

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்துள்ள படம், ‘பராசக்தி’. ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்துள்ள இப்படம் பொங்கலை முன்னிட்டு ஜன.10-ல் வெளியாகிது. இதன் பாடல் வெளியீட்டு விழா தனியார் கல்லூரி ஒன்றில் நடந்தது. படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
விழாவில் சிவகார்த்திகேயன் பேசும்போது, “பராசக்தி என்ற பெயரே மிகுந்த வலிமை கொண்டது. அந்த பெயருக்கு ஏற்றபடி, இந்தப் படமும் அதே அளவு தாக்கத்தை ஏற்படுத்தும். 1960-களுக்கு டைம் டிராவல் செய்து பார்வையாளர்களை அழைத்துச் செல்லும் படம் இது. மாணவர்கள் எப்போதுமே சக்தி வாய்ந்தவர்கள். அவர்கள் எந்த அளவுக்கு வலிமை கொண்டவர்களாக இருந்தார்கள் என்பதை இந்தப் படம் அழுத்தமாக காட்டுகிறது.
படத்தின் உள்ளடக்கம் குறித்து பல கருத்துகள் வெளிவருகின்றன. ஆனால் பலரின் தியாகங்களை நாம் நேர்மறையாகவும் மரியாதையுடனும் பதிவு செய்திருக்கி றோம். இதில் ரவிமோகன் சார், பவர்புல் வில்லன் கதாபாத்திரத்தில் வருகிறார்.
ஜனவரி 9-ம் தேதி வெளியாகும் ‘ஜனநாயகன்’ படத்தை தியேட்டருக்கு சென்று பாருங்கள். 33 வருடம் திரைத் துறையில் மகிழ்வித்தவர். கடைசி படம் என்று சொல்லி இருக்கிறார். ஆகவே ஜனவரி 9ம் தேதி அதை கொண்டாட வேண்டும். அடுத்த நாள் ஜனவரி 10ம் தேதி ‘பராசக்தி’ படத்துக்கு வாருங்கள்” என்றார்.