

‘அரசன்’ படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதின் பின்னணி குறித்தும், இயக்குநர் வெற்றிமாறன் உடனான பணி அனுபவம் குறித்தும் நடிகர் விஜய் சேதுபதி விவரித்துள்ளார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படம் ‘அரசன்’. இதன் படப்பிடிப்பு கோவில்பட்டியில் நடைபெற்று வருகிறது. தாணு தயாரித்து வரும் இதன் முதற்கட்ட படப்பிடிப்பு 24-ம் தேதி வரை நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து சென்னையில் அரங்குகளில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.
‘அரசன்’ படத்தில் சிம்புவுடன் விஜய் சேதுபதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். தனது கதாபாத்திரம் குறித்து விருது வழங்கு விழா ஒன்றில் விஜய் சேதுபதி, “வெற்றிமாறன் சார் கதை எழுதும்போது, இந்த கதாபாத்திரத்துக்கு உங்கள் ஞாபகம் வருகிறது என்றார். உங்கள் ஞாபகத்தில் நான் வருவதே சந்தோஷம் சார் எழுதுங்கள் என்றேன். அவர் ஒரு திறமையான இயக்குநர். அவருடைய அறிவும், அக்கறையும் ரொம்ப ஆழகமாக இருக்கும்.
ஒருவருடன் பேசும்போதே நிறைய கற்றுக்கொள்ள முடியும் என்றால், வேலை செய்யும்போது இன்னும் நிறைய கற்றுக் கொள்ள முடியும். வெற்றிமாறன் சாருடன் வேலை செய்வது என்பது சுகமான சந்தோஷம் தான். எத்தனை நாள் படப்பிடிப்பு என்பதெல்லாம் தெரியாது. அவர் கேட்டார், வருகிறேன் என்று சொல்லிவிட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.
வெற்றிமாறன் – சிம்பு இணைந்துள்ள இதன் படப்பிடிப்பினை ஒரே கட்டமாக முடித்துவிட வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார்கள். இதன் ஒளிப்பதிவாளராக வேல்ராஜ், இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். அடுத்த ஆண்டு இறுதியில் இப்படம் வெளியாகும் என தெரிகிறது.