

மூன்ரைஸ் கிங்டம்...
திரைப்படம் என்கிற உணர்வை ரசிகர்களுக்குக் கடத்துவதில் தொழில்நுட்பக் கருவிகளுக்குப் பெரும் பங்கு உண்டு. உலகத் திரை வரலாற்றில், 35எம்எம் என்பது பொது அடையாளமாகக் கருதப்பட்ட வேளையில், 16எம்எம் என்பது நம்பகத்தன்மை மற்றும் எளிமையின் அடையாளமாகத் திகழ்ந்தது. 16எம்எம் என்பது சுருங்கிய வடிவம் அல்ல; அது ஒளிப்பதிவில் தத்துவார்த்தப் புரட்சி.
16எம்எம்-ன் தோற்றமும் அதன் அவசியமும்: 1920-களின் தொடக்கத்தில் கோடாக் நிறுவனம் 16எம்எம் ஃபிலிம் சுருள்களை அறிமுகப்படுத்தியபோது, அது ஒரு தொழில்முறை வடிவமாகப் பார்க்கப்படவில்லை. மாறாக, அமெச்சூர் ஃபிலிம் எடுப்பவர்களுக்காகவும், கல்வி நிறுவனங்களுக்காகவுமே உருவாக்கப்பட்டது. ஆனால், இரண்டாம் உலகப் போர் மற்றும் அதற்குப் பிந்தைய காலக்கட்டம் இதன் போக்கை மாற்றியது.
35எம்எம் கேமராக்கள் மிகப் பெரியவை, கனமானவை மற்றும் இயக்குவதற்கு அதிக டெக்னீஷியன்களும் தேவைப்படுவர். போர்க்களத்தில் நடக்கும் நிகழ்வுகளையோ அல்லது ஒரு நாட்டின் சமூக மாற்றங்களையோ உடனுக்குடன் படம்பிடிக்க ‘போர்ட்டபிள்’ கேமராக்கள் தேவைப்பட்டன. 16எம்எம் இந்தத் தேவையைப் பூர்த்தி செய்தது.
குறைந்த எடை, எளிமையான கையாளும் திறன் மற்றும் மலிவான விலை காரணமாக, இது ஆவணப்பட இயக்குநர்களின் விருப்பமான கருவியானது. சினிமா என்பது ஸ்டூடியோக்களுக்குள் மட்டும் முடங்கிக் கிடக்காமல், வீதிகளுக்கும் மக்களின் வாழ்வியலுக்கும் இறங்கி வர, 16எம்எம் கேமரா முக்கியக் காரணமாக அமைந்தது.
இந்திய சினிமாவில் 16 எம்எம்: பொருளாதார மற்றும் கலை உத்தி: இந்தியாவைப் பொறுத்தவரை, சினிமா என்பது எப்போதும் செலவுமிக்க கலை வடிவம். குறிப்பாக, கலைப்படங்கள் எடுக்கும் இயக்குநர்களுக்கும், சமூக மாற்றத்தை விரும்பிய ஆவணப்படக் கலைஞர்களுக்கும் 35எம்எம் என்பது எட்டாக் கனியாக இருந்தது. இந்தச் சூழலில், 16எம்எம் ஜனநாயகக் கருவியாக உருவெடுத்தது.
இந்தியாவில் பல விருது பெற்ற திரைப்படங்கள், குறிப்பாக 70 மற்றும் 80-களில் வந்த ‘புதிய அலை’ சினிமாக்கள் 16எம்எம் -ல் படமாக்கப்பட்டன. குறைந்த பட்ஜெட்டில் படமெடுக்க விரும்பிய இயக்குநர்கள், 16எம்எம் ஃபிலிம் சுருளில் படம்பிடித்து விட்டு, பின்னர் திரையரங்குகளில் வெளியிடுவதற்காக அதனை 35எம்எம் அளவுக்கு ‘ப்ளோ-அப்’ செய்து கொள்வார்கள்.
இது சமரசமாகத் தோன்றினாலும், உண்மையில் இது புத்திசாலித்தனமான உத்தியாகும். இந்தப் படங்களின் கான்ட்ராஸ்டுடன் கூடிய அடர்ந்த புள்ளிகள் கொண்ட தன்மை, அந்தத் திரைக்கதைகளுக்கு ஒரு கூடுதல் நம்பகத்தன்மையை வழங்கின.
