

கோப்புப்படம்
தேவாவின் இசை, தமிழ் இசையின் ஆன்மாவோடு பிணைந்தது என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் புகழஞ்சலி செலுத்தி உள்ளார்.
தேவாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் ரஹ்மான் வெளியிட்டுள்ள பதிவில், ‘நமது அன்புக்குரிய ‘தேனிசைத் தென்றல்’ தேவா ஐயாவின் மறைவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது. தமிழ் இசையின் ஆன்மாவோடு பிணைந்த அவரது மெல்லிசைகள், பல தலைமுறையினரின் இதயங்களைத் தொட்டுள்ளன. அவை வரும் காலங்களிலும் தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருக்கும்.
அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா அமைதியில் நிலைபெறட்டும்’ என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே, தேவாவின் திடீர் மறைவை ஒட்டி தனது ஸ்டூடியோவில் இன்று நடக்க இருந்த அனைத்து இசைப் பணிகளையும் இளையராஜா ரத்து செய்திருந்தார்.
தேவாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ஹிப் ஹாப் தமிழா ஆதி வெளியிட்டுள்ள பதிவில், ‘தேனிசைத் தென்றல் தேவா மறைந்தார் என்ற செய்தி கடும் அதிர்ச்சி அளிக்கிறது. ‘மீசைய முறுக்கு-2’ படத்தின் உருவாக்கத்தின் போதும், வெளியீட்டின் போதும் அவரோடு உரையாடிய அனுபவங்கள் என்றும் மறக்க முடியாதவை.
சமீப காலத்தில் அவரோடு நெருங்கி பழக வாய்ப்பு கிடைத்ததை மிகப்பெரும் பாக்கியமாக கருதுகிறேன். எந்தவித பின்புலமும் இல்லாமல் கலைத்துறையில் நுழைந்து மிகப்பெரிய வெற்றிச் சிகரங்களைத் தொட்டு ஏராளமானோருக்கு முன்மாதிரியாக திகழ்ந்த ஒருவரை தமிழ்ச் சமூகம் இழந்துள்ளது.
எளிய மக்களின் இசையை திரையில் கொண்டுச் சேர்த்த மாபெரும் கலைஞரான தேவா என்றென்றும் நினைவுகூரப்படுவார்.
தேவா அப்பாவின் குடும்பத்திற்கும், அவரது ரசிகர்களுக்கும், ரசிகர்களில் ஒருவனாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் வெளியிட்டுள்ள பதிவில், ’உங்களையும், உங்களுடனான நினைவுகளையும் நாங்கள் என்றென்றும் நினைவு கூருவோம் தேவா சார். உங்கள் குடும்பத்தினர், உலகெங்கும் உள்ள உங்களின் ரசிகர்கள், நண்பர்களுக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.