

‘சிறை’, ‘யூத்’ ஆகிய படங்களின் மூலம் கவனிக்கப்பட்டவர் நடிகை அனிஷ்மா அனில்குமார். இவர் இப்போது நடித்துள்ள படம், ‘மொத ராத்திரி’. ராஜா கருப்பசாமி இயக்கியுள்ள இப்படத்தில் ரிஷிகாந்த், சேத்தன், ஏ.வெங்கடேஷ், பானுப்பிரியா என பலர் நடித்துள்ளனர்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் நடித்திருப்பது பற்றி அவர் கூறும்போது, “இதில் எனது கதாபாத்திரத்தின் உணர்வுப்பூர்வமான தன்மைதான் என்னை கவர்ந்தது. குறிப்பாக, பெண்கள் பல நேரங்களில் ஒரே நேரத்தில் பல்வேறு உணர்வுகளை அனுபவிப்பார்கள். அதிலும், அவர்கள் முற்றிலும் புதிதான ஒரு சூழ்நிலையில் இருக்கும்போது அந்த உணர்வுகள் இன்னும் அதிகமாக இருக்கும்.
அதனால், வழக்கமான நாயகி கதாபாத்திரமாக சித்தரிக்காமல், உண்மைத் தன்மையுடன் அணுக வேண்டும் என்று விரும்பி அதற்கேற்ப நடித்திருக்கிறேன். ஒரு பெண் தனது வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் செல்லும்போது, ஏற்படக் கூடிய எதிர்பார்ப்புகள், பதற்றம் இதில் இருக்கின்றன.
நடிகையாக என்னுடைய முதிர்ச்சியான பக்கத்தை இப்படம் வெளிப்படுத்தி இருக்கிறது. நகைச்சுவையும் பொழுதுபோக்கு அம்சங்களும் இருப்பதால் ரசித்து நடித்தேன். உறவுகள், குடும்பச் சூழல்கள் மற்றும் எதிர்பாராத நிகழ்வுகளின் வழியாக கதையில் எனக்கும் அதிக முக்கியத்துவம் இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.