தமிழ் சினிமாவின் திருப்புமுனை: ‘சுப்ரமணியபுரம்’ - தமிழ் சினிமாவில் 16எம்எம் பற்றிப் பேசும்போது, 2008-ல் வெளியான ‘சுப்ரமணியபுரம்’ படத்தை தவிர்க்க முடியாது. சசிகுமாரும், ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர். கதிரும் எடுத்த அந்தத் துணிச்சலான முடிவு, தமிழ் சினிமாவின் அழகியலை மாற்றியமைத்தது. 1980-களின் மதுரையைச் சித்தரிக்க அவர்கள் தேர்ந்தெடுத்தது 16எம்எம் ஃபிலிம்.
சுப்ரமணியபுரம்...
வழக்கமாக சினிமாவில் ‘கிரெய்ன்ஸ்’ எனப்படும் புள்ளிகள் ஒரு குறையாகக் கருதப்படும். ஆனால், சுப்ரமணியபுரத்தில் அந்த கிரெய்ன்ஸே படத்துக்கு ஒரு ‘நேர்மையான’ தோற்றத்தைத் தந்தது. அது ஒரு சினிமா என்பதைத் தாண்டி, நம் கண்முன்னே நடக்கும் நிகழ்வு போன்ற உணர்வை ஏற்படுத்தியது. இந்தப் படத்துக்குப் பிறகு, கையடக்க கேமராக்களைக் கொண்டு எடுக்கப்படும் ‘ஹேண்ட்ஹெல்ட்’ ஷாட்கள் தமிழ் சினிமாவில் ஒரு பாணியாகவே மாறியது.
சமகால இந்தியப் படங்களில் இதன் தாக்கம்: சுப்ரமணியபுரத்தைத் தொடர்ந்து, பல இந்தியப் திரைப்படங்கள் 16எம்எம்-ன் அழகியலைத் தழுவின. இயக்குநர் கிரண் ராவின் தோபி காட் (மும்பை டைரீஸ்), திரைப்படத்தில் மும்பையின் சந்தடி நிறைந்த தெருக்களையும், தனிமையையும் படம்பிடிக்க ‘சூப்பர் 16 எம்எம் பயன்படுத்தப்பட்டது.
மும்பை போன்ற நெரிசலான நகரில், பெரிய கேமராக்களை இயக்குவதை விட 16எம்எம் கேமராக்களின் பயன்பாடு நெருக்கமான உணர்வைத் தந்தது. இடைவேளை இல்லாமலேயே வெளியிடப்பட்டது இத்திரைப்படத்தின் மற்றொரு சிறப்பம்சம்.
வறட்சி மற்றும் பருவநிலை மாற்றத்தைப் பற்றிப் பேசும் ‘கத்வி ஹவா’ என்ற இந்திப்படம், 16எம்எம்-ன் ரா இமேஜிங் தன்மையைப் பயன்படுத்தி, அந்த நிலப்பரப்பின் கடுமையை அழகாகப் பதிவு செய்தது.
வாரணாசியின் மரணச் சடங்குகள் மற்றும் பழமைக்கும் புதுமைக்கும் இடையிலான போராட்டத்தைச் சொல்ல ‘பாரா பை பாரா’ திரைப்படத்தில் 16 எம்எம் பயன்படுத்தப்பட்டது. அதன் மங்கலான, ஆனால் ஆழமான காட்சிகள் படத்தின் ஆன்மாவைத் தாங்கி நின்றன.
உலக சினிமா மற்றும் ஹாலிவுட்டில் 16 எம்எம்-ன் ஆதிக்கம்: பிரம்மாண்டமான டிஜிட்டல் கேமராக்கள் வந்த பிறகும் ஹாலிவுட்டில் கூட பல முன்னணி இயக்குநர்கள் 16எம்எம் ஃபார்மட்டை தொடர்ந்து பயன்படுத்திக் கொண்டேயிருக்கிறார்கள். இயக்குநர் டாரன் அரோனோஃப்ஸ்கியின் முதல் கருப்பு வெள்ளை படமான ‘பை’ (Pi), 16 எம்எம்-ல் எடுக்கப்பட்டது. அதன் அதீத கான்ட்ராஸ்ட், நாயகனின் மன உளைச்சலை அப்படியே பிரதிபலித்தது.
