

அமைச்சர் விஸ்வநாதன்
சென்னை: “போராடும் மாணவர்கள் குறித்து உயர் கல்வித் துறை அனுப்பிய சுற்றறிக்கையில் எந்த உள்நோக்கமும் இல்லை. இந்த அரசுக்கு மாணவர்கள், இளைஞர்களின் உரிமைகளை கட்டுப்படுத்தும் நோக்கம் இல்லை” என சட்டப்பேரவையில் உயர் கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் விளக்கம் அளித்தார்.
சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு பதிவின் மீது பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் மாரிமுத்து, “நாம் சுதந்திர நாட்டில் வாழ்கிறோம். இங்கு அனைவருக்கும் அடிப்படை உரிமைகள் உள்ளன.
உயர் கல்வித் துறை இயக்குநர், உரிமைகளுக்காக போராடும் மாணவர்கள், குறிப்பாக இடதுசாரி மாணவர்களை இனம் கண்டு, அவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை சேகரித்து அனுப்ப சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. சுதந்திர நாட்டில் இப்படி உரிமைக்காகப் போராடும் மாணவர்களிடம் சட்டத்திற்குப் புறம்பாக நடந்து கொள்ளலாமா?” என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த உயர் கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன், “மாணவர்களின் போராட்டங்கள் சம்பந்தமான நடவடிக்கைகள் குறித்து உடனடியாக முதல்வரின் கவனத்துக்கு கொண்டுசெல்லப்பட்டது. மாநில அளவில் சில நேர்வுகளில் நடக்கும் போராட்டங்களில் ஒழுங்கு அமைதி பராமரிக்கப்பட வேண்டியது குறித்த கடிதம் ஆகஸ்டு 17 அன்று உயர் கல்வித் துறை மூலம் கல்லூரி இயக்கத்துக்கு அனுப்பப் பட்டது. அதன்படி கல்வி நிறுவனங்களின் மேற்கொள்ள வேண்டிய ஒழுங்கு அமைதி குறித்து ஆகஸ்டு 20-க்குள் அறிக்கை அனுப்ப வேண்டிய சூழ்நிலை எழுந்தது.
அனைத்து அரசுக் கல்லூரிகளின் கல்வி சூழல் மற்றும் ஒழுங்கமைதி பராமரிக்கப்படுவதை உறுதி செய்வதை முன்னிட்டு அனைத்துக் கல்லூரிகளின் முதல்வருக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. அதில் தவறுதலாக சில வாசகங்கள், குறிப்பிட்ட கட்சிகள் மற்றும் அமைப்புகளைப் பற்றி குறிப்பிட்டிருந்தது. அவ்வாறான வாசகங்கள் இடம்பெற்று இருப்பதை அறிந்த கல்லூரி இயக்குனரகம் உடனடியாக மேற்குறிப்பிட்ட சுற்றறிக்கையைத் திரும்பப் பெற்றது.
இந்த செயல் எவ்வித உள்நோக்கமும் இன்றி, முற்றிலும் கல்வி நிறுவனங்களின் ஒழுங்கமைதியை பராமரித்தல் பற்றிய நோக்கத்தின் பால் அனுப்பப்பட்டது. இந்த அரசுக்கு மாணவர்கள், இளைஞர்களின் உரிமைகளை கட்டுப்படுத்தும் நோக்கம் இல்லை. மாணவர்கள், இளைஞர்கள் நியாயமான உரிமைகளைக் மதிக்கும் அரசாக இந்த அரசு செயல்படும்” என்றார்.
இந்த விவாதத்தில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் தளி ராமச்சந்திரன், “இடதுசாரி மாணவர் அமைப்புகள், நீட் எதிர்ப்பு, நீட் வினாத்தாள் கசிவு மற்றும் கட்டணக் கொள்ளைகளுக்கு எதிராகத்தான் ஜனநாயக ரீதியாகப் போராடுகின்றன.
குறிப்பாக, இடதுசாரி மாணவர் அமைப்புகளை மட்டும் குறிவைத்து அரசு இந்தச் சுற்றுறிக்கையை அனுப்பியிருப்பது அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கு அமைச்சர் விளக்கமாகப் பதிலளித்திருக்கிறார், நன்றி” என்றார்.