

அடுத்த வாரம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நயன்தாரா – கவின் நடித்திருக்கும் ‘ஹாய்’ படம் ஆகஸ்ட் 28-ம் தேதி ரிலீஸாகும் என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
படத்தின் வெளியீட்டு தேதி குறித்து கவின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ‘பல பல சூப் வாங்கின பாய் ஆகஸ்ட் 28-ல் உங்களை சந்திக்கிறான்’ என தெரிவித்துள்ளார். அத்துடன் வீடியோ ஒன்றையும் இணைத்துள்ளார்.
வீடியோவில், ரிலீஸ் தேதி அறிவிப்பு என ஆங்கிலத்தில் வருகிறது. அடுத்து மறு அறிவிப்பு என்று வார்த்தைகள் மாறுகிறது. பின்பு திரையில் நயன்தாராவும் கவினும் அமர்ந்து விவாதம் நடத்தி படத்தின் மாறிவிட்ட வெளியீட்டு தேதியை வேடிக்கையாக அறிவிக்கின்றனர். அதன்படி, அடுத்த வாரத்தில் வெளியாக இருந்த படம் மீண்டும் தள்ளிப்போய் ஆக.28-ம் தேதி வெளியாக இருக்கிறது.
விஷ்ணு எடவன் இயக்கத்தில் நயன்தாரா, கவின் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ள படம் ‘ஹாய்’. இந்தப் படத்தில் பாக்யராஜ், பிரபு, ராதிகா சரத்குமார், விடிவி கணேஷ், சத்யன், ‘ஆதித்யா’ கதிர், குரேஷி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு ராஜேஷ் சுக்லா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார்.
ஜீ ஸ்டுடியோஸ், தி ரவுடி பிக்சர்ஸ், செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ சார்பில் நயன்தாரா, விக்னேஷ் சிவன், எஸ்.எஸ்.லலித்குமார் இணைந்து தயாரித்துள்ளனர்.
இப்படத்தின் பாடல் ஏற்கெனவே வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், படம் ஆகஸ்ட் 14-ல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது ரிலீஸ் தேதி ஆகஸ்ட் 28 எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.