

நம் எழுத்தாளர்களுக்கு நாம் தர வேண்டிய மரியாதை மற்றும் வாய்ப்புகளை இன்னும் அதிகமாக வழங்க வேண்டும் என்று இயக்குநர் தமிழ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் விக்ரம் பிரபு, அக்ஷய் குமார், அனுஷ்மா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘சிறை’. கடந்த ஆண்டு டிசம்பர் 25-ம் தேதி வெளியான இப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. உண்மைச் சம்பவத்தை மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டது. இதன் கதையினை ‘டாணாக்காரன்’ இயக்குநர் தமிழ் எழுதியிருந்தார். 75 நாட்களை கடந்தும் இப்போது சில திரையரங்கில் திரையிடப்பட்டு வருகிறது.
படத்தில் பணிபுரிந்த அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் நினைவு பரிசு வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துக் கொண்டனர். இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக இயக்குநர் வெற்றிமாறன் கலந்துக் கொண்டார்.
இந்த விழாவில் இயக்குநர் தமிழ் பேசும்போது, “இந்த படத்தின் வெற்றிக்கு பலரின் பெரிய பங்களிப்பு இருக்கிறது. முதலில் இதில் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி. அவர்களின் முயற்சி, அர்ப்பணிப்பு ஆகியவற்றால் தான் இந்த படம் உருவாகி வெற்றியை பெற்றுள்ளது. இப்படத்தை மக்களிடம் எடுத்துச் சென்ற பத்திரிகை ஊடக நண்பர்களுக்கு நன்றி.
இயக்குநர் சுரேஷ் சார் குறித்து நான் தனியாக நன்றி சொல்ல வேண்டும். ஒரு நல்ல கதையை மிகச் சிறப்பாக திரையில் கொண்டு வந்து, அதை மக்களுக்கு சேர்க்கும் திறன் அவருக்கு உள்ளது. ’டாணாக்காரன்’ படம் வெளியாக சுமார் நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் இந்த படம் இப்போது வெளியானபோது, அது எனக்கு புதிய உணர்வை தந்தது.
இப்படத்திற்கான பாராட்டுக்கள் எனக்கானதாக தோன்றுகிறது. இந்த நான்கு ஆண்டுகளில் பல சவால்கள் இருந்தன. சில சமயங்களில் படப்பிடிப்பு நிறுத்தப்பட வேண்டிய சூழ்நிலைகளும் வந்தன. ஆனால் அந்த எல்லா சிரமங்களையும் கடந்து இந்த படம் ரசிகர்களிடம் வந்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்திய சினிமாவே திரும்பிப் பார்க்கும் அளவுக்கு இப்போது தமிழ் சினிமா வளர்ந்து வருகிறது.
அதே நேரத்தில் மலையாள சினிமாவையும் நாம் பெரிதும் பாராட்டுகிறோம். அங்கு பல திறமையான எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். உண்மையில் இந்தியாவில் அதிகமான எழுத்தாளர்கள் இருக்கும் இடம் தமிழ்நாடு தான். அதிகமான புத்தகங்களும் இங்குதான் வெளியாகின்றன. ஆனால் நம் எழுத்தாளர்களுக்கு நாம் தர வேண்டிய மரியாதை மற்றும் வாய்ப்புகளை இன்னும் அதிகமாக வழங்க வேண்டும். எழுத்தாளர்களின் கதைகளை அதிகமாக வாசித்து, நல்ல கதைகளை திரைப்படங்களாக மாற்ற வேண்டும்.
ஏனெனில் சினிமா என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டும் அல்ல, அது லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையையும் பிரதிபலிக்கிறது. அதனால் டிஜிட்டல் மற்றும் ஓடிடி தளங்களையே மட்டும் நம்பாமல், திரையரங்குகளுக்காக உருவாகும் பெரிய படங்களையும் தொடர்ந்து செய்ய வேண்டும். ரசிகர்கள் திரையரங்குகளில் வந்து ரசிக்கும் வகையில் நல்ல திரைப்படங்களை உருவாக்க வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம்” என்று பேசினார் இயக்குநர் தமிழ்.