

தி ஹேட்ஃபுல் எய்ட், மெக்கன்னாஸ் கோல்ட், ஷோலே, கன்ஸ் ஆப் நவ்ரோன்
சினிமா என்பது நம்மைச் சுற்றியுள்ள உலகம் மறைந்து, இருளுக்குள் ஒரு மாபெரும் ஒளி, நம்மை வேறொரு காலத்துக்கு, வேறொரு தேசத்துக்கு அழைத்துச் செல்லும் வித்தை.
அதன் உச்சம் எது என்று கேட்டால், 70எம்எம் (எழுபது மில்லி மீட்டர்) திரை என்று எந்தத் தயக்கமும் இன்றிச் சொல்லலாம். திரைப்பட வரலாற்றில் ‘பெரியது’ (க்ராண்டர்) என்ற சொல்லுக்கு உண்மையான அர்த்தம் கொடுத்தது இந்தத் திரைவடிவம்தான்.
65 எம்எம் மற்றும் 70 எம்எம் –அடிப்படை: இதில் ஒரு எளிய விதி இருக்கிறது. 65எம்எம் என்பது படப்பிடிப்பு வடிவம்; 70 எம்எம் என்பது திரையிடல் (வெளியீட்டு) வடிவம். படப்பிடிப்பின் போது கேமராவுக்குள் ஓடும் படச்சுருள் 65 எம்எம் அகலமுடையது. திரையரங்குகளுக்காக அதே படத்தை பிரின்ட் எடுக்கும்போது, ஓரங்களில் 6 மேக்னடிக் ஒலித்தடங்களுக்காக (மேக்னடிக் சவுண்ட் டிரேக்ஸ்) 5 எம்எம் கூடுதலாகச் சேர்க்கப்படுகிறது.
65 எம்எம் (படம்) + 5 எம்எம் (ஒலி) = 70எம்எம் திரை அனுபவம்: இதனால்தான் 70-எம்எம் திரையிடலில் அதிக ஒளிர்வு, குறைந்த துகள் தோற்றம் (க்ரெய்ன்) மற்றும் அன்றைய காலத்திலேயே தியேட்டரைச் சுற்றியும் ஒலியை அதிரச் செய்த ‘ஸரெளண்ட் சவுண்ட்’ தொழில்நுட்பமும் சாத்தியமானது.
இமேஜ் அளவு முக்கியம் – (லென்ஸ்) அறிவியல்: பரந்த வடிவத்தின் (லார்ஜ்) உண்மையானசக்தி, அதன் லென்ஸ் தேர்வில் ஒளிந்துள்ளது. 35 எம்எம் சினிமாஸ்கோப் வடிவத்தில் ஒரு காட்சியின் இயல்பான பார்வையைப்பெற 50 எம்எம் லென்ஸ் பயன்படுத்தப்படும். ஆனால், 65 எம்எம் வடிவத்தில் அதே கோணத்தைப் பெற (நார்மல் ஆங்கிள் ஆஃப்வியூ) 85 எம்எம் லென்ஸ் பயன்படுத்தப்பட வேண்டும்.
இதன் விளைவு மகத்தானது. 85 எம்எம் லென்ஸ் பயன்படுத்தப்படுவதால், பிம்பங்கள் இன்னும் திடமாகவும் (போல்டர்), முப்பரிமாணத் தன்மையுடனும் (ரெளண்டர்) தோன்றும். பின்னணி மென்மையாகப் பிரிந்து கொள்ள, மனித முகங்கள் ரத்தமும் சதையுமான கனத்தோடு (விஷுவல் வெயிட்) திரையில் மிளிரும். 35 எம்எம்-ல் இதே காட்சி சற்று தட்டையானது போல தோன்றலாம்.
70 எம்எம் மற்றும் சினிமாஸ்கோப்: ஒப்பீடு: சினிமாஸ்கோப் என்பது 35 எம்எம் ஃபிலிமை அனமார்ஃபிக் லென்ஸ்கள் மூலம் குறுக்கி, பிறகு திரையில் விரிக்கும் தொழில்நுட்பம். இது ஒரு சிறிய துணியை இழுத்து அகலப்படுத்துவது போன்றது. ஆனால் 70 எம்எம் என்பது ‘நேட்டிவ்’ அகல வடிவம். ஃபிலிமே அகலமாக இருப்பதால், எவ்விதச் சிதைவும் இன்றி இயற்கையான பிரம்மாண்டத்தைத் தருகிறது.
வளைந்த திரைகள் (கர்வுடு ஸ்க்ரீன்ஸ்): காட்சிப் பிரம்மாண்டம்: 70 எம்எம் திரையரங்குகளின் அடையாளம் அதன் வில் போன்ற வளைந்த திரைகள். இதன் பின்னணியில் ஆழமான காட்சி அறிவியல் ஒளிந்துள்ளது. பர்ஸ்பெக்டிவ் திருத்தம்: திரையை வளைக்கும் போது, லென்ஸிலிருந்து திரையின் எல்லாப் புள்ளிகளுக்கும் இடைப்பட்ட தூரம் சமமாகிறது. இது பிம்பத்தை விளிம்பு வரை கூர்மையாகவும் (ஷார்ப்) தெளிவாகவும் வைத்திருக்கிறது.
