

சென்னை: முதுகில் அடிப்பவர்களை பற்றி எனக்கு கவலை கிடையாது என்று நடிகர் ரவி மோகன் தெரிவித்துள்ளார்.
சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பராசக்தி’. ஜனவரி 10-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தை டான் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது. இதன் விளம்பரப்படுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
இதனிடையே ‘பராசக்தி’ இசை வெளியீட்டு விழாவில் ரவி மோகன் பேசும்போது, “பலரின் கடின உழைப்பால் உருவாக்கப்பட்ட தங்கம் ‘பராசக்தி’. இந்த வருடத்தின் மிகச் சிறந்த படமாக ‘பராசக்தி’ வரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. சிவகார்த்திகேயன் எதுவுமே இல்லாமல் இதுபோன்ற மேடைகளில் ஆரம்பித்து தற்போது இந்த இடத்துக்கு வந்திருக்கிறார் என்றால், இவர் அனைத்துக்கும் தகுதியானவர். அவர் இன்னும் பெரிய மேடை ஏறி பேச வேண்டும் அதற்க்கு நீங்கள் (ரசிகர்கள்) கூடவே இருக்க வேண்டும்.
பொதுவாக பல நல்ல ஆண்கள் இருக்கும் இடத்தில் ஒரு பெண் பாதுகாப்பாக உணர்வார்கள் என்று சொல்வார்கள். ஆனால் முதல் முறையாக ஒரு பெண் (சுதா கொங்கரா) இருக்கும் இடத்தில் நான் பாதுகாப்பாக உணர்ந்தேன். எந்த தடைகள் வந்தாலும் தனி ஆளாக நின்று எதிர்கொள்வது என்பது தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனுக்கு மிகப் பெரிய வெற்றியை கொடுக்கப் போகிறது. இந்த தீயை (பராசக்தி) நிறைய பேர் அணைக்க வெளியில் முயற்சி செய்தார்கள். இந்த தீ ஆபத்தான தீயில்லை... கடவுள் முன்பு ஏற்றப்படுகின்ற அகல் விளக்கு.
‘பராசக்தி’யில் ஏன் வில்லனாக பண்ணுகிறீர்கள் என்று நிறைய கேட்டார்கள். எனக்கு ரெண்டே காரணம்தான் இருந்தது. ஒன்று சுதாவின் கதை, மற்றொன்று சுதா. ஆனால் இந்த முடிவு குறித்து தற்போது நினைத்துப் பார்க்கையில் எந்த கவலையும் இல்லை, மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது. என்னை இத்தனை நாட்களாக ஹீரோவாக பார்த்தீர்கள், இனிமேல் என்னை வில்லனாக பார்ப்பீர்கள்.
இந்தப் படம் சுயமரியாதையை காப்பாற்றுகின்ற படம். நானும் என்னுடைய வாழ்க்கையில் என்னுடைய சுயமரியாதையை காப்பாற்றுவதற்கு முயற்சி செய்திருக்கிறேன். முதுகில் அடிப்பவர்களை பற்றி எனக்கு கவலை கிடையாது. கண்ணுக்கு தெரிபவர்களைப் பற்றிதான் எனக்கு கவலை. அனைவருக்கும் ஒரு அண்ணனாக சொல்கிறேன் சுயமரியாதையை மட்டும் இழக்கக் கூடாது. இதை மட்டும் மனதில் வைத்துக் கொண்டால் நல்ல மனிதனாக இந்த உலகத்தில் வாழ முடியும்” என்று ரவி மோகன் பேசினார்.