதை பல ஹீரோக்களே சொல்லியிருக்காங்க. உங்களுக்கு இந்த வெப் தொடரோட மூஸா ராசா கேரக்டர் அப்படி இருந்ததா?
கண்டிப்பா. ஆனா, நான் போலீஸ் கேரக்டர் பண்ணவே முடியாதுன்னு நினைச்சேன். எனக்கு இதுக்கு முன்னால அப்படி வாய்ப்பே வரலை. ஒவ்வொரு ஹீரோவுக்கும் போலீஸ் படம் ஒரு மைல்கல்லா இருக்கும். அது மறக்க முடியாத படமாகவும் இருந்திருக்கு.
எல்லா ஹீரோவுக்குமே காக்கி உடுப்பு போட்டா அது ஹிட்டுனு சொல்வாங்க. போலீஸ் கதைகள் எல்லாம் அப்படித்தான் அமைஞ்சிருக்கு. அந்த வரிசையில எனக்கு இந்த வெப் தொடர் இருக்கும்னு நம்பறேன். இதுக்குப் பிறகு எனக்கு நிறைய போலீஸ் கதைகள் வரும்னு நினைக்கிறேன்.
நீங்க படம் இயக்கி ரொம்ப வருஷமாச்சே...
ஆமா. நீங்களும் வருஷா வருஷம் கேக்கறீங்க; நானும் அடுத்த வருஷம் அடுத்த வருஷம்னு சொல்லிட்டே இருந்தேன். அந்த அடுத்த வருஷம் எப்ப வரும்னு கேட்பீங்க. சீக்கிரமா இயக்கப் போறேன். வேல ராமமூர்த்தியோட ‘குற்றப்பரம்பரை’ கதையை ஹாட் ஸ்டாருக்கு வெப் சீரிஸா பண்றேன். ரத்னகுமார் எழுதி இயக்குநர் பாரதிராஜா பண்ண வேண்டிய ‘குற்றப்பரம்பரை’ கதையை சினிமாவா பண்ணப் போறேன். இந்த ரெண்டும் அடுத்தடுத்து இருக்கு.