புறப்பார்வை (பெரிஃபெரல் விஷன்): மனிதக் கண்கள் சுமார் 210 டிகிரி கோணத்தில் பார்க்கும் திறன் கொண்டவை. 70எம்எம் வளைந்த திரைகள் நமது ‘புறப்பார்வை’ எனப்படும் ஓரக்கண் பார்வையையும் ஆக்கிரமிக்கின்றன. இதனால் நாம் திரையைப் பார்க்கிறோம் என்ற உணர்வு மறைந்து, அந்தத் திரை நம்மைச் சூழ்ந்திருப்பதைப் போன்ற பிரமை (இம்மெர்ஷன்) உருவாகிறது.
இந்தியாவில் 70 எம்எம் கலாச்சாரம்: இந்தியாவில் 70 எம்எம் என்பது தொழில்நுட்பம் என்பதைத்தாண்டி, மாபெரும் திருவிழாவாகக் கொண்டாடப்பட்டது. ‘கன்ஸ் ஆஃப் நவரோன்’ (1961) மற்றும் ‘மெக்கன்னாஸ் கோல்ட்’ (1969) போன்ற ஹாலிவுட் படங்கள் வெளியான போது நாடெங்கும் ஏற்பட்ட அதிர்வலைகள் இன்றளவும் பேசப்படுகின்றன.
சென்னையில் சஃபையர், ஆனந்த் மற்றும் தேவி திரையரங்குகள் இந்த 70 எம்எம் கலாச்சாரத்தின் மையப்புள்ளி களாகத் திகழ்ந்தன. பாலிவுட்டின் ‘ஷோலே’ திரைப்படம் 70 எம்எம்-ல் வெளியானபோது இந்தியத் திரையரங்க வரலாறே மாறியது.
டிஜிட்டல் யுகத்தில் 65 எம்எம்-ன் மறுபிறப்பு: இன்று உலகம் டிஜிட்டல் மயமாகிவிட்டாலும், 65 எம்எம் -ன் மோகம் குறையவில்லை. இப்போது டிஜிட்டல் 65 எம்எம் கேமராக்கள் (எடுத்துக்காட்டாக: அலெக்ஸா 65) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இவை ஃபிலிம் சுருள் இல்லாமலேயே, அதே 65எம்எம் சென்சார் அளவைப் பயன்படுத்தி அந்தப் பிரம்மாண்டமான ‘லார்ஜ் ஃபார்மட்’ காட்சிகளை வழங்குகின்றன.
ஏன் 70 எம்எம் ஒரு பாடம்? - 70 எம்எம் என்பது தொழில்நுட்பம் மட்டுமல்ல. அது காட்சி ஒழுக்கம் (விஷுவல் டிஸிப்ளின்). ஒரு ஷாட்டை எடுப்பதற்கு முன் அதன் ஒளி, கோணம் மற்றும் நடிகர்களின் இடம் என அனைத்தையும் நுணுக்கமாகத் திட்டமிட வேண்டும். டிஜிட்டல் கேமராக்களின் செயற்கையான கூர்மையை விட, 65 எம்எம் தரும் அந்த மென்மையான தரம் ஒரு காவியத் தன்மையை (எபிக் ஃபீல்) உருவாக்குகிறது.
காலத்தின் மௌனம்: 2001: எ ஸ்பேஸ் ஒடிசியில், 70 எம்எம் காலத்தின் ஓட்டத்தை தியான நிலைக்குக் கடத்துகிறது. விண்வெளியின் அமானுஷ்ய அமைதியும், கருமையின் ஆழமும் நம்மை ஆத்மார்த்தமான பயணத்துக்கு இட்டுச் செல்கின்றன. இங்கே காட்சி என்பது பிரம்மாண்டம் அல்ல; அது மவுனத்தின் வழியே உணரப்படும் பிரபஞ்ச ரகசியம். அங்கே காலம் கரைந்து 70 எம்எம்–ல் ஒரு நீண்ட பெருமூச்சாக மாறுகிறது.
வெளியும் உணர்வும் (ஸ்பேஸ், எமோஷன்) - ‘தி ஹேட்ஃபுல் எய்ட்’ படத்தின் மூலம் 70 எம்எம் ஒரு புதிய எல்லையைத் தொட்டது. பனிபடர்ந்த அந்த எல்லையற்ற வெளியையும், ஒரு சிறிய அறைக்குள் உறைந்திருக்கும் மனித உணர்வுகளையும் ஒரே புள்ளியில் இணைத்தது. அடிவானம் வரை நீண்டிருக்கும் நிலப்பரப்பும், மூடிய அறைக்குள் நிலவும் இறுக்கமான மனநிலையும் அந்த அகலமான திரையில் சமநிலை பெற்றன.
70 எம்எம் என்பது ஒரு சினிமா தத்துவம். காட்சிக்கு ஆழத்தையும் (டெப்த்), அந்த ஆழத்தில் ஊடாடும் காலத்தையும் (டைம்), அந்தத் தளம் இயங்குவதற்கான வெளியையும் (ஸ்பேஸ்) வழங்குகிறது.
- cjrdop@gmail.com
(புதன்தோறும் ஒளி காட்டுவோம்)