பின்னர் இவர் தி ரெஸ்லர் மற்றும் தி ப்ளாக் ஸ்வேன் படங்களிலும் 16 எம்எம் ஃபார்மட்டைப் பயன்படுத்தி, கதாபாத்திரங்களின் உடல் ரீதியான வலியை ரசிகர்களுக்குக் கடத்தினார்.
மார்க் ஜென்கின்...
இயக்குநர் வெஸ் ஆண்டர்சன் தனது ‘மூன்ரைஸ் கிங்டம்’ படத்தில், 1960-களின் உணர்வைக் கொண்டு வர சூப்பர் 16 எம்எம் பயன்படுத்தினார். அதன் மென்மையான வண்ணங்கள் ஒரு கதைப்புத்தகத்தைப் புரட்டுவது போன்ற உணர்வைத் தந்தன.
டிஜிட்டல் யுகத்தில் 16 எம்எம் -ன் நீட்சி: இன்று நாம் டிஜிட்டல் கேமராக்களில் படமெடுக்கிறோம். ஆனாலும், 16எம்எம் விட்டுச் சென்ற அந்த ‘லுக்’ இன்றும் பேசப்படுகிறது. மைக்ரோ ஃபோர் தேர்ட்ஸ் சென்சார்கள் கொண்ட நவீன கேமராக்கள், 16 எம்எம்-ன் அதே காட்சிப் பரப்பை நமக்கு வழங்குகின்றன.
தமிழில் வெளியான ‘அருவி’ திரைப்படம் இதற்கு சிறந்த உதாரணம். சிறிய மைக்ரோ ஃபோர் தேர்ட்ஸ் கேமராக்களைக் கொண்டு எடுக்கப்பட்ட இந்தப் படம், 16 எம்எம் -ன் அதே நெருக்கமான, யதார்த்தமான உணர்வைத் தந்தது. அதேபோல், பல குறும்பட இயக்குநர்கள் இன்று டிஜிட்டல் முறையில் 16எம்எம்’ ஃபில்டர்களை’ பயன்படுத்துவது, அந்த வடிவத்தின் மீதான காதலைக் காட்டுகிறது.
இன்றும் 16எம்எம் ஏன் கொண்டாடப்படுகிறது? - டிஜிட்டல் சினிமா மிகத் தெளிவானது, பிழைகளற்றது. ஆனால் மனித வாழ்க்கை பிழைகளும், ஏற்றத் தாழ்வுகளும் கொண்டவை. 16எம்எம் அவற்றை மறைக்காமல் காட்டுகிறது. அதன் ‘கிரெய்ன்ஸ்’ ஒரு காட்சியில் இருக்கும் உயிர் அணுக்களைப் போன்றவை. அவை திரையில் ஒருவிதத் துடிப்பை (ஆர்கானிக் ஃபீல்) ஏற்படுத்துகின்றன.
கோடாக் நிறுவனம் 16 எம்எம்-ன் நூறாவது ஆண்டைக் கொண்டாடும் இவ்வேளையில், மார்க் ஜென்கின் போன்ற இயக்குநர்கள் இன்றும் அந்தப் ஃபிலிம் சுருள்களைத் தன் கைகளாலேயே கழுவி (ஹேண்ட் ப்ராஸ்ஸிங்) படமெடுப்பது, அதன் உன்னதத்தை சொல்கிறது.
சினிமா என்பது பிரம்மாண்டமான செட்களிலோ அல்லது விலையுயர்ந்த கேமராக்களிலோ மட்டும் இல்லை. அது ஒரு நேர்மையான பார்வையில் இருக்கிறது. 16எம்எம் நமக்குக் கற்றுத் தரும் பாடம் இதுதான்: “உண்மைக்கு அலங்காரங்கள் தேவையில்லை.” மதுரையின் புழுதி படிந்த தெருக்களாக இருந்தாலும், ஈராக்கின் போர் முனையாக இருந்தாலும், 16எம்எம் அந்த இடத்தின் ஆன்மாவை அப்படியே காட்சிப்படுத்த உதவுகிறது.
(புதன்தோறும் ஒளிகாட்டுவோம்)
- cjrdop@gmail.com